Saturday, August 28, 2010

கேப்டனுக்கு ஸ்வீட் ஊட்டிய இளங்கோவன்!

'அரசியல் அரங்கில் அடுத்தது என்ன?' என ஆயிரம் டிகிரி அனலைக் கிளப்பிவிட்டு இருக்கிறது ஆகஸ்ட் 25. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளான அன்று, யாருமே எதிர்பாராத வகையில் வீடு தேடி சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கேப்டனைக் கட்டித் தழுவி வாழ்த்துச் சொல்ல... கூட்டணியில் குபுகுபு! எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதை நேரடியாகவும் பூடகமாகவும் எதிர்த்து வருபவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன். ஒரே கூட்டணியில் இருந்துகொண்டே, தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் அவர் அளவுக்கு யாரும் விமர்சிப்பது கிடையாது. 'வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - தே.மு.தி.க. கூட்டணி அமையும். தொகுதி உடன்பாடே முடிந்து விட்டது' என்ற பரபரப்பு பல பக்கங்களிலும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில்தான், இந்த பிறந்தநாள் சந்திப்பு!
'இலங்கைத் தமிழர் பிரச்னை முடியும் வரை எனது பிறந்த நாளைக் கொண்டாட மாட்டேன்' என்று அறிவித்து, அதை மீறாமல் கடைப்பிடித்தும் வந்தவர் விஜய்காந்த். தனது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினம்' என அறிவித்து, ஏழைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். கடந்த புதன்கிழமை விஜயகாந்த்தின் 58-வது பிறந்த நாள். இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தாலும் அதிகமாக வாழ்த்து மழை பொழிந்தவர்கள் காங்கிரஸ்தலைவர்கள்தான். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள்அமைச்சர் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகிய அனைவருமே விஜயகாந்த்துக்கு போனில் வாழ்த்துச் சொன்னார்கள்.
பிறந்த நாளன்று விஜயகாந்த், புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்டு, குடும்பத்தினருடன் ஸ்பெஷலாக கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு இருக்கையில்... புன்னகையும் பொக்கேவுமாக வந்து இறங்கினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அங்கு இருந்த தே.மு.தி.க-வினருக்கு இன்ப அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்.
சரசரவென நேராக வீட்டினுள் நுழைந்த இளங்கோவன், பொன்னாடையை விஜயகாந்த்துக்குப் போர்த்தி, 'நூறாண்டு வாழ வாழ்த்துகள்' என அன்பு மழை பொழிந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத விஜயகாந்த், 'இன்னிக்கு இதான்பத்திரிகையின் முக்கியச் செய்தி' என்று முகம்கொள்ளாப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். சுதீஷ் பக்கம் திரும்பிய இளங்கோவன், 'நல்லா இருக்கீங்களா சுதீஷ்... உங்ககூட எனக்கு பெருசாப் பழக்கம் இல்லை!'' என்று உருக... 'நானும் உங்க பையனும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்' என்று பதில் அன்பு காட்டினார் சுதீஷ். விஜயகாந்த்தும், இளங்கோவனும் சில நிமிடங்கள் தனியாக சோபாவில் அமர்ந்து பேசியதும், அடுத்து அங்கே நடந்த விஷயங்களும் அர்த்தம் பொதிந்தவை!
தனது கையில் ஸ்வீட்டை எடுத்த ஈ.வி.கே.எஸ், அதை விஜயகாந்த் வாயில் பாசத்தோடு ஊட்ட... மொத்த கேமராக்களும் பளிச். இன்னொரு ஸ்வீட்டை எடுத்த இளங்கோவன் அங்கு இருந்த பண்ருட்டியார் பக்கம் திரும்பி, 'நீங்க பாதி... நான் பாதி' என்றபடியே பாதி ஸ்வீட்டை அவரிடம் நீட்ட... ''எல்லாத்துலயும் இதேபோல பாதிப் பாதி கொடுப்பீங்களா?'' என டைமிங்காகக் கேட்டார் பண்ருட்டி. பலத்த சிரிப்பில் அந்த ஹாலே நனைந்தது.
''விஜயகாந்த் நல்ல தலைவர். அவர் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார்!'' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டே அங்கிருந்து கிளம் பினார் இளங்கோவன்.
அவரை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது... ''நானும் விஜயகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் இருந்ததால், நேரில் வாழ்த்த முடியவில்லை. இந்தமுறை நேரில் வாழ்த்தினேன். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் ஸ்வீட் கொடுக்கும்போது, பண்ருட்டியார் ஜாலியாகத்தான் அப்படி சொன்னார். மற்றபடி கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பது காங்கிரஸ் தலைமைதான். அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும்!'' என்றார் அழுத்தமாக.
விஜயகாந்த் பிறந்த நாளன்று திடீரென வருகை புரிந்து அத்தனை பேருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
மதியம் 1.30 மணிக்கு வந்த ரஜினி, சுமார் 25 நிமிடங்கள் விஜயகாந்த்தின் வீட்டில் இருந்தார். மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழையும் அளித்தார். 'எந்திரன்', 'விருதகிரி' படம் பற்றிப் பரஸ்பரம் பேச்சு ஓடியது. பட்டும்படாமல் அரசியல் பேசிய ரஜினி, 'உங்க அரசியல் முயற்சிகள் ஜெயிக்கணும்... வெல்டன் விஜி!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 'எங்கள் தலைவரை மனதார வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் பிறந்த நாளாகப் பார்த்து ரஜினி வந்திருந்தார். கல்யாணப் பத்திரிகை கொடுப்பது மட்டுமே நோக்கமாக இருந்தால், முந்திய நாளோ... அடுத்த நாளோகூட வந்திருப்பாரே!'' என்று பெருமிதத்தில் மிதக்கிறது தே.மு.தி.க.!

No comments:

Post a Comment