Friday, December 3, 2010

உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே!

லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..
காட்சி:1 இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள

ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். தலை சிதறி, குலுங்கக்கூட சக்தியற்று போராளிகள் செத்து விழ... நம் ஈரக்குலையே இற்றுப்போகிறது.

காட்சி:2 சுட்டுக் கொல்லப்பட்ட பல போராளிகளின் உடல்கள் அலங்கோலமாகக்கிடக்கின்றன. விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியாவின் உடலும் அங்கே கிடக்கிறது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கும் இசைப்பிரியாவின் உடலைக் கைகாட்டும் சிங்கள அதிகாரிகள் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களின் வக்கிர உரையாடலைக் கேட்டால்... கொல்வதற்கு முன் அந்தப் பெண் போராளிகளை சிங்கள வெறி எப்படி எல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது அப்பட்டமாக நம் நெஞ்சை அறுக்கிறது.
காட்சி:3 இரு போராளிகளைக் கொன்று அவர்களின் உடல்களைத் தலை மட்டுமே வெளியே தெரியும்படி மண்ணுக்குள் நட்டுவைத்து இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் யார் எனத் தெரியக் கூடாது என்பதற் காக அவர்களின் முகம் தீயால் கருக்கப்பட்டு இருக் கிறது. நாடு கேட்டுப் போராடியவர்கள் பிணமாக நட்டுவைக்கப்பட்டு இருக்கும் காட்சி, இனவெறிக் கொடூரத்தின் உச்சபட்ச சாட்சியாய் உலுக்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே லண்டனுக்கு வர ஆயத்த மான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4’ தொலைக்காட்சி, ''ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாண மாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!'' என்று அறிவித்தது. அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4’.




ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவு களையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ''அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!'' என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.
போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதறவைக்கிறது. இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ''இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!'' என வலியுறுத்தி இருக்கிறார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.
இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜ பக்ஷே தங்கி இருந்த 'டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபக்ஷேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயார் ஆனார்கள்.
இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ''பிரிட்டனிலேயே ராஜபக்ஷே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!'' என அறிவிக்க... பதறிப்போனார் ராஜபக்ஷே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க... உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்ஷே. லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்ஷேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.
ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபக்ஷே, அனைத்து மீடியாக் களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்ஷே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க... ராஜபக்ஷே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.
எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.



"நேற்றைய தினமான டிசம்பர் 2 -ஆம் தேதி தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாளாகும். ஈழத் தமிழ் இனத்தை கருவறுக்கத் திட்டமிட்டு தன் முப்படைகளையும் ஏவி கோரமான படுகொலை செய்த கொடியவன் மகிந்த ராஜபக்ஷே இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் நட்சத்திர ஓட்டலுக்குள்ளும் தங்கிப் பதுங்க முடியாமல், வீதிக்கு வரமுடியாமல், தூதரகத்திலும் ஒளிந்து கொள்ள முடியாமல் இங்கிலாந்து அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் ஓடித் தப்பித்து இருக்கிறார்.
லண்டனில் உறைபனி கொட்டிக் கொண்டிருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தையும், அவன் முதலில் தங்கியிருந்த ஓட்டலையும் முற்றுகை போட்டிருக்கிறார்கள். கைகளில் புலிக் கொடிகளையும் பிரபாகரன் படத்தையும் ஏந்தியவாறு, "பிரித்தானிய அரசே! ராஜபக்ஷேவைக் கைது செய்!" என்றும், "பயங்கொள்ளி கோழை ராஜபக்ஷே வெளியே வா!" என்றும் வீர முழக்கத்தை விண்ணதிர எழுப்பியுள்ளனர்.
இதற்கு முதல்நாள் டிசம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமை அன்று பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரவையில் ராஜபக்ஷே உரையாற்றுவதாக செய்யப்பட்ட ஏற்பாட்டினைப் பல்கலைக் கழகப் பேரவை நிர்வாகம் இரத்து செய்தது. ‘இனப் படுகொலை செய்த ஒருவனை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேச அனுமதிப்பது நியாயம்தானா’ என்று பல்வேறு மனிதஉரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை இரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
"இங்கிலாந்தில் பேச்சுரிமை கிடையாதா?" என்று பின்னர் கேட்டுள்ளார். இலங்கைத் தீவில் பத்திரிகையாளர்களைக் கொன்று பேச்சுரிமையைப் பறித்து சர்வாதிகார வெறியாட்டம் போட்ட ராஜபக்ஷேயின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. லண்டனிலே ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டமும் கிடைத்த வெற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நெஞ்சுரத்தையும், போராடும் திறத்தையும் தமிæழ விடுதலைக்கான நம்பிக்கையையும் வழங்கி விட்டது.
தமிழர் நெஞ்சைப் பிளக்கின்ற கொடுந்துயரமான செய்தி நவம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில் வீடியோ காட்சியாகக் காட்டப்பட்டது. சிங்கள இராணுவக் கயவர்களால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் நம் இரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது.
இலங்கையில் நடைபெற்ற நீதிக்குப் புறம்பான விசாரணையின்றி இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. மன்றத்தின் விசாரணை அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்ட் ஆஃப் ஹேல்ஸ் தாங்க முடியாத அதிர்ச்சியுற்றதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு முழு உண்மையும் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்துலகப் பொது மன்னிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சாம் ஜாலிப் இதுபற்றி தெரிவிக்கையில் தங்கள் நிறுவனம் இங்கிலாந்து அரசின் காவல் துறையையும் நீதித் துறையையும் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து சாட்சியங்கள் சேகரிக்குமாறும், இது மனித இனத்துக்கே எதிரான குற்றங்கள் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட சிங்கள அரசாங்கத்தினர் சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இக்கொடுமைகளைச் செய்தார்களா என்பதையும் அறியவும் அனைத்துலக நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படவும் உரிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியதோடு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைவிட அதிக அளவில் மிக மோசமான படுகொலைகள் நடந்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்றும், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் மிக மோசமாகக் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுமைக்கு உள்ளான தமிழ்ப் பெண்களில் 27 வயதான இசைப்பிரியா என்று அழைக்கப்படும் ஷோபா எனும் தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒளிவீச்சு செய்தியாளராகவும் இருந்த இந்தப் பெண் சிங்கள இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு பின்னர் நிர்வாணமான நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இளம்பெண்கள் பலரையும் வாய்களைக் கட்டி, கைகளைக் கட்டி, கற்பழித்து பின்னர் துப்பாக்கித் தோட்டாக்களால் குதறியுள்ளனர். சிங்கள இராணுவம் தமிழ் ஈழப் பெண்களை கற்பழித்துச் சுட்டுத் தள்ளும் இன்னும் பல காட்சிகள் ஒளிபரப்ப முடியாத அளவுக்குக் கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சியில் நிர்வாணமாக ஏழு தமிழ்ப்பெண்கள் இறந்து கிடக்கிறார்கள். பிணங்களுக்குப் பக்கத்தில் இருந்து சிங்களவர்கள் கூச்சலிடும் இழிவான பேச்சுக்களால் அவர்கள் மோசமான கற்பழிக்கப்பட்ட உண்மை தெரிகிறது.
இதற்கு மத்தியில் உலகத்தையே பரபரப்பாக்கி வருகிற விக்கிலீக்ஸ் வெளியாக்கிய செய்திகளில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரீஷியா புட்னிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பிய செய்தியில் இலங்கை இராணுவமும், அதிகாரிகளும் போர்க்காலத்தில் நடத்தினார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. தன்னுடைய அரசாங்கமும் இராணுவமும் செய்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்கள் குறித்து அந்த அரசாங்கமே விசாரணை நடத்துவதற்கு முன்னுதாரணமே கிடையாது. இதனை மேலும் சிக்கலாக்கும் உண்மை என்னவென்றால் இந்தப் போர்க் குற்றங்களை நடத்தியதற்கான குற்றச்சாட்டுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயும், அவரது சகோதரர்களும், தளபதி பொன் சேகாவும் பொறுப்பாவார்கள் என்பதுதான்.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் விசாரிக்க அமைத்துள்ள மூவர் குழுவுக்கும் சேனல் 4 நிறுவனம் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தக் கொடியப் போர்க் குற்றத்துக்கு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தி வழிகாட்டும் மத்திய அரசு பெரிதும் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் பின்னால் இன்னும் மறைந்து இருக்கும் மர்மங்களும் செய்யப்பட்ட துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
லண்டனிலே ராஜபக்ஷே பேசக் கூடாது என்று பல்கலைக் கழகம் விரட்டுகிறது; இலங்கைத் தூதரகத்தை ஈழத் தமிழர்கள் முற்றுகை போட இங்கிலாந்து அரசு அனுமதிக்கிறது. ஆனால், கொலைபாதகன் ராஜபக்ஷேவை டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கருணாநிதியின் கட்சியும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு பாராட்டி விருந்து வைக்கிறது. அதனை எதிர்த்து சென்னையிலே அறப்போர் நடத்திய பழ.நெடுமாறனையும் என்னையும் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களையும் கருணாநிதி அரசு கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தது. தமிழகத்திலே உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

Thursday, December 2, 2010

அமிதாப் தந்த அட்வைஸ்!

மிழில் 'வ’ வாரிவிட்டாலும், கன்னட 'ஹுடூகா ஹுடுகி’ பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் மலர்ந்து சிவந்திருக்கிறது லேகா வாஷிங்டன் முகம்! ஒரு மழைச் சந்திப்பில், ''எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?'' என்று பேட்டி ஆரம்பித்தால், ''ஐ... ஐஸ் ஐஸ்!'' என்று கைதட்டிச் சிரிக்கிறார் டியூட்டி ஃப்ரூட்டி பியூட்டி!

''இந்தி, கன்னடத்துல எல்லாம் ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஆனா, சென்னைப் பொண்ணு இன்னும் தமிழில் தடுமாறிட்டே இருக்கீங்களே?''
''நான் என்ன பண்ணட்டும்? 'ஜெயம் கொண்டான்’ படத்துக்குப் பிறகு 'தங்கை’ கேரக்டர்களா தொடர்ந்து வந்தது. 'ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்’னு முடிவெடுத்துட்டதால், எந்தப் படமும் கமிட் ஆகலை. என் அம்மா, அப்பா யாரும் சினிமா இண்டஸ்ட்ரியில் இல்லை. அப்புறமா எனக்குன்னு மேனேஜர் யாரும் இல்லை. இது எல்லாம்கூட எனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததற்குக் காரணமா இருக்கலாம். ஆனா, இந்த ஜனவரியில் இருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன்!''
''இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறீங்களாமே?''
''ரொம்ப சந்தோஷமான 'யெஸ்’! என்னோட முதல் இந்திப் படம், 'பீட்டர் கயா கம்ஸே’ படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் 'பவர்’ படத்தில் அமிதாப்பின் மகளாகவும், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும் நடிக்கிறேன். படத்தில் எனக்கு ரெண்டு டூயட். சஞ்சய் தத், அனில் கபூர் வில்லனாக நடிக்கிறாங்க. ரொம்ப கிராண்ட் டீம், பெரிய படம் தலைவரே!''
''அமிதாப் கூட நடிச்ச அனுபவம்...''
''முதல் நாள் ஷூட்டிங்கே அமிதாப் சாரும், நானும் பேசிக்கிற மாதிரியான ஷாட். நெர்வஸா நின்னுட்டு இருந்தேன். ரொம்ப நீளமான டயலாக் வேற. என் பதற்றத்தைப் பார்த்துட்டு, அமிதாப்ஜியே தோள்ல தட்டிக் கொடுத்து ரிலாக்ஸ் பண்ணாரு. ஒவ்வொரு வார்த்தையும் எப்படிப் பேசணும்னு சொல்லிக் கொடுத்தாரு. 'ரொம்ப சீனியர்கூட நடிக்கிறோம்னு எப்பவும் பதற்றமாகாதே. எப்பவும்போல் உன் ஸ்டைலில் பண்ணு’ன்னு உற்சாகப்படுத்தினார்!''
''நீங்க ரொம்ப தைரியமான பொண்ணுன்னு சிம்பு ஒரு தடவை சொன்னாரே... அப்படியா?''
''ஓ... அப்படியா சொன்னார். தேங்க்ஸ் சிம்பு! தைரியமான பொண்ணுங்கவும், ஏதோ காளையை அடக்குவேன்னுலாம் நினைச்சுக்காதீங்க. என் வேலையை நானே செஞ்சுக்குவேன். தனியாவே வெளியே போவேன், இயக்குநர்களைச் சந்திப்பேன், அறிமுகம் இல்லாதவங்ககிட்டகூட சகஜமா பேசுவேன். ஆனா, ஒரு வேளை பேயை நேரில் பார்த்தா பயப்படுவேனோ!''
''அந்த தைரியம்தான் 'வ குவாட்டர் கட்டிங்’ படத்தை 'மோசமான படம்’னு ட்விட்டர்ல கமென்ட் பண்ண வெச்சதா?''
''ஐயோ! நான் அப்படிலாம் எதுவுமே பண்ணலை. நம்புங்கப்பா. யாரோ என் பேர்ல பொய்யான ஐ.டி-யில் இருந்து அந்த கமென்ட் பண்ணி இருக்காங்க. 'வ குவாட்டர் கட்டிங்’ படம் நான் ரொம்ப என்ஜாய் பண்ண படம். புஷ்கர், காயத்ரி, சிவான்னு அந்த டீமே செம கலகல கூட்டணி. அவங்களோட வேலை பார்த்ததே சுவாரஸ்யமான அனுபவம்தான். ஆனா, அது ஆடியன்ஸுக்குப் போய்ச் சேரலை!''

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

லிங்குசாமியின் அலுவலகம் பக்கம் எட்டிப் பார்த்தால், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன் என்று நட்சத்திர இயக்குநர்களின் கூட்டம்.
''என்ன சார், நீங்க 'வேட்டை’ ஆடப்போறீங்கன்னு தெரியும். இது என்ன புது வேட்டை?'' என்றால் சிரிக்கிறார் லிங்கு.
''என் 'வேட்டை’ வேற. அது நான் 'கிளவுட் நைன்’க்குப் பண்றேன். இவங்க மூணு பேரும் நம்ம 'திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துக்குப் படம் பண்றாங்க. இந்த நிமிஷம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களாக இருக்கும் மூணு நண்பர்களுடன் ஒரே நேரத்தில் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கே புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கு!'' - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் லிங்குசாமி.
சணல் மெத்தைக்குள் புதைந்து அமர்ந்திருக்கும் பாலாஜி சக்திவேல் ஜன்னல் அதிரச் சிரிக்கிறார். ''திருப்பதி பிரதர்ஸுக்காக இப்போ 'வழக்கு எண் 18/09’ பண்ணிட்டு இருக்கேன். ஜனவரியில் ரிலீஸ். நண்பர்களுக்குப் படம் பண்றதுதான் வசதி. இல்லேன்னா... சிலர், 'எனக்குக் காதல் மாதிரியே ஒரு படம்வேணும்’னு தான் ஆரம்பிப்பாங்க. ஒண்ணுபோலவே இன்னொண்ணையும் செய்ய... சினிமா ஒண்ணும் புரோட்டாக் கடை இல்லையே.
இங்கே படைப்பாளிகளுக்கு முதல் தேவை, சுதந்திரம். ஒரு கிரியேட்டரே தயாரிப்பாளரா இருக்கும்போது, இந்த சுதந்திரம் ரொம்ப இயல்பாக் கிடைக்குது. உண்மையைச் சொல்லணும்னா, 'வழக்கு எண் 18/09’ படத்துக்கு லிங்குசாமிகிட்ட பணம் வாங்கி, என் சொந்தப் படம் மாதிரியே எடுத்துட்டு இருக்கேன். ஒரு சின்ன கரெக்ஷன்கூட லிங்கு சொல்றது இல்லை. 100 சதவிகித சுதந்திரம். இதுதான் ஓர் இயக்குநருக்கு முதல் தேவை.
நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க... ஒரு கேனான்-5 ஸ்டில் கேமராவை வெச்சு நான் படம் எடுத்துட்டு இருக்கேன். மற்ற தயாரிப்பாளரா இருந்தா, 'இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?’ன்னு சொல்லிடுவாங்க. ஆனால் லிங்குசாமி, 'நீங்க பண்ணுங்க’ன்னார்!'' என்ற பாலாஜி சக்திவேலின் பேச்சுக்குப் புன்னகைக்கிறார் லிங்குசாமி.
''நான் 'ரன்’ முடிச்ச நேரத்தில், என்கிட்ட பாலாஜி சக்திவேல் சார் 'காதல்’ கதையைச் சொன்னார். 'எனக்கு ஒரு கேமரா இருந்தாப் போதும் லிங்கு. எங்கேயாவது கும்பகோணம் பக்கம் போயி, கிடைக்கிற முகங்களை வெச்சுப் படத்தை எடுத்துட்டு வந்துடுவேன்’னு சொன்னார். 'நானே புரொடியூஸ் பண்றேன்’னு சொன்னேன். ஆனால், பிறகு 'ஜி’ படத்தில் நான் சிக்கிக்கிட்டேன். இப்பவும் 'காதலை’ மிஸ் பண்ண வருத்தம் எனக்கு இருக்கு. அவர் 'திருப்பதி பிரதர்ஸ்’க்குப் படம் பண்றதில் நிஜமாவே எனக்குப் பெருமை. அவர் சொன்னதுபோல ஒரு கிரியேட்டருக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாத் தெரியும்.
நான் 'ஆனந்தம்’ பண்ணும்போது, என் காதுபடவே 'வானத்தைப்போல’ ரீ-மேக்னு பேசிக்குவாங்க. நான் எதையும் கண்டுக்கலை. படைப்பு மீது நாம் வெச்சிருக்கும் நம்பிக்கைதான் முக்கியம். அதனால்தான் 'மைனா’ பார்க்காமலேயே, அதைப்பற்றிக் கேள்விப்பட்டு, பிரபு சாலமனை அடுத்த படத்துக்கு புக் பண்ணினேன். வரிசையான தோல்விகளைத் தாங்கிக்கிட்டு, மறக்க முடியாத ஒரு வெற்றிப் படம் கொடுத் திருக்கிறார் பிரபு. எல்லாக் கேள்விகளுக்கும் அதான் ஒரு கிரியேட்டரின்  பதில். இன்னிக்கு அவர் தமிழ் சினிமாவின் புது ஹீரோவா இருக் கார்!'' என்றதும், பிரபு சாலமன் நிமிர்ந்து, அமர்ந்து பேசுகிறார்.
''நான் 'மைனா’ போஸ்ட் புரொடக்ஷன் முடிச்சு, வியாபாரத்துக்காகப் போராடிட்டு இருந்த சமயத்தில்தான் லிங்குசாமி சார் கூப்பிட்டு, அடுத்த படம் பண்ணச் சொன்னார். இப்போ வரை என்ன கதைன்னு எனக்கும் தெரியாது. அவரும் கேட்கலை. 'மைனா’ கதையை எந்தத் தயாரிப்பாளரிடமும் சொல்லி ஓ.கே. வாங்கி இருக்க முடியாது. ஏன்னா, அது முழுக்க முழுக்க சவுண்ட், மியூஸிக், காட்சி, மௌனம், உணர்வு என்று நகர்கிற கதை. அதை விஷுவலா எடுத்துத்தான் காட்ட முடியும். அதனால்தான் நான் 'ஷாலோம் ஸ்டுடியோ’ன்னு சொந்த கம்பெனியில் மைனாவை எடுத்தேன். இப்போ அடுத்த படத்தின் கதைக்காக வட இந்தியாவின் அறியப்படாத
பிரதேசங்கள் அத்தனைக்கும் ஒரு பயணம் போறேன். நம்ம காலடியில் தேனிக்குப் பக்கத்தில் இருந்த குரங்கணியே நமக்குப் புதுசா இருக் கிறப்போ... இவ்வளவு பெரிய இந்தியா வில் இன்னும் எவ்வளவு இடங்கள் இருக்கும்? அதைப் பின்னணியா வெச்சு அழுத்தமா ஒரு கதை சொல்லப் போறேன்!'' என்கிறார் பிரபு சாலமன்.
''இதோ மிஷ்கின்... இந்த வருடத்தின் பெஸ்ட் ஆக்டர் அவார்டு வாங்கிடுவார்போல!'' என லிங்குசாமி சொல்ல, தலை சாய்த்துச் சிரிக்கிறார் மிஷ்கின்.
''உண்மையைச் சொல்லணும் என்றால், ஓர் இயக்குநர் எல்லா நேரமும் கதையைப்பற்றியே யோசிக் கிறான். ஒரு நடிகனாக இருப்பதால், வாழ்நாள் அஞ்சு வருஷம் அதிகரிக்கும். ஆனா, ஓர் இயக்குநராக இருப்பதால் அவனது வாழ்நாள் அஞ்சு வருஷம் குறையும்.
முன்னாடி எல்லாம் ஒரு சினிமா பழசாக கொஞ்ச நாள் பிடிக்கும். இப்போ உடனுக்குடனே பழசாகிடுது. பிடிச்சு இருந்தா... மக்கள் கொண்டாடுறாங்க. பிடிக்கலைன்னா... தயவுதாட்சண்யம் இல்லாமத் தூக்கி வீசிடுறாங்க.
கதை சொல்ற பாட்டிகள் யாரும் இப்போ இல்லை. நானெல்லாம் ஒரு பாட்டிகிட்ட கதை கேட்டு 20 வருஷம் ஆச்சு. இன்னிக்கு சினிமா மட்டும்தான் கதை சொல்லிட்டு இருக்கு. ஒரு தியேட்டருக்குள் என்னை மதிச்சு ரெண்டரை மணி நேரம் உட்காரும் ரசிகனுக்கு முதலில் நான் மரியாதை பண்ணணும். தன் நேரத்தை, பணத்தைச் செலவு பண்ணி, தியேட்டருக்கு வர்ற ரசிகனால்தான் சினிமா உயிர் வாழுது. அந்த பொறுப்பு உணர்வு இயக்குநருக்கு இருக்கு. அதனால்தான் எங்களுக்கு பிரஷரும் அதிகமா இருக்கு. லிங்குசாமி மாதிரி கிரியேட்டருக்குப் படம் பண்ணும்போது, அந்த பிரஷர் சந்தோஷமா உருமாறிடும். ஆர்யாவை வெச்சு ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். இன்னும் பேர் வைக்கலை. ஆனால், கதை முழுமையா தயாரா இருக்கு. ஒரு புது சினிமா லாங்வேஜ் டிரை பண்ணிப் பார்க்கப் போறேன். நான் எழுதிய திரைக் கதை யிலேயே இதுதான் சிறந்ததுன்னு நினைக்கிறேன்!'' என்கிறார் மிஷ்கின், தன் கறுப்புக் கண்ணாடியைச் சரிசெய்தபடி.
மறுபடியும் பேசத் தொடங்கும் லிங்குசாமி, ''இதை எல்லாம் தாண்டி நாங்க எல்லோருமே நண்பர்கள். அதிலும் பாலாஜி சார், தயவு தாட்சண்யமே இல்லாமல் முகத்துக்கு நேராக குறைகளைச் சுட்டிக்காட்டுவார். 'காதல்’ படத்தில் அந்த சித்தப்பா கேரக்டருக்கு 'உண்மையான ஊனமுற்றவர் ஒருவரைப் பயன்படுத்துங்க’ன்னு நான்தான் சொன்னேன். அதுவே என் 'சண்டைக் கோழி’யில் தலைவாசல் விஜய்யை ஊனமுற்றவரா நடிக்கவெச்சிருப்பேன். 'எனக்கு மட்டும் சொன்ன? நீயும் பண்ணியிருக்கணும்ல?’ன்னு முகத்துக்கு நேராக் கேட்டார். அதான் நட்பு!  
இவங்க எல்லோரிடமும் கதைக்காக நான் பேசுவதால் நான்தான் தயாரிப்பாளராத் தெரியுறேன். உண்மையில், 'திருப்பதி பிரதர்ஸ்’ மூலமா இந்தப் படங்களைத் தயாரிக்கிறது என் தம்பி சுபாஸ் சந்திரபோஸ். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன்... மூன்று பேரும் இப்போ 'திருப்பதி பிரதர்ஸில்’ இணைஞ்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் எல்லா இயக்குநர்களையும் இதில் சேர்க்கணும் என்பதுதான் என் ஆசை!'' - லிங்குசாமியின் கண்களில் மின்னுகிறது கனவு!

திருமா மேடையில் திரும்பவும் 'திடுக்'

''காங்கிரஸைத் தோற்கடித்த பீகார் மக்களுக்கு நன்றி!''

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, 'கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற... ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை!

ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்...’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க-வின் நிலைப்பாடே இந்த அளவுக்கு மாறிய பிறகு, திருமாவளவனுக்கு காங்கிரஸை சீண்ட சொல்லவும் வேண்டுமா என்ன?!
கடந்த 26-ம் தேதி விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், 'ஈழ விடுதலைக் களம்’ என்ற தலைப்பில் திருமாவளவனின் உரைத் தொகுப்பும், தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல்களும் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டன.
பாடல்கள் அடங்கிய சி.டி-யை கவிஞர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். 'வருவார்’ என்கிற ஒற்றை வார்த்தையையே உக்கிரக் கவிதையாக்கி முழங்கிவிட்டு அறிவுமதி அமர... அடுத்தபடியாய் மைக் பிடித்தார் அமீர்.
திருமாவின் சமீப கால அரசியல் வளர்ச்சியைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசிய அமீர், ''ஈழ விவகாரத்தில் திருமாவளவனின் நிலைப்பாட்டையும் முழக்கத்தையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஒருசில நேரங்களில்... ஈழ ஆதரவுப் பாதையைவிட்டு அவர் விலகிச் செல்கிறாரோ என்கிற சந்தேகம்கூட எனக்கு ஏற்பட்டது உண்டு! ஒருவேளை அரசியல் நெளிவுசுளிவுகளுக்காக அவர் அப்படிப் போகிறாரோ என்றுகூட நினைப்பேன். ஆனால், எப்படிப் போனாலும் ஒரு கட்டத்தில் அவர் நேர்க்கோட்டில் வந்து நின்று விடுவார்!'' எனச் சொன்னபோது சிறுத்தைகளே கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள்.
அடுத்துப் பேசிய கவிஞர் இன்குலாப், காங்கிரஸையும் தி.மு.க-வையும் ஒருசேரப் போட்டுத் தாக்கினார். ''2002-ம் வருடம் நாங்கள் ஈழத்துக்குப் போய் இருந்தபோது, 'தமிழீழம் அமைந்த பிறகும் சாதியச் சர்ச்சைகள் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என புலிகளின் மூத்த நிர்வாகி களிடமே தைரியமாகக் கேள்வி கேட்டவர் திருமாவளவன். ஆனால், இன்றைக்கு ராஜ பக்ஷேவை சந்தித்தபோது ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என சிலர் திருமாவைப் பார்த்துக் கேட்கிறார்கள். எம்.பி-க்கள் குழுவின் தலைவராக ஒருவர் இருக்கும்போது, அவரை மீறி நிதானம் இழந்து பேசுவது முறையாகாது என்பதற்காகத்தான் திருமா அமைதியாக இருந்தார். ராஜபக்ஷே எகத்தாளமாகக் கேள்வி கேட்டுச் சிரித்தபோது, உடன் போனவர்களுக்கு அல்லவா அது உறைத்திருக்க வேண்டும்? திருமாவின் கௌரவத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் வராமல் அவர்கள்தானே பார்த்திருக்க வேண்டும்? கூட்டணிக்காகவோ, கூடுதல் ஸீட்டுக்காகவோ கொண்ட கொள்கையை திருமாவளவன் கைவிடுவார் என யாரும் நினைத்தீர் களேயானால்... நீங்கள் ஏமாந்து போய் விடு வீர்கள்!'' என இன்குலாப் பேசி முடிக்க, கூட்டத்தை உஷ்ணம் மேலும் பற்றிக் கொண்டது.
இந்தத் தகிப்பை முழுக்க உணர்ந்தவராக மேடை ஏறிய விடுதலைச் சிறுத்தைகள் வெளியீட்டு மையத்தின் மாநிலச் செயலாளரான ஆதிரை, ''இந்த நேரத்தில் பீகார் மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். சிங்கள அரசுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்கி ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு பீகார் மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். அதற்குத்தான் எங்களின் நன்றி!'' எனச் சொல்ல... கூட்டமே ஆரவாரித்தது.
இறுதியில் மைக் பிடித்த திருமா, ''கவிஞர் இன்குலாப், காங்கிரஸ் அரசு தமிழ் சமூகத்துக்குச் செய்த துரோ கத்தை, தீங்கை, கேட்டை, மனவலியோடு பதிவு செய்தார். அத்தகைய கேடுகளைக் கண்டிக்க நான் எப்போதும் தயங்கியது இல்லை. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய கன்னி உரையிலேயே ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்கும் காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தைப் பதிவு செய்தேன். அது இன்றைக்கும் அவைக் குறிப்பில் இருக்கிறது.
இங்கே பேசிய அமீர், நான் தி.மு.க. கூட்டணிக்குப் போனதால் நெளிவுசுளிவோடு நடப்பதாகச் சொன் னார். நாங்களாக எடுக்கும் முடிவு வேறு... எங்கள் மீது திணிக்கப்படும் முடிவுகள் வேறு என்பதை அறிவார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால், எங்களைத் 'துரோகி’ என்றவர்கள், இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணிக்கு வலியப்போய் வாய்ப்பு தேடும் அம்மையாரை நோக்கி ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? என்னை துரோகி எனச் சொன்னால், அம்மையார் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழ்த் தேசியவாதிகளை என்னவென்று சொல்வது? அம்மையார் அணியில் உடன் நின்றாலும், வைகோ எப்படி ஈழ விவகாரத்தில் நேர்மையாக இருப்பார் என்று நம்புகிறீர்களோ... அதைப்போல் எந்த அணியில் இருந்தாலும் இந்தத் திருமாவும் ஈழக் கொள்கையை விட்டுக்கொடுக்காத வேங்கையாகத்தான் இருப்பான் என்பதை மட்டும் ஏன் உங்கள் உள்ளம் ஏற்க மறுக்கிறது?'' எனச் சீறி முடித்தார்.
திருமாவின் ஒவ்வொரு வார்த்தையையும் உற்றுக் கவனிக்கும் காங்கிரஸ் தரப்பு, இதை வைத்து எப்படி யான கபடி ஆட்டம் நடத்தக் காத்திருக்கிறதோ?!

Wednesday, December 1, 2010

மட்டக்களப்பிலும் மாவீரர் திருநாள்..

 திகைத்துப் போன சிங்கள அரசு.....


''நிறைவாகும் வரை மறைவாக இருப்பதைப் போல தற்போது மறைவாக இருக்கும் மேதகு பிரபாகரன் சீக்கிரமே வெளியே வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும்!'' - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.

''ஐந்தாம் கட்டப் போரை முன்னெடுக்கத் தலைவர் பிரபாகரன் நிச்சயம் வருவார்!'' - நெடுமாறன்.
''தமிழ் ஈழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழ் ஈழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலைகொள்ளும்!'' - கவிஞர் காசி ஆனந்தன்.
மாவீரர் நாளில் மறுபடியும் தலைவர் பிரபாகரன் வருவார்... வீர வணக்க உரை ஆற்றுவார்! எனக் காத்திருந்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அடைகாக்கும் விதமாக வார்க்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் இவை.
ஆனாலும், இந்த வருட மாவீரர் நாளில், ''தலைவர் உயிரோடு இருந்தாலும் உலகச் சூழல் அவர் உதயமாவதற்கு ஏற்ற நிலையில் இல்லை!'' என தமிழ் ஈழ ஆர்வலர்கள் தங்களைத் தாங்களே தெளிவுபடுத்திக்கொண்டார்கள். அதே வேளை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மாவீரர் தின நிகழ்வுகள் உலகம் முழுக்க அனுசரிக்கப்பட்டு இருக்கின்றன. ''ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல்... அனைத்துலகத் தமிழ் மக்களும், தமிழ் ஈழ தேசம் என்கிற தேரை இழுப்போமேயானால், உலகின் எந்த சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது!'' என நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் மாவீரர் நாளில் அறிவித்தார். அதையடுத்து, இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் ராணுவக் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் மீறி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மாவீரர் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வுகள் தைரியமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது சம்பந்தமான புகைப்படங்களைப் பார்த்து சிங்கள அரசு திகைத்துப்போய் இருக்கிறது.
''மீண்டும் சுதந்திரப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண மக்கள் தயாராக இருக்கிறார்கள். புலித் தலைமையின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை மாவீரர் நாள் நிகழ்வுகள் அப்பட்டமாக்கி இருக்கின்றன!'' என்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள்.
புலித் தலைவர் பிரபாகரனோ, இல்லை அவர் தரப்பிலோ இருந்து மாவீரர் தின உரை நிகழ்த்தப்படாவிட்டாலும், புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து மாவீரர் அறிக்கை வெளியிடப்பட்டது. மாவீரர்களின் தியாகங்களை சிலிர்ப்போடு நினைவுகூர்ந்த அந்த அறிக்கையில், ''பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது போர் மீதுகொண்ட பற்றுதலுக்காகவோ எம் மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவே எம் வீரர்கள் போராடினார்கள்!'' என்பதை ஆரம்பத்திலேயே உரத்துச் சொல்லி இருக்கிறார்கள். போருக்கு முன்னும் பின்னுமான விளைவுகளைச் சொல்லி நீளும் அந்த அறிக்கையில், ''உலக வரலாறு கண்டிராத, மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும், அதன் பின்னரும் உலகம் தீர்க்கமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்களை வேதனையின் விளிம்பில் தள்ளி இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற மமதையோடு சிங்களப் பேரினவாத அரசு நடந்துகொள்ளும் முறை மனித விழுமியங்களுக்கு அப்பாற் பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது!'' என்பதைத் துயரத்தோடு உலகின் பார்வைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.  பிரபாகரன் குறித்தோ, அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்தோ மாவீரர் அறிக்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ''எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், காலத்துக்கு ஏற்ப, உலக ஒழுங்குகளுக்கு அமைய, மாற்றங்களைச் செய்து, அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்!'' என்கிற அறைகூவல் அனைத்துலகத் தமிழர்களையும் நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக் கிறது.
இதற்கிடையில் ஒருசில இணையதளங்களில், ''இலங்கையின் காடுகளில் பதுங்கி வாழும் புலிகள் ஈழ மக்களைச் சந்தித்தபோது பிரபாகரன் குறித்துப் பேசி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாகவும், உலகச் சூழலுக்குத் தக்கபடி தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்றும் ஈழ மக்களிடம் சொல்லி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதால்தான் அவர்கள் காட்டுக்குள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரமே ஈழ மக்களுக்கு அடுத்தகட்ட அறிவிப்புகளைச் சொல்வதாகவும் தகவல் பகர்ந்து இருக்கிறார்கள்!'' எனச் செய்தி வெளியிட்டுப் பரபரக்கவைத்தன.
இது குறித்துப் பேசும் தமிழ் ஈழ ஆர்வலர்கள் சிலர், ''தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா... இல்லையா... என்பது குறித்து இப்போதைக்கு பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சர்வதேச நாடுகள் புலிகளைப் பார்த்த பார்வை இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. புலிகள் மீதான தடையைத் தளர்த்த பன்னாட்டுத் தமிழர்களும் தீவிரமாக மெனக்கெட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை உடைக்க சட்டரீதியான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சட்டதிட்டங்கள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் ஈழ அரசின் சார்பில் ஸ்டாம்ப் வெளியிடும் முயற்சிகள் முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பெருகி வரும் சீன ஆதிக்கத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வரும் நேரம் இது. இந்த நேரத்தில் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிகளும் நம்பிக்கையூட்டி வருகின்றன. மாவீரர் நாளில் உலகளாவிய அளவில் உருவாகி இருக்கும் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி, இலங்கையில் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் தமிழர்களைக் காப்பாற்றவும், நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அங்கீகாரம் பெறவும் தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன. அதனால், ஈழ விடிவுக்கு நம்மால் ஆன அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்வதுதான் இப்போதைய அவசியம்! நம் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்படும் நாளில் தலைவர் குறித்த புதிருக்கும் விடை கிடைக்கப்போவது நிச்சயம்!'' என்கிறார்கள் தீர்க்கமாக!

Friday, September 3, 2010

தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்

கே.பி. பூதம் இப்போ தைக்கு ஓயாது போல!
''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப்பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியுமே வார்த்தை விமர்சனங்களைப் பாய்ச்ச ஆரம்பித்திருப்பது, தமிழீழ ஆதரவாளர் களுக்குப் பெரும் அதிர்ச்சி! கே.பி-யின் புதிய குற்றச்சாட்டுகளுக்கு வைகோவின் பதில் என்ன எனக் கேட்டோம்.
''தமிழீழம் என்பது அழிந்துபோன லட்சியம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாரே கே.பி?''
''இதைச் சொல்ல, துரோகி கே.பி-க்கு அதிகாரம் கொடுத்தது யார்? ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதில் இன்றைய அத்தியாயம் கே.பி. கொலைபாதகன் ராஜபக்ஷே அரசின் கைக் கூலியாகத் தமிழினத்துக்கு துரோகம் செய்வதையே இன்றைய தொழிலாகக்கொண்டு மாறிவிட்ட கே.பி-யிடம் இந்த வார்த்தைகளைத் தானே எதிர்பார்க்க முடியும்?
தமிழீழம் வேண்டும், வேண் டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வ நாயகத்தின் மறுவடிவமா இவர்? எத்தனை நாட்டு ராணுவம் சூழ்ந்து வந்தாலும் தமிழீழ லட்சியத்தைவிடாமல் களத்தில் நின்று போராடிய புலிப் போ ராளியா? 2002-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நானே தலைவர்' என்றும், 'பிரபாகரன் தன்னை அப்பொறுப்பு வகிக்கச் சொன்னார்' என்றும் முழுப் பொய்யைச் சொல்லி தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டவர்தான் இந்த கே.பி.! அப்படிப்பட்டவர் பேசும் பேச்சா இது?
2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தின உரையில், தலைவர் பிரபாகரன், 'பெரிய ஆயுத பலம்கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும்,எத்தனை இடையூறுகளை எதிர்கொண் டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய லட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது லட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோமாக! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!' என்று அறிவித்தார்.
உலகத்தின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் உள்ள மெல்லாம் இருக்கும் ஒரே தீர்வு... தனித் தமிழ் ஈழம்தான். கடந்த 40 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் தமிழனைக் கொன்ற ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனி தமிழனுக்கு நிம்மதி என்பது வரவே வராது. இதை நாம் சொல்லவில்லை... அமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர் சொன்னார். 'இனி இரண்டு தமிழர்கள் சந்திக்கும்போது, அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று உறுதி எடுங்கள்' என்றார் அவர். எலின் ஷான்டர் உடம்பில்கூட தமிழ் ரத்தத்துக்கான துடிப்பும் தவிப்பும் ஓடுகிறது. கே.பி. உயிர் வாழ்வதோ சிங்கள ரத்தத்தில்!''
''விடுதலைப் புலிகள், சாதாரண மக்கள் மீது வன்முறையைத் தூண்டி துன்பம் விளைவித்ததாக கே.பி. சொல்கிறாரே?''
''இது மட்டுமா சொல்கிறார் அவர்? கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர் வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்ஷேயின் சகோதரன் கோத்தபய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கேக்கும் தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக அன்போடு தன்னிடம் பேசியதாகவும், அதன் பின் தான் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கே.பி. கூறியிருக்கிறார். சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் கூறியிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்துவிட்டதாக கோத்தபயாவிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.
சிங்கள அரசால் சிங்காரித்து பூஜிக்கப்படும் கே.பி., 2009 மே 17-க்கு முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டதாகக் கூறிய கே.பி., விடுதலைப் புலிகளைப்பற்றியும், உயிர் கொடுத்துப் போராடிய போராளிகள்பற்றியும், எவருக்கும் நடுங்காத அதன் தலைவர்பற்றியும் உயர்வாகப் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
புலிகள், எப்போதேனும் அப்பாவி சிங்கள மக்களை தேடிப்பிடித்துக் கொன்றதுண்டா? பாலியல் துன்பம் இழைத்ததுண்டா? அவர்கள் வாழும் இடத்தில் குண்டு போட்டதுண்டா? அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் கே.பி.? ஆனால், அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொன்றதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்கள் உண்டே? காட்டுக்குள் வழி தவறி வந்த சிங்களப் பெண் ஒருத்தியை தமிழர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கேள்விப்பட்டதும், அதற்கு மிகக் கடுமையான தண்டனை விதித்தவர் பிரபாகரன். புலிகளால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள ராணுவ வீரர்களுக்கு அவர்கள் நாட்டு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் பிரபாகரன். பிணைக் கைதியாகப் பிடித்துவைக்கப்பட்ட சிங்கள இளைஞன் ஒருவனது மனைவி அவனைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தபோது உடனே அனுமதி கொடுத்தது புலிகளது இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தைத்தான் கே.பி. கொச்சைப் படுத்துகிறார்.
எட்டு தமிழ் இளைஞர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அம்மணக் கோலத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, இழுத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் எட்டி உதைத்து மிதித்து மண்டியிட்டு உட்காரவைத்து எந்திரத் துப்பாக்கியால் பின்னந் தலையில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கச் செய்து சாகடித்தார்களே..! இதை இணைய தளங்களில், சேனல் 4 தொலைக்காட்சியில் காண்பித்தார்களே. இதற்கு என்ன பதில் இருக்கிறது?
சிங்களவன் வெறிகொண்டு திலீபனின் நினைவிடத்தை உடைத்தான். மாவீரர் துயிலும் இடங்கள் உடைக்கப்பட்டன. வாழ்க்கையின் வசந்த காலத்தில் சுகங்களைத் தேடாமல் மண்ணுக்காக மடிந்த எம் இளைஞர்களும், இளம் பெண்பிள்ளைகளும் கல்லறைக்குள்கூட நிம்மதியாய் கிடக்கக் கூடாது என்பதற்காக, எல்லாக் கல்லறைகளையும் உடைத்தானே... அதைப்பற்றி தனது பேட்டியில் ஒரு சொல் சொல்ல, கே.பி-க்கு முதுகெலும்பு உண்டா? 'ஆபரேஷன் எல்லாளனில் பங்கேற்ற கரும்புலி வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, சிங்களத் தெருவில் ஊர்வலம்விட்டதும், பெண் போராளிகளைப் பாலியல் வல்லுறவு செய்து அந்தப் படங்களை வெளியில்விட்டதும் கே.பி. கண்ணுக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தெரியவில்லையா?''
''இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக கே.பி. சொல்கிறாரே?''
''எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என்பதை வேறு வார்த்தையில் கேட்டிருக்கிறார் கே.பி. ராஜபக்ஷேயின் ராஜ்யத்தில் தனது மிச்ச நாட்களைக் கழிக்க வேண்டிய நேரத்தில் கே.பி-யால் இப்படித்தான் பேச முடியும்.
அயர்லாந்து நாட்டின் தலைநகராகிய டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின்படி, ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளி. போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை மீறியவர் என்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 2005-ம் ஆண்டு முதல் 2009 வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், கடைசி ஐந்து மாதங்களில் நடத்திய கொடூரங்களையும்... ஆயிரம் கே.பி-கள் பேட்டிகள் கொடுத்தாலும் மறைக்க முடியாது. வெள்ளைக் கொடியை ஏந்தி வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட போராளிகளை பட்டப்பகலில் சுட்டுப் பொசுக்கிய பாவத்துக்கு, பத்திரிகையாளர் மேரி கெல்வின் என்ற ஒரு சாட்சியே போதும். மருத்துவமனைகள் மீது, பள்ளிகள் மீது, குடியிருப்புகள் மீது குண்டுகள் போட்டதை சேட்டிலைட் படங்கள் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. உலகம் தடை செய்த ஆயுதங்கள், குண்டுகள் அனைத்தும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவையும் ஒரு துரோகியின் பேட்டியால் மறைக்கப் பார்க்கிறார்கள்.
ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளில் ஓங்கி வருகிறது. அதைத் திசை திருப்பவே இதுபோன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன!''

Thursday, September 2, 2010

'குவார்ட்டர் கட்டிங்'... ஒரு காவியம் - கவிஞர் சிவா!

சைத்தான் கே பச்சா...
மனசு வெச்சா...
சவூதிக்கே நான் பாட்ஷா...
ஷேக் ஷேக் ஷேக்...'
- இந்தப் பாட்டுதான் இனிமே சிட்டி பட்டினு எட்டுத் திக்கிலும் ஒலிக்கப்போகுது. 'குவார்ட்டர் கட்டிங்' படத்துக்காக இவ்வளவு அழகா, ரசனையாப் பாட்டு எழுதின கவிஞர் யார் தெரியுமா? உங்கள் கவிஞர் சிவா!" - தன் நெஞ்சைத் தொட்டு ஆனந்தமாகச் சிரிக்கிறார் சிவா.
" 'குவார்ட்டர் கட்டிங்'னு இங்கிலீஷ்ல டைட்டில் வெச்சிருக்கீங்களே?"
"அதான் அதுக்கு மேலே 'வ'ன்னு போட்டிருக்கோமே... அதுதான் டைட்டில். எண்களில் 1/4 என்பதற்கான தமிழ் எழுத்து 'வ'. 'குவார்ட்டர் கட்டிங்'கிறது கேப்ஷன். டைட்டில் தமிழோ, இங்கிலீஷோ என்னைப் பொறுத்தவரைக்கும் 'குவார்ட்டர் கட்டிங்'... ஒரு காவியம். இந்தப் படத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும்தேவையான மெசேஜ் சொல்லியிருக்கோம். அது என்னன்னா, 'நீங்க பொறுமையா இருந்தா, நீங்கநினைக்கிறதைவிட அதிகமாவே கிடைக்கும்.' பொறுமையா இருந்தா, ஒரு கேக்குக்கு ஆசைப்பட்டவருக்கு ஒரு பேக்கரியே கிடைக்கலாம். சுமாரான ஃபிகருக்கு ஆசைப்பட்டவருக்கு, சொப்பன சுந்தரி கிடைக்கலாம். கட்டிங் ஆசைப்பட்டவருக்கு ஃபுல் பாட்டிலே கிடைக்கலாம். மொத்தத்துல, பொறுமை... எருமையை விடப் பெருசு!"

"இந்தப் படத்துக்கு எப்படித் தயாரானீங்க?"
"இது ஒரு ராத்திரியில் நடக்கிற கதை. எப்படியும் மூணு மாசம் தூங்கவிட மாட்டாங்கன்னு தெரியும். அதனால, பகல்ல தூங்கி, ராத்திரி முழுக்க இங்கிலீஷ் சேனல்கள் பார்த்துட்டு இருந்தேன். இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரிகிட்ட 'இந்தப் படத்துக்காக சிக்ஸ்பேக் வைக்கவா?'ன்னு கேட்டேன். 'தயவுசெஞ்சு வேணாம்'னு கையெடுத்துக் கும்பிட்டாங்க. 'ஹேர் ஸ்டைல் மாத்தணுமா?'ன்னு கேட்டேன். 'நீ வெச்சிருக்கிறதுக்குப் பேரு ஹேர் ஸ்டைலா'ன்னு திட்டிட்டாங்க. 'காஸ்ட்யூம்ஸ் எப்படி டிசைன் பண்ணணும்?'னு கேட்டேன். 'உனக்கு படத்தில் ஒரே ஒரு பேன்ட்- ஷர்ட்தான்'னு சொல்லிட் டாங்க. படத்துக்காக கோவைத் தமிழ் கத்துக்கிட்டுப் பேசியிருக்கேன். அது மரியாதையான பாஷைங்கிறதால கோபப்பட்டு திட்டுற ஸீன்களில் மட்டும் சென்னைத் தமிழ் பேசியிருக்கேன். ஒரு வேளை நான் பேசினது கோவைத் தமிழ் மாதிரி இல்லைன்னா, கோவை நண்பர்கள் திட்டி கால் பண்ணாம, பொறுமையா எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பினாப் போதும். இப்படி இந்தப் படத்துக் காக என்னை நானே பலவிதங்களில் அர்ப்பணிச் சிருக்கேன். என் கேரக்டர் பேசப்பட்டதுன்னா, அந்தப் பெருமை எல்லாமே எனக்கு மட்டும் தான்!"
"லேகா வாஷிங்டனோட கெமிஸ்ட்ரி வொர்க் - அவுட் ஆச்சா?"
"கதைப்படி அவங்க மக்கு ஸ்டூடன்ட். இருந்தாலும், நாங்க கெமிஸ்ட்ரியில் ஹிஸ்ட்ரி படைச்சிருக்கோம். கதையில் லேகா என் மேல அன்பா இருப்பாங்க. ஆனா, ஷூட்டிங் முடிஞ்சதும் சண்டை போட ஆரம்பிச்சிடுவாங்க. லேகாவின் கோபத்துக்குக் காரணம் தெரியாமலேயே இருந்தது. படத்தில் பல ஸீன்களில் நான் லேகாவைவிட ரொம்ப ரொம்ப அழகா இருந்தேன். எனக்கே என்னைப் பிடிச்சுப் போச்சு. அதனாலேயே லேகாவுக்கு என்னைப் பிடிக்காமப்போயிருச்சு. கேமராமேன் நீரவ்ஷாகிட்ட போய், 'எப்படி சார் என்னை எல்லாம் அழகா காட்ட முடியுது?'ன்னு கேட்டேன். 'இதுல நான் பண்றதுக்கு எதுவுமே இல்லசிவா. கேமரா உள்ளதை உள்ளபடி காட்டுது. அவ்வளவுதான்!'ன்னு சொன்னார். இந்த நேர்மை தான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கு."
"உங்க ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புற செய்தி..?"
" 'குவார்ட்டர் கட்டிங்' ரிலீஸ் அன்னிக்கு யாரும் எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம். பாலபிஷேகம் பண்ண வேண்டாம். வழக்கம்போல 'அப்படித்தான் பண்ணுவோம்'னு நீங்க ஆசைப்பட்டு அடம்பிடிச்சா, என்னால என்ன பண்ண முடியும். ஒரே ஒரு வேண்டுகோள்தான்... என்னோட கட்-அவுட்டில் பாலுக் குப் பதிலா ரோஸ் மில்க் ஊத்துங்க. ஏன்னா, எனக்கு ரோஸ்மில்க்தான் பிடிக்கும்!"

Tuesday, August 31, 2010

இரண்டாவது ஆண்டாக இணைந்த 80களின் நட்சத்திரங்கள்!

கடந்த ஆண்டைப் போலவே, 80களில் முன்னணி நட்சத்திரங்களாக வெள்ளித்திரையில் வலம் வந்த நடிகர் - நடிகைகள் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இம்முறையும் இந்த "எவர்க்ரீன் 80's" விருந்தை நடிகை சுகாசினி மணிரத்னம், லிசா பிரியதர்ஷன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் பிரியதர்ஷன்-லிசி தம்பதிகளின் வீட்டில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், வழக்கமான உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், சரத் குமார் மற்றும் அர்ஜூன் ஆகியோர் இம்முறை புதிதாக இணைந்தவர்கள். இதில், சரத் குமார் சிறப்பு விருந்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன், அர்ஜூன், பிரதாப்போத்தன், பானுசந்தர், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்ரீஷ், நடிகைகள் லிசி, ராதிகா, சுஹாசினி, ரேவதி, ராதா, அம்பிகா, பூர்ணிமா, நதியா, ஷோபனா, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுமலதா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இந்தச் சந்திப்பின் போது, ஒருவரையொருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியையும் நினைவையும் பகிர்ந்துகொண்டனர்.
இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இந்த விருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடிய விடிய மகிழ்வுடன் அரங்கேறியது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென் தமிழகத்தின் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நட்பு பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்க அம்சம் என்றனர், இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகள்!

Monday, August 30, 2010

ஜெ. மீது பாயும் குஷ்பு

'இனி அதிரடி பிரசார பீரங்கி இவர்தான்!' என தி.மு.க-வில் குஷ்பு இணைந்தபோது எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், அறிமுகக் கூட்டத்துக்கு அப்புறம் குஷ்பு பெரிதாக ஏதும் பேசவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லையா... அவர் காரசார அரசியல் பேச விரும்பவில்லையா என்பது விளங்காத ஒன்றாகவே இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தொடர்ந்து தங்கள் தலைவரைக் காய்ச்சி எடுப்பது... தி.மு.க. தலைமையை யோசிக்கவைத்தது. இருவருக்கும் பதிலடி கொடுக்க... சீக்கிரமே குஷ்புவை சுதந்திரமாகக் களத்தில் இறக்கிவிட தி.மு.க. தரப்பு தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஜூ.வி-யிடம் இங்கே பேசுகிறார் குஷ்பு -
''கோவை, திருச்சி என ஜெயலலிதா செல்கிற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே..?''
''உண்மைதான்... ஆனால், அது மக்கள் கூட்டம் அல்ல. இன்னமும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அ.தி.மு.க-வில் அல்லாடிக்கொண்டு இருக்கும் அனைத்து மாவட்டத் தொண்டர்களின் கூட்டம் அது. கடந்த தேர்தலில் தோற்றவுடன் தூக்கம், ஓய்வு என்று அறையைவிட்டு வெளியே வராமல் இருந்த எதிர்க் கட்சித் தலைவர், இப்போதுதான் வெளியே தலை காட்டத் தொடங்கி இருக்கிறார். அவரை நேரில் பார்த்தே நாலரை வருடங்களாகிவிட்டன. அதனால், அவரை வேடிக்கை பார்க்க அவருடையகட்சிக்காரர்கள் திரளத்தானே செய்வார்கள்! 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது' என்கிறார் அவர். ஆனால், அது எதற்கான கவுன்ட் டவுன் தெரியுமா? விரலைச் சுண்டியவர் அடியோடு விழப்போகிறார் என்பதற்கான கவுன்ட் டவுன் தான் இது!''
''திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மகள் செல்வி உள்பட குடும்ப உறுப்பினர்களையும் ஜெயலலிதா தாக்கி இருக்கிறாரே?''
''தலைவருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் தான் இங்கே போட்டி! அப்படி இருக்க தலைவரின் குடும்ப உறுப்பினர்களை வம்புக்கு இழுப்பது கொஞ்சமும் பண்பு இல்லை. பண்பாடு, கலாசாரம் என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகத்தில், மூத்தோர்களை மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அந்த விதத்தில் தலைவர் கலை ஞரின் வயதையாவது மனதில்கொண்டு பேசி இருக்க வேண்டும். ஆக்கபூர்வ வாதங்களை வைப்பதற்கு பதிலாக, அடுப்படிக்குள் நுழையலாமா?
எங்கள் தரப்பிலும் இந்த அளவுக்குக் கீழே இறங்கி வந்து பேச எவ்வளவு நேரமாகிவிடும்? ஆனால், தலைவர் கலைஞர் எங்களைப் அப்படிப் பழக்கவில்லை. சமீபத்தில் நடந்த பேச்சாளர்கள் கூட்டத்தில்கூட, 'எதிரிகளையும் நாகரிகமாகப் பேசுங்கள்' என்றுதான் சொல்லி இருக்கிறார்!''
''செல்வியின் பெங்களூரு வீட்டுக்கு ஓய்வு என்கிற பெயரில் கருணாநிதிசெல்வதே கர்நாடக அரசுடன் பிசினஸ் குறித்து பேசுவதற் காகத்தான் என்கிறாரே ஜெயலலிதா?''
''மகளின் வீட்டுக்கு ஓய்வெடுக்கப் போகா மல், அடுத்தவர் வீட்டுக்கா போக முடியும்? இது என்ன பேச்சு? மாநிலத்துக்கே தலைவராக இருந்தாலும், மகளுக்கு தந்தை என்கிற கடமையை அவர் கைவிட முடியுமா என்ன? பொறுப்பான எதிர்க் கட்சித் தலைவராக இருந்து போராட வேண்டிய அவர், எந்நேரமும் கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களில் தங்கி இருந்தாரே... அதை என்ன சொல்வதாம்? இன்றைக்கு இருக்கும் நவீன யுகத்தில், யாருக்கும் தெரியாமல் எதையாவது பேச வேண்டும் என்றால்... அதை நேரில் போய்ப் பார்த்துத்தான் பேச வேண்டும் என்கிற தேவை இல்லை. இதுகூடத் தெரியாமல் மகள் வீட்டுக்குப் போனதைவைத்து, கர்நாடக அரசுடன் கூட்டு எனக் கதை கட்டுவது கணக்கிலும் அடங்காத அவதூறு. எதையாவது பேசி மக்களை நம்பவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லது!''
''காய்கறி தொடங்கி மளிகை சாமான்கள் வரை விலைவாசி உயர்ந்துவிட்டதாக மாஜி முதல்வர் பேசும் பேச்சில் நியாயம் உள்ளதாகத்தானே தெரிகிறது?''
''அண்மையில் ஒரு புத்தகம் படித்தேன். அதில் ஒரு பழமொழி... 'யானை கட்டிப் போரடிச்சாலும், பானை சட்டி சரியில்லை!'ன்னு கிராமங்களில் சொல்வார்களாம். எத்தனையோ ஆக்கபூர்வ முன்னேற்றங்களைத் தமிழகம் செய்தாலும், தவிர்க்க முடியாத சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். விலைவாசி உயர்வு உலகளாவிய விஷயம். நடுத்தரக் குடிமகளாக நானும் கடைக்கு நேரடியாகப் போய் காய்கறி வாங்குகிற ஆள்தான். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழகத்தில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை எவ்வளவோ குறைவு. சென்னையில் மழைக் காலத்தில் டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது என்றுகூட அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்துகிறார்கள். மழையை சமாளிக்க முடியாமல் தலைநகர் டெல்லியே தடுமாறுகிறது. சீனாவில் மழைக் காலத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 10 நாட்களுக்கும் மேலாகிறது. இத்தகைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகம் எந்த அளவுக்கு வளமாக இருக்கிறது என்பது புரியும். தி.மு.க-வைக் குற்றம்சாட்டும் குறிக்கோளுடன் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் புரியாது!''
''அடுத்தபடியாக மதுரையிலும் சக்தி மிகுந்த கூட்டத்தைத் திரட்ட ஜெ. தயாராகி வருகிறாரே?''
''மதுரையில் என்ன... அவர் மலேசியாவுக்கு வேண்டுமானாலும் போய் போராட்டம் நடத்தட்டும். எங்களைப் பொறுத்தமட்டில் அவருடைய கூட்டத்தை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோமே தவிர, போட்டியாகப் பார்க்க வில்லை. மதுரையில் அவர் எத்தகைய கூட் டத்தைக் கூட்டினாலும், அதனால் தி.மு.க-வுக்குத் துரும்புகூட பாதிக்காது!''
''தி.மு.க-வின் பிரசார சக்தியாகப் பேசப்பட்ட நீங்கள், இதுகாலம் வரை பெரிதாக ஏதும் தடாலடி காட்டவில்லையே... நீங்களும் கோஷ்டிப் பூசலில் சிக்கிவிட்டீர்களா?''
(சிரிக்கிறார்) ''அப்படி எல்லாம் ஏதும் இல்லை... நான் தி.மு.க-வில் அடிப்படைத் தொண்டராகத்தானே இணைந்தேன். பெரிய தலைவராகவோ, மாபெரும் கூட்டத்தோடோ நான் கட்சிக்குள் வரவில்லை. அதனால், ஈகோ, மன வருத்தம் என எந்தப் பிரச்னைகளும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நன்றாகப் பேசக்கூடிய ஆள். இப்போது தடாலடியாகப் பேச வேண்டிய இக்கட்டோ கட்டாயமோ இல்லை! நான் இப்போது தேர்தல் களத்தில் பேசுவதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன். கட்சியின் வரலாறுகளில் தொடங்கி தலைவரது போராட்ட வாழ்க்கை வரை அனைத்தையும் எடுத்துப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கழக ஆட்சியின் சாதனைகளையும் படித்து வருகிறேன். எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. தலைவர் செய்த நல்ல காரியங்களைச் சொன்னாலே போதும்!''
''எதிர்க் கட்சியினர் திட்டுவது இருக்கட்டும்... உங்கள் கூட்டணியில் இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்களே?''
''கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளைப் பேசுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதே நேரம் சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காகத் தலைவரைக் குறிவைத்து சிலர் பேசுவதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. ஆனாலும், தலைவருக்காகவே அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதி யாக இருக்கிறோம்!''

Saturday, August 28, 2010

கேப்டனுக்கு ஸ்வீட் ஊட்டிய இளங்கோவன்!

'அரசியல் அரங்கில் அடுத்தது என்ன?' என ஆயிரம் டிகிரி அனலைக் கிளப்பிவிட்டு இருக்கிறது ஆகஸ்ட் 25. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளான அன்று, யாருமே எதிர்பாராத வகையில் வீடு தேடி சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கேப்டனைக் கட்டித் தழுவி வாழ்த்துச் சொல்ல... கூட்டணியில் குபுகுபு! எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதை நேரடியாகவும் பூடகமாகவும் எதிர்த்து வருபவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன். ஒரே கூட்டணியில் இருந்துகொண்டே, தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் அவர் அளவுக்கு யாரும் விமர்சிப்பது கிடையாது. 'வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - தே.மு.தி.க. கூட்டணி அமையும். தொகுதி உடன்பாடே முடிந்து விட்டது' என்ற பரபரப்பு பல பக்கங்களிலும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில்தான், இந்த பிறந்தநாள் சந்திப்பு!
'இலங்கைத் தமிழர் பிரச்னை முடியும் வரை எனது பிறந்த நாளைக் கொண்டாட மாட்டேன்' என்று அறிவித்து, அதை மீறாமல் கடைப்பிடித்தும் வந்தவர் விஜய்காந்த். தனது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினம்' என அறிவித்து, ஏழைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். கடந்த புதன்கிழமை விஜயகாந்த்தின் 58-வது பிறந்த நாள். இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தாலும் அதிகமாக வாழ்த்து மழை பொழிந்தவர்கள் காங்கிரஸ்தலைவர்கள்தான். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள்அமைச்சர் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகிய அனைவருமே விஜயகாந்த்துக்கு போனில் வாழ்த்துச் சொன்னார்கள்.
பிறந்த நாளன்று விஜயகாந்த், புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்டு, குடும்பத்தினருடன் ஸ்பெஷலாக கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு இருக்கையில்... புன்னகையும் பொக்கேவுமாக வந்து இறங்கினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அங்கு இருந்த தே.மு.தி.க-வினருக்கு இன்ப அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்.
சரசரவென நேராக வீட்டினுள் நுழைந்த இளங்கோவன், பொன்னாடையை விஜயகாந்த்துக்குப் போர்த்தி, 'நூறாண்டு வாழ வாழ்த்துகள்' என அன்பு மழை பொழிந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத விஜயகாந்த், 'இன்னிக்கு இதான்பத்திரிகையின் முக்கியச் செய்தி' என்று முகம்கொள்ளாப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். சுதீஷ் பக்கம் திரும்பிய இளங்கோவன், 'நல்லா இருக்கீங்களா சுதீஷ்... உங்ககூட எனக்கு பெருசாப் பழக்கம் இல்லை!'' என்று உருக... 'நானும் உங்க பையனும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்' என்று பதில் அன்பு காட்டினார் சுதீஷ். விஜயகாந்த்தும், இளங்கோவனும் சில நிமிடங்கள் தனியாக சோபாவில் அமர்ந்து பேசியதும், அடுத்து அங்கே நடந்த விஷயங்களும் அர்த்தம் பொதிந்தவை!
தனது கையில் ஸ்வீட்டை எடுத்த ஈ.வி.கே.எஸ், அதை விஜயகாந்த் வாயில் பாசத்தோடு ஊட்ட... மொத்த கேமராக்களும் பளிச். இன்னொரு ஸ்வீட்டை எடுத்த இளங்கோவன் அங்கு இருந்த பண்ருட்டியார் பக்கம் திரும்பி, 'நீங்க பாதி... நான் பாதி' என்றபடியே பாதி ஸ்வீட்டை அவரிடம் நீட்ட... ''எல்லாத்துலயும் இதேபோல பாதிப் பாதி கொடுப்பீங்களா?'' என டைமிங்காகக் கேட்டார் பண்ருட்டி. பலத்த சிரிப்பில் அந்த ஹாலே நனைந்தது.
''விஜயகாந்த் நல்ல தலைவர். அவர் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார்!'' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டே அங்கிருந்து கிளம் பினார் இளங்கோவன்.
அவரை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது... ''நானும் விஜயகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் இருந்ததால், நேரில் வாழ்த்த முடியவில்லை. இந்தமுறை நேரில் வாழ்த்தினேன். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் ஸ்வீட் கொடுக்கும்போது, பண்ருட்டியார் ஜாலியாகத்தான் அப்படி சொன்னார். மற்றபடி கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பது காங்கிரஸ் தலைமைதான். அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும்!'' என்றார் அழுத்தமாக.
விஜயகாந்த் பிறந்த நாளன்று திடீரென வருகை புரிந்து அத்தனை பேருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
மதியம் 1.30 மணிக்கு வந்த ரஜினி, சுமார் 25 நிமிடங்கள் விஜயகாந்த்தின் வீட்டில் இருந்தார். மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழையும் அளித்தார். 'எந்திரன்', 'விருதகிரி' படம் பற்றிப் பரஸ்பரம் பேச்சு ஓடியது. பட்டும்படாமல் அரசியல் பேசிய ரஜினி, 'உங்க அரசியல் முயற்சிகள் ஜெயிக்கணும்... வெல்டன் விஜி!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 'எங்கள் தலைவரை மனதார வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் பிறந்த நாளாகப் பார்த்து ரஜினி வந்திருந்தார். கல்யாணப் பத்திரிகை கொடுப்பது மட்டுமே நோக்கமாக இருந்தால், முந்திய நாளோ... அடுத்த நாளோகூட வந்திருப்பாரே!'' என்று பெருமிதத்தில் மிதக்கிறது தே.மு.தி.க.!

Wednesday, August 25, 2010

போதையா, பேதையா? 'கோகைன்' புயலில் த்ரிஷா

தெலுங்கானா பிரச்னை, ஜகன் மோகன் ரெட்டி யாத்திரை என ஆந்திர அனல்
அரசியலின் புதிய வடிவம், போதைப் பொருள்!
நைஜீரிய வாலிபர்கள் சிலர் ஆந்திராவின் அரசியல், சினிமா பிரபலங்களுக்கு 'கோகைன்' என்ற போதைப் பொருளை சப்ளை செய்ததாக எழுந்துள்ள பரபரப்புதான் தெலுங்கு தேசத்தின் தற்போதைய தலைப்புச் செய்தி. இந்தப் பட்டியலில் த்ரிஷாவின் பெயரும் இருப்பதாகக் கிளம்பிய தகவல், கோலிவுட் எங்கும் அனல் பேச்சுகளைக் கிளப்பி இருக்கிறது.
ஸ்டீஃபன் ரவீந்திரா என்ற ஆந்திர போலீஸ் டெபுடி கமிஷனர், வி.ஐ.பி-க்களின் ஏரியாவான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சோதனை நடத்தி இருக்கிறார். ஒரு நைஜீரியப் பார்ட்டி, கோகைன் போதைப் பொருளு டன் நூலிழையில் தப்பிவிட, தொடங்கியது அதிரடிச் சோதனை. கடந்த 18-ம் தேதி இரவு போலீஸ் விரித்த வலையில் விக்டர் என்ற நைஜீரிய வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 45 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் இருந்து கோகைனை வாங்கிய தாக ரகுபாபு, பரத்ராஜ் என்ற இருவரையும் வளைத்தது போலீஸ். இருவரும் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் என்றதும், விவகாரம் பற்றிக்கொண்டது.
இருவரிடம் இருந்தும் 8 கிராம் கோகைன் கைப்பற்றப்பட்ட உடனேயே 'திரைத் துறைக்கும் போதைக் கும்பலுக்கும் தொடர்பு' என்ற ஸ்க்ரோலிங் செய்திகள் ஓடத் தொடங்கின. ரகுபாபு ஒரு படத்தில் ஹீரோவாகவும், சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் நடித்தவர். பரத்வாஜ், 'பெத்தபாபு' என்ற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சிக்கிய விக்டரை போலீஸ் நொங்கெடுக்க, வரிசையாக வந்து சிக்கின அடுத்தடுத்த அதிர்ச்சிகள். அவரது செல்போன் ஆராயப்பட, அதில் சினிமா, அரசியல், வர்த்தகத் துறை பிரபலங்கள் பலரின் பெயர்கள் இருந்திருக்கின்றன. அதில் 10 நம்பர்களுக்கு விக்டர் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. அதில் ஆறு பேர் நடிகை கள் என்று போலீஸ் சொன்னதாகச் சொல்கிறது ஆந்திர மீடியா. இதற்கிடையில், காம்னா ஜெத்மலானி, சார்மி, பூனம் கவுர், மது ஷாலினி ஆகிய நடிகைகளையும் இதில் இழுத்த தோடு நிற்காமல், நடிகை த்ரிஷாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று வதந்தி நியூஸ் வாசித்தது தெலுங்கு மீடியா.
பார்கள் மற்றும் பப்களில்தான் பிரபலங்களுக்கு கோகைன் பந்திவைக்கப்பட்டதாக விக்டர் விவரித்து இருக்கிறான். பஞ்சாரா ஹில்ஸில் இருக்கும் பார்கள் சினிமா வி.ஐ.பி-க்களுக்கு ஃபேவரைட் ஸ்பாட். இங்குதான் விக்டருக்கு சினிமா பிரபலங்களுடன் நட்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சந் தேகிக்கிறது போலீஸ். இதற்கிடையில், அசாருதீனின் மகன் உட்பட பலரும் செய்திகளில் அடிபட்டு இருந்தாலும், த்ரிஷாவும் எம்.பி. ஒருவரின் மகனும் தாமாகவே முன்வந்து இந்தச் செய்திகளை மறுத்து உள்ளனர்.
"போதைப் பொருள் கும்பலின் வாடிக்கையாளர்களைவிட, அந்த நைஜீரியக் கும்பலைக் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் சவால். இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் உகாண்டா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க மாணவர்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறோம். அவர்களைக் கண்காணித்து வருகிறோம். ஏதாவது துப்பு கிடைக்கலாம் என்பதற்காகவே விக்டரின் செல்போனை ஆய்வு செய்தோம். அதில் பிரபலங்களின் பெயர்கள் இருந்தது உண்மை. அவர்களுக்கு உள்ள தொடர்புபற்றி தெளிவாக விசாரித்த பிறகே கூற முடியும்" என்கிறது போலீஸ்.
இந்த விவகாரம் கேள்விப்பட்டு கொதித்துப்போய் உள்ள த்ரிஷா, செல்போனில் தொடர்புகொள்ளும் தெலுங்கு மீடியாக்களிடம் கோபமாகக் கொந்தளிக்கிறார். கொடைக்கானலில் இருந்த த்ரிஷாவிடம் நாமும் பேசினோம்.
"இந்த விவகாரத்தில் எதற்காக என்னை இழுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிடிபட்டவரின் செல்போனில் என் போன் நம்பர் இருந்ததாகவும், அதனால், த்ரிஷாவை போலீஸ் விசாரிக்கப்போவதாகவும் முதலில் ஒரு தொலைக்காட்சிதான் செய்தி வெளியிட்டது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர உள்ளேன். ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருடன் உடனடியாக போனில் பேசி னேன். கிசுகிசு படித்துச் சிரித்துவிட்டுப் போவ தைப்போல் இந்த விவகாரத்தை விட முடியாது. இது என் கேரக்டரோடு தொடர்பு உடையது. நான் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறேன். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாமா? இந்த விஷயத்தை நான் சும்மா விடுவ தாக இல்லை. அதேபோல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் நான் ஓடிவிட மாட்டேன். ஆந்திர திரை உலகம் எனக்கு மிகச் சிறந்த வாய்ப்பு களையும் வெற்றிகளையும் கொடுத்திருக் கிறது. தொடர்ந்து, தெலுங்குப் படங் களில் நடிப்பேன்" என்று கோபம் தணி யாதவராகப் பேசுகிறார் த்ரிஷா.
ஆந்திர அரசியல் மட்டும் அல்ல... சினிமாவும் ஸோ ஹாட்!

'வராமல் போன ஹெலிகாப்டர்!' காத்திருந்த பிரபாகரன் குடும்பம் '

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் தினந்தோறும் அவிழ்த்துவிடும் கதைகள்
இலங்கை விவகாரத்தின் திகில் நிறைந்த பக்கங்களை மீண்டும் புரட்டிப் பார்ப்பதாக இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு கே.பி. அளித்திருக்கும் பேட்டி!
டி.பி.எஸ்.ஜெயராஜ்... 56 வயதான பத்திரிகையாளர். தமிழீழப் போராட்டம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதி உலகளாவ அதிகம் கவனம் ஈர்த்தவர். இப்போது கே.பி-யிடம் மிக நீண்ட பேட்டி எடுத்துள்ளார் டி.பி.எஸ்.ஜெயராஜ். 2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு, 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்' எனத் தன்னை அறிவித்துக்கொண்ட குமரன் பத்மநாபன், மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் அவரை அடைத்து சிங்கள ராணுவம் தொல்லை கொடுப்பதாக முதலில் தகவல் வந்தது. அதன் பிறகு, அமைச்சர் ஒருவரது இல்லத்தில் பாதுகாப்பாகத் தங்கி இருக்கிறார் என்று செய்தி பரவியது. திடீரென ஒருநாள், பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியும் கொடுத்தார் குமரன் பத்மநாபன். வெளிநாட்டில் இருந்து வந்த புலம் பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசவும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, 'கே.பி. இலங்கை அரசாங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டார். அவர் புலிகளின் நெட்வொர்க்கைக் காட்டிக் கொடுக்கும் காரியங்களை இப்போது திறம்படச் செய்கிறார்' என்று புலிகளின் ஆதரவு இணையதளங்கள் சொல்ல ஆரம்பித்தன. இலங்கை அரசு ஒருவரை எதிரியாகக் கைது செய்துவிட்டால், அதன் பிறகு அவர் ஒருக்காலும் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியாது. அதனால், கே.பி-யின் பேச்சும் செயல்பாடுகளும் ஒருவித சந்தேகத்துடன் பார்க்கப்படுவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்று!
பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் இதே கே.பி. ஈழத்துக்கான இறுதிப் போர் தருணத்தில் வெளிநாட்டில் இருந்தபடி தான் மேற்கொண்டதாகச் சில நடவடிக்கைகளை இப்போது பேட்டியில் கூறியுள்ளார் கே.பி. அதுதான், படுகூர்மையாக உலக அளவில் கவனிக்கப்படுகிறது. 'பிரபாகரன் தனது மரணத்தை எப்படிச் சந்தித்தார்?" என்ற தலைப்பில் கே.பி. அளித்துள்ள அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இதோ... "போர் உக்கிரம் அடைந்துவிட்ட நிலையில், வெளிநாட்டில் இருந்த என்னிடம் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி ஒரு விருப்பத்தை வெளியிட்டார். 'எனது குடும்பத்தினரை இங்கே இருந்து வேறு இடத்துக்குக் கொண்டுபோய்விட வேண்டும். எப்படியாவது அவர்களை வெளிநாட்டுக்குக் காப்பாற்றிக் கொண்டுபோக வேண்டும்' என்று சார்லஸ் சொன்னார். அதற்கான திட்டத்தை நான் வகுக்க ஆரம்பித்தேன். இலங்கையின் கடல் எல்லைக் குச் சற்று தூரத்தில் ஒரு கப்பலை நிறுத்தி வைத்துவிட்டு, நான் அங்கே காத்திருப்பது. பிரபாகரனின் குடும்பத்தினரை ஒரு ஹெலி காப்டர் மூலம் அந்தக் கப்பலுக்கு எப்படி யாவது கொண்டுவந்துவிடுவது. பிறகு, அங்கே இருந்து வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்வது என்பதே திட்டம். இருந்த உக்ரேனியத் தொடர்பைப் பயன்படுத்தி, பழைய ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கிக்கொள்ளத் தீர்மானித்தேன். வான் புலிகளில் திறமையான விமானிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் இருவரை இதற்காகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இந்த ஹெலிகாப்டரை வன்னிக்குக் கொண்டுபோய் இறக்குவது என்றும், பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி தவிர, அவரது குடும்பத்தில் இருந்த மற்றவர்களை ஏற்றிக்கொண்டு செல்வது எனவும் திட்டமிட்டேன்.
முடிந்தால், பிரபாகரனையும் அவருடன் இருக்கும் இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்களையும் சிங்களப் படையால் நெருங்க முடியாதபடி இலங்கையின் வேறு அடர் காட்டுப் பகுதிக்குள் கொண்டுசேர்ப்பது என்றும் திட்டமிட்டேன். இரண்டு ஆப்பிரிக்க நாடுகளும் ஓர் ஆசிய நாடும் 'பிரபாகரன் குடும்பத்தினர் வந்தால் அடைக்கலம் தர' ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டன. அவ்வளவு பணம் என்னிடத்தில் இல்லை. ஆனால், புலிகளின் கடல் கடந்த அமைப்புகளுக்கு இந்தப் பணத்தைத் தரக்கூடிய சக்தி இருந்தது. முக்கியமாக, சர்வதேசப் பொறுப்புகளைக் கவனித்து வந்த காஸ்ட்ரோ! அவரும் வேண்டிய பணத்தைத் தருவதாகச் சம்மதித்தார். நார்வேயில் இருக்கும் நெடியவன் மூலமாக இந்தப் பணம் எனக்கு கைமாற்றப்படும் என்றும், அதைத் தொடர்ந்து நான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் காஸ்ட்ரோ கூறியிருந்தார்.
இறுதிப் போர் மேலும் மேலும் இறுகுவதை எடுத்துச் சொல்லி நான் பதறிக்கொண்டே இருந்தேன். பணம் வரவே இல்லை. அந்தச் சமயம், இலங்கைக்கு வெளியே இருந்தார் புலிப் படையின் முக்கிய விமானத் தளபதியாக இருந்த அச்சுதன். அவர் மூலமாக திறமையான விமானிகளை ஏற்பாடு செய்துகொடுப்பதாக நெடியவன் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அச்சுதன் திடீரென என்னிடம் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
நான் அப்போதும் தளராமல், கூலிக்காக எந்த அதிரடியும் செய்யக்கூடிய இரண்டு விமானிகளை பேசித் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். கடைசி வரை பணம் வராததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவேளை, 'தலை வரின் குடும்பத்தைக் காப்பாற்றிய நற்பெயர் கே.பி-க்கு வந்துவிடக் கூடாது' என்றுகூட சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு கட்டத்துக்கு மேல் சிங்களப் படைகள் பலமாக முன்னேறி சுற்றி வளைத்துவிட்டதை அறிந்தபோது, காஸ்ட்ரோ மற்றும் நெடியவன் மீது நான் கடும் கோபமும் வருத்தமும் அடைந்தேன். சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் சகோதரி துவாரகா இருவருமே போர்க்களத்தில் வீரத்தோடு போராடி வீரச் மரணத்தைத் தழுவிக்கொண்டார்கள். மதிவதனி கொல்லப்பட்டார். பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் என்னை இன்னும் பலமாகப் பாதித்தது'' என்று பேட்டியில் கூறுகிறார் கே.பி.
கூடவே, பிரபாகரனின் கடைசி நிமிடங்கள்பற்றியும் சில விஷயங்களைச் சொல்கிறார்-
''தொலைக்காட்சியில் காட்டப்பட்டது பிரபாகரனின் சடலம்தான்'' என்று இவர் அந்தப் பேட்டியில் அழுத்திச் சொல்ல...
''அது எப்படி? தான் கொல்லப்பட்டால் எதிரிகளிடம் உடல் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தன்னோடு இருக்கும் ஒருவரிடம் எப்போதும் பெட்ரோல் தயாராக வைத்திருக்கச் சொல்லிஇருந்தாராமே பிரபாகரன்? அவர் உடல் எப்படி எதிரிகளுக்குக் கிடைத்திருக்க முடியும்?'' என்று பேட்டியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கேட்கிறார்.
அசராத கே.பி., ''பிரபாகரனும் பொட்டு அம்மானும் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தப்பிச் சென்று இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செல்ல நினைத்த இடத்தை அடைய முடியாமல் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது. பிரபாகரனுக்கு முன்பே பொட்டு அம்மான் இறந்திருக்க வேண்டும். அவர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக் கக்கூடும். அதன் பின், பிரபாகரனின் மறைவுக்கு முன்பே அந்த பெட்ரோல் சுமக்கும் மனிதர் சிங்களப் படையால் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். அல்லது பெட்ரோல் டின் தண்ணீரில் விழுந்திருக்க வேண்டும்'' என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
இறுதி நிமிடங்களில் பிரபாகரன் உயிரோடு பிடிபட்டார் என்றும், அவரை சிங்கள ராணுவத் தளபதி மண்டியிடச் செய்து சுட்டுக் கொன்றார் என்றும் சிலர் பரப்பிய தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார் கே.பி. ''பிரபாகரனும் சரி... அவரோடு இருந்தவர்களும் சரி... மிக வீரமாக, கடுமையாகப் போரிட்டு வீர மரணம்தான் எய்தினார்கள். புலிகளுக்கான சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் சிலருக்கும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது தெரியும். முதலில், 'தலைவர் மரணத்துக்கு வீர அஞ்சலி செலுத்தி, துக்கம் அனுஷ்டிப்பதற்கு அறிவிக்க' அவர்கள் தயாராகவே இருந்தார்கள். திடீரென்று அந்த முடிவை மாற்றி, 'மரணச் செய்தியை உறுதிப் படுத்த' மறுத்துவிட்டார்கள்'' என்றும் கே.பி. சொல்லியிருக்கிறார் அந்தப் பேட்டியில்!
'மிக சாமர்த்தியமாக அளிக்கப்பட்டுள்ள பேட்டி இது! புலிகள் இயக்கத்தின் வீரத்தையும் வீரியத்தையும் தொடர்ந்து கொண்டுசெல்ல நினைப்பவர்களைப் பலவீனப்படுத்துவதற்கான கண்ணிவெடிகள் இதனுள் திறமையாகப் பொதித்துவைக்கப்பட்டுஉள்ளன' என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
எப்படியோ... அடுத்த கதைக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை!
கே.பி-யின் பேட்டியைத் தொடர்ந்து கேள்விகள் சில வேகமாக எழுந்து வருகின்றன! அவர் விவரிக்கும் சம்பவங்கள் நடந்த காலகட்டம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை. தமிழீழக் கடல் பகுதியாகச் சொல்லப்பட்ட அத்தனை இடங்களையும் தன்னுடைய கப்பற்படை வசம் ஒப்படைத்து, அங்கே இருந்து எதையும் உள்ளேவிடாமல், வெளியேவிடாமல் தடுப்பு அரண் போட்டு இருந்தது இலங்கை அரசு. இலங்கைக் கடற்படையின் தளபதி வசந்த கரண கோடா சொன்னதின்படி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஒரு கப்பலும், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10, 11 தேதிகளில் மூன்று கப்பல்களும், அக்டோபர் 7-ம் தேதி நான்கு கப்பல்களுமாக புலிகளுக்காக ஆயுதம் ஏற்றி வந்த எட்டு கப்பல்கள் வீழ்த்தி மூழ்கடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிலையில், கே.பி. எப்படி ஒரு கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் கொண்டுவர முடியும்?
இலங்கையின் எல்லைக்குள் தரை மார்க்கமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு புலிகள் நகர்வதே கடினமாக இருந்த சூழலில் 'வன்னிப் பகுதியில் ஹெலிகாப்டரைக் கொண்டுவந்து இறக்கத் திட்டமிட்டோம், அதன் பிறகு பறக்கத் திட்டமிட்டோம்' என்பதெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியம்?
ஒருவேளை, ஹெலிகாப்டர் அங்கே சிங்கள ராணுவக் கண்காணிப்பைத் தாண்டி இறங்கி இருக்க முடியும் என்றால், காசு கொடுத்து ஒரு செகண்ட் ஹாண்ட் ஹெலிகாப்டரை வாங்குகிற அளவுக்கா புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பு இருந்தது? அவர்கள் நினைத்தால், சேட்டிலைட் போனில் ஒரே ஒரு தகவல் சொன்னால், ஒன்றுக்கு நாலாக ஹெலிகாப்டர்களை அவர்களுக்காக கே.பி-யிடம் ஒப்படைக்க எத்தனையோ பேர், வெவ்வேறு நாடுகளில் தயாராக உண்டே?
- இப்படி முரண்பட்ட காட்சிகள்கொண்டதாக கே.பி-யின் பேட்டியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்ற பேச்சையும் கேட்க முடிகிறது!

Tuesday, August 24, 2010

'போதைப் பொருள் பயன்படுத்தினார்களா தமிழ் நடிகைகள்?

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் இருவர், போதைப் பொருள் வாங்கும்போது போலீஸாரிடம் சிக்கிய விவகாரம், ஆந்திராவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, போதைக் கும்பலுடன் சில தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கசிய... கோலிவுட்டும் ஆடிப்போய் இருக்கிறது!
ஆகஸ்ட் 19, இரவு ஏழு மணி... ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் ஆந்திர போலீஸார். சந்தேகப்படும் வகையில் டூ-வீலரில் வந்த நைஜீரிய ஆசாமி சீமா கிளமென்ட் என்ற விக்டரை போலீஸ் மடக்கினர். 'கொகெய்ன்' என்னும் காஸ்ட்லி போதை மருந்து அவனிடம் இருந்ததைப் பார்த்து, அதிர்ந்தனர். 'எங்கே கொண்டு போற?' எனக் கேட்க, 'ஒரு கஸ்டமருக்குக்குதான்' எனச் சொல்லி இருக்கிறான். அப்போது அவன் செல்போனில் இடைவிடாத அழைப்புகள் வர, அதில் வந்த பெயரைப் பார்த்த போலீஸாருக்கு பலத்த ஷாக். காரணம், டோலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் கதாநாயகன் ரவி தேஜாவின் தம்பி ரகு பாபுதான் லைனில் வந்தது!
போலீஸார் இதை, தங்கள் அதிகாரி டி.சி-யான ஸ்டீஃபன் ரவீந்திராவின் காதில் போட.... அவர் போட்டுக்கொடுத்த பிளான்படி செயல்பட்டனர். நைஜீரிய ஆசாமியிடம் செல்போனைக் கொடுத்து, 'எங்கே வரணும்?' எனக் கேட்கச் சொன்னார்கள். ரகுபாபு, பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் கிரீன் மாஸ்க் பள்ளிவாசல் பகுதிக்கு அழைத்தார். விக்டரை அந்த இடத்துக்கு அனுப்பிய போலீஸார், மறைந்தவாறு நடப்பதைக் கூர்ந்து கவனித்தனர். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புத்தம்புது கறுப்பு ஃபோர்டு கார் வந்து நின்றது. அதில் இருந்து ரவி தேஜாவின் தம்பிகள் ரகு பாபுவும் பரத் ராஜும் இறங்கினர். அவர்கள் விக்டரிடம் போதை மருந்து வாங்கும்போது, பாய்ந்து சென்று பிடித்தனர் போலீஸார்.
பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் எம்.எல்.ஏ. காலனியில்தான் இருவருக்கும் வீடு. தங்களுக்கு உள்ள சினிமா தொடர்புகளைவைத்து, கொகெய்ன் வியாபாரத்தில் கோடிகளில் புரண்டார்கள் இந்த தம்பிகள் என்று சொல்கிறது போலீஸ். இவர்கள் இப்போது கம்பிகளுக்குள்!
இதனிடையே, விக்டர் தங்கிய அறையை சோதனை யிட்டதில், லேப்-டாப்பில் முக்கிய வாடிக்கையாளர்கள் குறித்த ஆதாரங்கள் பிடிபட்டதாம். தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மற்றும் பெரிய இடத்து இளம்பெண்கள் ஆகியோர் விக்டருடன் நெருங்கிய தொடர் பில் இருந்துள்ளனர். அதோடு, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்குப் போய் பட்டையைக் கிளப்பிய இரண்டு தமிழ் நடிகைகளின் பெயர்களும் அதில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில், தங்கள் பெயர் வெளிவர ஆரம்பித்தால் எப்படி சமாளிப்பது என அந்தத் தமிழ்நடிகைகள் இருவரும் டிஸ்கஷனில் இறங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது!
என்ன சொல்கிறார் த்ரிஷா?
நடிகை த்ரிஷாவின் செல்போன் நம்பரும் நைஜீரிய வாலிபரிடம் இருந்ததாக ஆந்திர சேனல்கள் புயலை கிளப்ப, ''அந்த நைஜீரிய வாலிபருக்கு என் நம்பர் எப்படி கிடைத்தது என்றே தெரியாது. போதைப் பொருள் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதே போல எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கமும் கிடையாது. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள்தான் இந்த புரளியை வேண்டுமென்றே கிளப்பிவிட்டுள்ளனர். ''என்று பொங்கியுள்ளார் த்ரிஷா.
கொகெய்ன் வியாபாரி விக்டரும், ரவி தேஜாவின் சகோதரர்களும் போதைப் புழக்க ரீதியில் யார் யாருடன் தொடர்பில் இருந்தனர் என மொத்த ஆதாரங்களையும் கையில் வைத்துள்ள ஹைதராபாத் போலீஸார், ''இதில் தொடர்புடைய அனைவரையும் கண்காணிக்க முடிவு செய்துவிட்டோம். பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தாலும், இப்போது 65 பேர் பட்டியல் கிடைத்துள்ளது. எல்லோரையும் மடக்குவோம். உகாண்டா, தான்சானியா நாட்டில் இருந்து வந்துள்ள நபர்கள்தான் அதை சப்ளை செய்கின்றனர். விரைவில், மொத்த நெட்வொர்க்கும் மாட்டும்!'' என்றனர்.
இந்த விவகாரத்தின் பின்னணி அறிந்த சிலரிடம் மேலும் விசாரித்தோம். ''பஞ்சரா ஹில்ஸ் பகுதி... ஆந்திராவின் சொர்க்கம். அந்த அளவு ரம்மியமான, பணக்காரப் பகுதி. பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட வி.வி.ஐ.பி. ஏரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதைப் பொருட்களின் புழக்கம் தெரிந்தது. ஸ்டார் ஹோட்டல்களிலும், பப்புகளிலும் இளசுகளைக் குறிவைத்து போதை மாஃபியாக்கள் குவியத் தொடங்க... பெரும்பாலான வி.ஐ.பி-க்களின் வாரிசுகள் தன்னிலை மறந்து, தடம் மாறத் தொடங்கினர். இந்த விவகாரம் போலீஸுக்குத் தெரிந்தும், 'பெரிய இடத்து சமாசாரம்... நமக்கு ஏன் வம்பு?' என வெறுமனே வேடிக்கை பார்த்தனர்.
இந்தச் சூழலில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஒருவர், ஒரு சி.டி-யுடன் போலீஸ் உயர் அதிகாரியைச் சந்தித்துக் கதறினார். அந்த எம்.பி-யின் வாரிசு, ஒரு மாதமாக வீட்டுக்கே போகாமல் ஹோட்டலே கதி என்று இருந்தார். அவரது கை முழுவதும் ஊசிகள் குத்தப்பட்ட தழும்புகள்... கீறல்கள். பெரும் போராட்டத்துக்குப் பின், கெஞ்சிக் கூத்தாடி வாரிசை வீட்டுக்கு மீட்டு வந்த அந்த எம்.பி., பல கட்ட சிகிச்சை அளித்து தனது மகனை போதையில் இருந்து மீட்டு இருக்கிறார். தன் வாரிசுக்கு ஏற்பட்ட நிலையை வீடியோ எடுத்தவர், அதைத்தான் அப்படியே காவல் உயர் அதிகாரிகளிடம் காண்பித்துக் கதறி இருக்கிறார். அதன் பிறகு, எங்கே இருந்து என்ன உத்தரவு வந்ததோ, தெரியவில்லை... இரண்டு மாதங்களாகக் காவல் துறையின் செயல்பாட்டில் செம சுறுசுறுப்பு. அதைத் தொடர்ந்துதான் இந்தத் தம்பிகளின் கைது!'' என்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தெலுங்கு ஹீரோ ரவி தேஜாதான் ரொம்பவே நொந்துகிடக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்து, பல கஷ்டங்களைக் கடந்து, படிப்படியாக தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபல நடிகராகத் தனி இடம் பிடித்தவர் இவர். சில மாதங்களுக்கு முன்புகூட, தம்பி பரத் ராஜ் போதையில் கார் ஓட்டிப்போய் ஒரு விபத்தை ஏற்படுத்த... பெரும் பாடுபட்டு அந்த விவகாரத்தைச் சமாளித்தாரம் ரவி தேஜா. இப்போது தன் தம்பிகள் போதை விவகாரத்தில் சிக்கியதும், ''சட்டப்படி எல்லாம் நடக்கட்டும்!'' என்று விரக்தியாக சொல்கிறாராம்.
இந்த கைது சம்பவத்தின் கதாநாயகன்... தற்போது ஹைதராபாத் மேற்கு மண்டல டி.சி-யாக இருக்கும் ஸ்டீஃபன் ரவீந்திரா. நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பிரபலமான அதிகாரி. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டும்கூட!
நாம் ஸ்டீஃபன் ரவீந்திராவிடம் பேசினோம். ''பொதுவாக பெரிய இடத்து ஆட்கள் மாட்டினால் போலீஸ் விட்டுவிடும் என்று மக்களிடம் ஓர் எண்ணம் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில், தப்பு செய் பவர்கள் யாராக இருந்தால் என்ன? தப்பு... தப்புதான்! அதற்கான தண்டனையை அவர்கள் யாராக இருந்தாலும் அனுபவிப்பதுதான் நியாயம். இந்த விஷயத்தில் சிலர் என்னைப் பாராட்டுகிறார்கள். அது தேவை இல்லை. என் கடமையைத்தான் செய்தேன். அதற்காகத்தான் அரசாங்கம் எனக்கு சம்பளம் கொடுக்கிறது!'' என்று சிம்பிளாகச் சொல்லிச் சிரித்தார்.

'பிரபாகரன் இறந்தது' வைகோவுக்கு தெரியும்?!



விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக செய்திப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் கொடுத்து வரும் பேட்டிகள் உலகத் தமிழர்கள் மத்தியில் அதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன! 'இந்திய அரசு முன்மொழிந்த போர் நிறுத்தத்தைத் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வைகோவும் நெடுமாறனும் தடுத்துவிட்டார்கள்' என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்துள்ளார் கே.பி.
வைகோவுடனான நமது சந்திப்பு இதை முன்னிட்டே நடந்தது.
''கே.பி-யின் பேட்டி படித்தீர்களா?''
''இலங்கை அரசாங்கத்தின், ராணுவத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கே.பி. அளித்துள்ள பேட்டியைப் படித்தபோது, என்னைப்போலவே உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் உலகத் தொடர்புப் பொறுப்பாளராக இருந்து, தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்தான் இந்த கே.பி. இறுதிப் போர் நடந்த காலத்தில் அவர் எதிரிகளின் கையாளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே, மீண்டும் அனைத்து உலகப் பொறுப்பாளர் பதவியை தலைவர் வழங்கினார். அதுவும் காஸ்ட்ரோவுக்கு கீழே இருந்து செயல்படவே அனுமதிக்கப்பட்டார். கே.பி. இன்று சொல்வது எல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன் உயிரைக் காப்பாற்ற உதிர்க்கும் தந்திரம். ஒரு கொத்தடிமையிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது!''
''மத்திய காங்கிரஸ் அரசு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தயாரித்ததாகவும் அதை நீங்கள் தடுத்துவிட்டதாகவும் சொல்கிறாரே கே.பி.?''
''போரை நடத்திய காங்கிரஸ் அரசாங்கமே போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். இலங்கை ராணுவத்துக்கு காங்கிரஸ் அரசாங்கம் எந்த உதவியும் செய்யக் கூடாது என்று 16 முறை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மன்றாடியவன் நான். அதையும் மீறி ராடார் கொடுத்தார்கள், ஆயுதங்கள் கொடுத்தார்கள், உளவு பார்த்து சொன்னார்கள். எல்லா உதவிகளும் செய்தார்கள். ஒரு முறையாவது மன்மோகன் சிங்கோ, சோனியா காந்தியோ, 'போரை நிறுத்துங்கள்' என்று வெளிப்படையாகச் சொன்னது உண்டா? உலக நாடுகள் எல்லாம் சொன்ன பிறகும் ஊமையாகத்தானே இந்த இரண்டு பேரும் இருந்தார்கள்.
முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், 'போர் நிறுத்தத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?' என்று கேட்டபோது, 'அது நமது வேலை இல்லை' என்றுதானே சொன்னார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போர் நிறுத்தத் தீர்மானம் போட்டு அனுப்பிய மறுநாள், டெல்லிக்கு ராஜபக்ஷே வந்திருந்தார். மன்மோகனைச் சந்தித்தார். வெளியே வந்தவரை நிருபர்கள் கேட்டார்கள்... 'போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை. புலிகளை அழித்துவிட்டுத்தான் மறு வேலை' என்று கொக்கரித்தார் ராஜபக்ஷே. 'போர் நிறுத்தம் செய், அப்பாவிகள் மீது குண்டு வீசாதே' என்று வெளிப்படையாகச் சொல்லாத காங்கிரஸ் அரசாங்கம், ரகசியமாக இந்த வேலையைப் பார்த்தது என்று கே.பி. புதிதாகப் பூ சுற்றுகிறாரா?
'போரை நடத்த பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகியோரை நான் அனுப்புகிறேன். நீங்கள், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகியோரைத் தாருங்கள்' என்று ஒப்பந்தம் போட்டது உண்டா இல்லையா? கொழும்பில் இருந்து அவர்கள் மூவரும் டெல்லிக்கு ஐந்து முறை வந்தார்கள். இவர்கள் மூவரும் கொழும்புக்கு மூன்று முறை போனார்கள். இவர்களது நோக்கம் என்ன? சம்பந்தம் பேசப் போனார்களா? போரை எப்படி நடத்தலாம் என்றுதான் பேசப் போனார்கள். தினம் தினம் பேசி, வாரம்தோறும் எத்தனைத் தமிழன் செத்தான் என்று கணக்கெடுத்தவர்கள் போரை நிறுத்தத் துடித்ததாக சொல்வது போலித்தனம்.
உலகத்தின் முன்னால் ராஜபக்ஷேவுக்குப் பக்கத்தில் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கூண்டு தயாராகிக்கொண்டு இருப்பதைத் தெரிந்த பின்னால், 'நாங்கள் ஓர் ஒப்பந்தம் போடத் திட்டமிட்டோம். வைகோ தடுத்துவிட்டான்' என்று கதை கட்டுகிறார்கள்!''
''விடுதலைப் புலிகளின் தொடர்பாளர் நடேசனிடம், 'போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும்' என்று சொல்லி நீங்கள் தடுத்தீர்களா? கே.பி குறிப்பிடும் இந்த சம்பவம் உண்மையா?''
''தமிழீழ விடுதலையை என் உயிருக்கும் மேலாக நேசிப்பவன் நான். விடுதலைப் புலிகளை என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, உள்நோக்கத்துக்கு நான் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியவன் அல்ல. என்னுடைய அரசியல் எதிரிகளும்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள். காயம்பட்ட புலிப் போராளிகள் 37 பேரை ஒன்றரை ஆண்டு காலம் நானும் என் தம்பியும் பாதுகாத்துக் காப்பாற்றினோம். இதனாலேயே ஓர் ஆண்டு காலம் என் தம்பி தடா கைதியாக இருந்தான். போர்க் களத்தில் உயிரைத் துச்சமென மதித்துச் செயல்படும் புலிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்தேன். ஆனால், எந்தக் காலக்கட்டத்திலும் புலிகளிடம், இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று நான் சொன்னதே இல்லை.
'போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. தலைவர் பிரபாகரனின் உயிருக்கே ஆபத்து' என்று எனக்கு தொலைபேசித் தகவல் வந்தபோது, 'இந்தத் தகவலை முதல்வர் கலைஞரின் கவனத்துக்கும் கொண்டு போய்விட்டோம் அண்ணா' என்று சொன்னார்கள். 'கலைஞரிடம் சொன்னதுதான் சரி. இன்னும் முக்கியமானவர்களை அவரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றுதான் நான் சொன்னேன். என்ன செய்தாவது தாக்குதல் நின்றால் போதும் என்று நினைத்த என்னை, ராஜபக்ஷேவின் ரத்தச் சமையலைச் சாப்பிட்டு உயிர் வாழும் கே.பி-யா சந்தேகப்படுவது? கேவலம்!''
''நடேசன், அந்தக் காலகட்டத்தில் உங்களிடம் பேசினாரா?''
''கே.பி-யும், சில உளவு அதிகாரிகளும் ஒரு நாடகத்தை ஜோடிக்கிறார்கள். 'ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுச் சரணடையத் தயார். தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வகையில் போராடத் தயார்' என்று புலிகள் எழுதிக் கொடுத்தால், போர் நிறுத்தம் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதாகவும்... அதை நடேசன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான மகேந்திரனிடம் சொன்னதாகவும்... இதை என்னிடமும், நெடுமாறனிடமும் கூற வேண்டாம் என்று சொன்னதாகவும், அதை மீறி மகேந்திரன் என்னிடம் சொல்லிவிட்டதாகவும் போகிறது கே.பி-யின் திரைக்கதை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழீழ கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் நடேசன் எப்படி பேசியிருக்க முடியும்?
தொடக்கக் காலத்தில், பாலசிங்கம், அடுத்து தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து பேசுவார்கள். கடைசிக் கட்டத்தில் நடேசன் தொடர்பில் இருந்தார். 2009-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். போர் கடுமையாக நடந்து வந்த சூழல் அது. அவராகவே அரசியல் நிலைமை குறித்துக் கேட்டார். 'எங்களுக்குத் தொகுதிகள் குறைவாகக் கிடைக்கும் நிலை இருப்பதால், நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுக்கலாம் என நினைக்கிறோம். அதற்காக அணி மாற முடியாது' என்று சொன்னேன். 'உங்களுக்கு சிவகாசி கிடைத்துவிட்டதா?' என்றார். 'ஆம்' என்றேன். 'நீங்கள் ஒருவர் போனால், 500 பேர் போவதற்கு சமம்' என்றார். மீண்டும் இரவு 7.30-க்கு பேசினார். 'நீங்கள் நிச்சயம் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். உங்களிடம் சொல்லச் சொன்னார்' என்றார். 'சரி' என்று சொன்னேன்.
மே 10-ம் தேதி இரவில், கடற்படைத் தளபதி சூசை என்னிடம் பேசினார். போர்ச் சூழல் குறித்துப் பேசிய சூசையிடம், 'நீங்களும் தலைவரும் பத்திரமாக இருக்க வேண்டும்' என்றேன். 'இத்தனை மக்கள் சாகிறார்கள். என்னையும் தலைவரையும் பத்திரமாக இருக்கச் சொல்கிறீர்களே' என்று கோபித்தார் சூசை. 'நான் எங்களது மனக் கஷ்டங்களைச் சொன்னேன்' என்றேன். இன்னும் நான்கு நாளில் கோரமான தாக்குதல் நடக்கப்போவதாக நான் சாத்தூர் கூட்டத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தேன்.
மே 13-ம் தேதி வாக்குப் பதிவு அன்று காலை 10.15 மணிக்கு நடேசன் பேசினார். 'நீங்க சிவகாசியில் ஜெயிச்சிடுவீங்களா?' என்று கேட்டார். 'கோடிக்கணக்கில் எனக்கு எதிராகப் பணம் செலவழிச்சிருக்காங்க. கொஞ்ச ஓட்டு வித்தியாசத்திலாவது ஜெயிச்சிடுவேன்' என்றதோடு, 'எனக்கு உங்களைப்பற்றியும் தலைவரைப்பற்றியும் போர்க் களத்தில் இருக்கும் மக்களைப்பற்றியும்தான் கவலை' என்று சொன்னேன். 'நாங்கள் வெல்வோம் அண்ணா' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார் நடேசன். இதுதான் அவர் என்னிடம் சொன்ன கடைசி வார்த்தை. வெள்ளைக் கொடி ஏந்திப் போன நடேசன், உலகம் விழித்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். போர் நிறுத்தத்தை வலியுறுத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதைக் கண்டித்தாரா?
'நாங்கள் ஆயுதத்தைக் மௌனிக்கச் செய்துவிட்டோம்' என்று விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதாவது கே.பி-க்குத் தெரியுமா?
கே.பி-யின் உடம்பில் தமிழீழ ரத்தம் ஓடுமானால், சிங்களவனால் பலாத்காரம் செய்த தமிழ்ப் பெண்களுக்கு அவர் சொல்லும் தீர்ப்பு என்ன? கண்ணை மூடிச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அவர் சொல்லும் காரணம் என்ன? இனத்தைக் கருவறுத்த கூட்டத்தின் கைப்பாவை ஒன்று, ராஜபக்ஷேவின் நாடகத்தில் நடிக்கிறது. போரை நிறுத்த இந்தியா முயற்சித்தது, இலங்கையும் சம்மதித்தது, ஆனால் வைகோ, நெடுமாறன் பேச்சைக் கேட்டு புலிகள் மறுத்ததால், வேறு வழி இல்லாமல் நாங்களும் போரைத் தொடர வேண்டியதாயிற்று என்று உலகத்தின் முன்னால் ஏமாற்ற நினைக்கிறார்கள்!''
''கே.பி-யைத் தலைவராகக் காட்டி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறதே?''
''அதைச் சில ஆங்கில ஊடகங்களும், இனத் துரோகிகளும்தான் செய்கிறார்கள். உலகத் தமிழர் மத்தியில் கே.பி-யின் முகத்திரை 2009 மே இறுதியிலேயே கிழிந்துவிட்டது. 'தலைவர் இருக்கிறார்' என்று முதலிலும், 'அவர் இறந்து விட்டார்' என்று மூன்று நாட்கள் கழித்தும் அவர் சொல்லும்போதே டயலாக் ரைட்டர் பின்னால் இருக்கிறார் என்பதை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டார்கள்.
இயேசுநாதரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்த யூதாஸ்கூட 30 வெள்ளிக் காசுகளையும் வீசி எறிந்துவிட்டு உண்மையை உணர்ந்து தற்கொலை செய்துகொண்டான். உண்மையை உணர்ந்தாலும், யூதாஸை மன்னிக்க உலகம் தயாராக இல்லை. ஆனால், காட்டிக் கொடுத்தது மட்டும் இல்லாமல், தன் துரோகத்தை மறைக்க இன்னும் பல பொய்களை உதிர்க்கும் கே.பி. போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது!''
''பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரிய வந்ததும் கதவை மூடிக் கொண்டு வைகோ கதறினார் என்றும்... ஆனால் அவரே வெளியில் வந்து பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறாரே கே.பி?''
''பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத் ததும் நான் தனியறையில் கண்ணீர் விட்டதும், கதறியதும், அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்ததும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட வதந்தி, சதி என்று 24 மணிநேரத்தில் உறுதியான தகவல் கிடைத்ததும் தலைவர் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார் என்று சொன்னோம். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் கே.பி.?
எதிர் கேள்வியுடன் முடிக்கிறார் வைகோ!

Saturday, August 21, 2010

பழைய சுவாரஸ்யமான விளம்பரங்கள்..

 
Old Cadbury India       

 

                                    Nataraj Pencil                                      

 
Ericsson Mobile

 
Vicks

                
Nescafe

 Aishwaryarai in Titan

Hamara Bajaj

 Liril - 1985


 Liril - Preety Zinta
 
 
Liril Pooja Batra


Friday, August 20, 2010

ஆசை ஆசையாய் 30 வகை தோசை

'தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை...'
- தலைமுறை தாண்டியும் தவறாமல் நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு சில பழம் பாடல்களில் இதுவும் ஒன்று.
இதற்குக் காரணம்... 'தோசை' என்கிற உணவின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும்... ஆசையும்தான்!
''இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?'' என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் ஏகோபித்த குரலில் சொல்வது... ''தோசை'' என்பதைத்தானே!
"ம்ஹ¨ம்... எனக்கு மம்மு வேண்டாம்" என அடம்பிடிக்கும் குழந்தைகூட, "தோசை செஞ்சு தர்றேண்டா செல்லம்"னு கொஞ்சினா... அடுத்த நிமிஷமே சரண்டராகி விடுமே! ஆக, தோசைக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறு மார்க்தான்.
இதோ... பாட்டியின் கருப்பட்டி தோசையிலிருந்து, 'மாடர்ன் வேர்ல்டு' கற்றுக் கொடுத்திருக்கும் பீட்சா தோசை வரை வகை வகையாக செய்து அசத்தி, ஆச்சரியப்படுத்தியிருக்கும் சமையல்கலை வல்லுநர் உஷாதேவி, "ஒவ்வொரு வகை தோசைக்கும் அரிசியை ஊற வைக்கறதுல இருந்து, தோசை மாவை கல்லுல வார்க்குறது வரைக்கும் நிறைய வரைமுறைகள் இருக்கு. அதையெல்லாம் சரியா செஞ்சாத்தான் தோசை ருசிக்கும்... கல்லுல ஒட்டிக்கிட்டு அடம் பிடிக்காம, அழகா பெயர்ந்து வரும்" என்று உத்தரவாதம் தருகிறார். பிறகென்ன... எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியான தோசையை சுட்டுப்போட்டு போரடிக்காமல்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோசை என்று வீட்டில் 'தோசைத் திருவிழா'வைக் கொண்டாடுங்க தோழிகளே!
ரவா தோசை
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த ரவை - இரண்டரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு, நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விட வேண்டும். இருபக்கமும் எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனை திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
மிக்ஸட் தோசை
தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (கலந்தது) - ஒரு கப், பச்சரிசி - ஒன்றரை கப், புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி, மாவில் கொட்டவும். மாவை, தோசைக் கல்லில் மெல்லியதாக விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு, பரிமாறவும்.
அவியல், இதற்கு சூப்பரான சைட் டிஷ்!
தோசை முறுகலாக வருவதற்கு... முதலில் அரிசியைப் போட்டு, பாதி அரைத்தவுடன் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்காமல் உடனே செய்ய வேண்டும். மாவானது, இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
கோதுமை தோசை
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை பொடி, புதினா பொடி - தலா அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.
தக்காளித் தொக்குடன், சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.
பருப்பு தோசை (இனிப்பு)
தேவையானவை: பாசிப் பருப்பு அல்லது பச்சைப் பயறு - ஒரு கப் பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (அ) பனை வெல்லம் - ஒன்றேகால் கப், ஏலக்காய் - 2, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு, அரிசியை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக கரகரவென கெட்டியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல் லம் அல்லது பனை வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி... மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு விட்டு, தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் (அ) எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து தோசையை எடுக்கும் சமயத்தில் தூவிப் பரிமாறலாம்.
கேழ்வரகு தோசை
தேவையானவை: கேழ்வரகு - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு, பச்சரிசி - கால் கப், முருங்கைக் கீரை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து உப்பு, முருங்கைக் கீரை சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறலாம்.
காரக்குழம்புடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்!
சோள தோசை
தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்!
ஜவ்வரிசி தோசை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்... ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!
சோயாபீன்ஸ் தோசை
தேவையானவை: சோயாபீன்ஸ் - ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி - ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் - ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு... அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!
வெங்காய தோசை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், புழுங்கல் அரிசி - 3 கப், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 4, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை ஒரு இரவு புளிக்க விடவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறினால், சுவை தூக்கலாக இருக்கும்.
செட் தோசை
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), உளுத்தம்பருப்பு - அரை கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - அரை கப், கேரட் துருவல் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி - தேவையான அளவு, உப்பு, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசை வார்க்கவும். அதன் மீது தேங்காய் துருவல் தூவி, மூடி போட்டு மூடவும். சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், மூடியைத் திறந்து தோசையை எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி... வெந்தவுடன் மூடியை எடுக்கவும். அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்க... செட் தோசை ரெடி!
இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
அவல் தோசை
தேவையானவை: அவல், தயிர் - தலா 2 கப், பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், சாதம்-கையளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை சுத்தம் செய்து கழுவி, கடைந்த தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இரண்டு வகை அரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு, தயிரில் ஊற வைத்த அவலுடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும். அதனை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை எடுத்து ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவும்.
இதற்கு காரச் சட்னி அருமையான காம்பினேஷன்.
குறிப்பு: மாலையில் தோசை செய்யத் திட்டமிட்டால், காலையிலேயே மாவை அரைத்து தயார் செய்துகொள்ள வேண்டும்.

கம்பு தோசை
தேவையானவை: கம்பு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கம்பு, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தோசை மாவுக்கு அரைப்பது போல் தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அபாரமாக இருக்கும்.
ஓட்ஸ் தோசை
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசி மாவு, வறுத்த ரவை, கோதுமை மாவு - தலா கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு ரவா தோசைக்கு மாவு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மெல்லியதாக மாவை வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
கீரை தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பாலக் கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால்... கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக, வல்லாரைக் கீரையும் சேர்க்கலாம்.
பீட்ரூட் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோசை மாவுடன் பீட்ரூட் விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை விட மெல்லியதாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.
கேரட் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், கேரட் விழுது - அரை கப், பொடித்த காய்ந்த மிளகாய் - தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோசை மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிது கனமாக மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவில் சேர்த்தும் செய்யலாம்.
இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.
தக்காளி தோசை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - அரை கப், நறுக்கிய தக்காளி - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: இரண்டு அரிசியையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டு மாவையும் ஒன்றாக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு... தக்காளி, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு மற்றும் தக்காளி கலவையை ஒன்றாக்கி, உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
புதினா - கொத்தமல்லி தோசை
தேவையானவை: தோசை மாவு - 2 கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி (சேர்ந்தது) - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல்.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து சுட்டெடுக் கவும்.
இது, வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
பப்பாளி தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை மாவில் கலந்து... தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
பனீர் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், பனீர் துருவல் - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீர் துருவலுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பாதி வெந்ததும் பனீர் கலவையை அதன் மேலே தூவி, சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தோசையை திருப்பி போட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
மசாலா தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், காரச்சட்னி - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், பொட்டுக்கடலை மாவு தூவி, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். மசாலா ரெடி!
தோசைக் கல் சூடானதும், எண்ணெய் விட்டு, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, பாதி வெந்ததும் ஒரு பாதியில் காரச்சட்னி தடவி... மறு பாதியில் கிழங்கு மசாலா வைத்து, நெய் விட்டு மடிக்கவும். அதே போல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்யவும்.
இந்த தோசையை சூடான சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.
புளிப்பு-கார தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி தேவையில்லை
பருப்புப் பொடி தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், நெய் - தேவையான அளவு.
பருப்புப் பொடிக்கு: உளுத்தம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை - பருப்புப் பொடி: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து தனியே வைக்கவும். கடலைப்பருப்பைபையும் வறுத்து தனியே வைக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். எள், பூண்டு வறுத்து ஆற விடவும். ஆறியவுடன், வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். அதனுடன் வறுத்த எள், பூண்டு சேர்த்து சிறிது நேரம் சுற்றி எடுத்தால்... பருப்புப் பொடி ரெடி! ஆறியவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை சற்று கனமாக விட்டு, பருப்புப் பொடியை மேலே தூவி அதன்மேல் சிறிதளவு நெய் விட்டு மூடி வைக்கவும். இதனை, திருப்பிப் போட வேண்டாம். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
இந்த தோசைக்கு, சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சரியான சைட் டிஷ்!
கல் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப்.
செய்முறை: சூடான தோசைக் கல்லில், மாவை சற்று கனமாக விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, மிதமான தீயில் வேக விடவும். அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும், நடுவில் 'மெத்'தென்றும் இருக்கும். இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக வைக்க வேண்டும்.
எந்த சட்னி வைத்து பரிமாறினாலும் சுவையாக இருக்கும்.
பீட்சா தோசை
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி... தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் சேர்த்து இறக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, சற்று தடிமனாக மாவை வார்த்து மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து.. தோசை மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய காய்கறியைப் பரப்பி, கடைசியாக வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் ஆகியவற்றைத் தூவி, வாசனை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
நெய் தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, பச்சரிசி - 100 கிராம், உளுந்து - 75 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து-வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாகப் பரிமாறவும்.
தோசை வெந்தவுடன், அதன் நடுவிலிருந்து ஓரம் வரை தோசை கரண்டியால் நீளவாக்கில் வெட்டி (ஒரு பக்கம் மட்டும்), மடித்தால், ஹோட்டல்களில் நெய் தோசை கொடுப்பது போலவே, வீட்டிலும் கோன் வடிவில் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இந்தத் தோசைக்கு எந்த வகை சட்னியும் சுவை சேர்க்கும்.
காளான் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், காளான் - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கவும். நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து... பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்க... காளான் ரெடி!
தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், தோசை தயார். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.
முட்டைகோஸ் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், நறுக்கிய முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 6, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு... வெங்காயம், முட்டைகோஸ், கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கவும். ஆறியவுடன், மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைக்க... முட்டைகோஸ் மசலா தயார்!
கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி, சிறிது நேரம் வேகவிட்டு, சூடாகப் பரிமாறவும்.
வெஜிடபிள் மிக்ஸ் தோசை
தேவையானவை: தோசை மாவு - இரண்டு கப், கேரட், பீன்ஸ், பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர் (கலந்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 5, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெங்காயம்-2, காரச்சட்னி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்து நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் முந்திரி, திராட்சை, சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வேக வைத்த காய்கறிகள் என ஒவ்வொன்றாகச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லியதாக வார்க்கவும். லேசாக வெந்ததும், கெட்டியான காரச்சட்னியை கொஞ்சம் போல தோசை மீது தடவி, நடுவில் காய்கறி கலவையை வைத்து சுருட்டவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.
கருப்பட்டி தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கருப்பட்டி - கால் கிலோ, தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், வறுத்து, ஒன்றிண்டாகப் பொடித்த வேர்கடலை - ஒரு கப்.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, அரைத்து ஒன்றாகக் கலக்கவும். பிறகு, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டவும். அந்தக் கரைசலை லேசாக கொதிக்க வைத்து, ஆற வைத்து.. தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து தோசை மாவில் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை அதன் மீது போட்டுப் பரப்பி, மூடவும். தீயை மிதமாக வைத்து, வேகவிட்டு எடுக்கவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.