Thursday, December 1, 2011

சினிமாக்காரர்களோடு விலகியே இருக்கிறேன்!


'அன்னக்கொடியும் கொடி வீரனும்’ படப் பிடிப்புக்காக தேனியிலேயே தங்கி இருக்கிறார் இயக்குநர் அமீர். 'கட்டுவிரியனாக’க் கிராமத்து மனிதர்களோடு ஒன்றிவிட்ட அமீரை ஓரங்கட்டிப் பேசினேன்.
 ''கிராமத்துலயே தங்கிட்டீங்க... 'கட்டுவிரியன்’ கேரக்டருக்குக் கடுமையான ஹோம்வொர்க்கோ?''
''அதுவும்தான். ஆனா, அது மட்டும் இல்லை அடுத்து கிராமப் படம்தான் நிச்சயம் இயக்கப்போறேன். அதுக்காக நிறையப் பேரைச் சந்திக்கிறேன். நிறையப் பேசுறேன். அவங்களோட கோபம், சந்தோஷம், பிரச்னை எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியுது. ஏதோ என்கிட்ட சொன்னவுடனே அவங்க பிரச்னை தீர்ந்துடும்கிற மாதிரி மனசுவிட்டுப் பேசறாங்க. என்னால என்ன செய்ய முடியும்? மக்கள் எல்லா விஷயங்களுக்கும் யாரையாவது எதிர்பார்த்துக்கிட்டே இருக்காங்க. பிரச்னையை எதிர்த்து அவங்களேதான் போராடணும். அதை அவங்களுக்கு என்னால் முடிஞ்ச மட்டும் புரிய வெச்சுட்டு இருக்கேன். போராட்டம் இல்லாம எதுவும் சுலபமாக் கிடைக்காது. தமிழ்நாட்டு மக்களுக்குப் போராடும் குணம் இன்னும் அதிகம் தேவை!''
''விலைவாசி ஏற்றம், வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளுக்கு மத்தியில், மக்கள் எங்கே போய்ப் போராடுறது? இப்போ ஒவ்வொரு நாளும் பிழைப்பைத் தள்றதே போராட்டமால்ல இருக்கு?''
''வெளியே சுதந்திரமா உலவிட்டு இப்படிச் சொல்றீங்க? தமிழகத்தில் மொத்தம் ஒன்பது சிறைச்சாலைகள் இருக்கு. விசாரணைக் கைதி களே 10 வருஷம் ஜெயில்ல இருக்க வேண்டி இருக்கு. விசாரணை முடிந்து தீர்ப்பு சொல்லும் போது, அவருக்கு அஞ்சு வருஷம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டா, உடனே விடுதலை பண்ணிருவாங்க. ஆனா, கூடுதலா ஜெயில்ல அவர் இருந்த அஞ்சு வருஷத்தை யார் திரும்பக் கொடுப்பா? ஒருவேளை அவர் நிரபராதினு தீர்ப்பு வந்தா, அவர் இழந்த அந்த 10 வருட வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?
நம்ம மக்களுக்கு மூணு வேளை சோறும், டி.வி-யில் ஃபேவரைட் ஹீரோவோட பாட்டும் போட்டா போதும். உலகத்தில் பிரச்னையே இல்லைனு சொல்லிருவாங்க. நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கணும். எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். யாருக்கோ பிரச்னைனு வேடிக்கை பார்க்கக் கூடாது. அப்படி இருந்தா நாளைக்கு நமக்கே பிரச்னைன்னா, எல்லாரும் கைகட்டி அமைதியா வேடிக்கை பார்ப்பாங்க!''
''கோடம்பாக்கத்தில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள்னு யாருமே இல்லைபோல... ஏன்?''  
''சினிமாவோட சேர்ந்துதான் இருக்கேன்.  சினிமாக்காரர்களோடதான் விலகி இருக்கேன். இங்கே சினிமாங்கிறது வெறும் ஹீரோக்களை உருவாக்கும் இடமா மட்டுமே இருக்கு. மக்களுக்கான சினிமாங்கிறது தூரத்துல... கனவா இருக்கு. நாலு ஃபைட், ரெண்டு பாட்டுதான் மாஸ் ஹீரோக்களுக்கான அடையாளம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதான் விலகியே இருக்கேன்!''

No comments:

Post a Comment