Tuesday, August 17, 2010

சொ(ர்)க்கம்பட்டி!

த்தனைதான் மனித சமூகம் அறிவியல் யுகத்தில் வளர்ந்து கொண்டே போனாலும் தாம் கடந்து வந்த பாதையை மறக்காமல் போற்றுகிற பண்பாலே இன்னும் உயர்ந்து நிற்கிறது. அதில் முன்னின்று தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிற மரபுகளைக் காத்து அவற்றை வழுவாது பேணி வருகிற சமூகமாகத் தமிழ் மரபு திகழ்கிறது.
இயற்கையையும், இயற்கைச் சக்திகளையும் பெரிதென நம்பிப் போற்றுகிற தமிழர்தம் வழிபாட்டு முறைகள் சிறுதெய்வ வழிபாடுகள் என்று சுட்டப் பெறுகின்றன. ஆனால் அத்தெய்வங்களெல்லாம் மனிதனோடு இணைந்து வாழக்கூடிய காளை, பசு, குதிரை, யானை, நாகம், நாய் எனக் காட்சி தரும்போது அந்த நன்றி பாராட்டுகிற விழா பெருந்தெய்வீகச் செயலாகவே போற்றப்படுகிறது.
மண்ணால் பெரிய பெரிய பொம்மைகள் செய்து அவற்றைப் பூக்கள், பூந்தோகைகள், மலர்க்குருத்துகள் போன்றவற்றால் அழகுபடுத்தி, வழிபட்டு, அவற்றைக் கும்பிட்டு நிமிரும் தருணங்களில் அன்பால் நம்மைக் காக்கிற அந்தச் சிலை உருவங்கள் உயிரும் பெற்றுவிடுகின்றன.
தன்னைச் சுமந்து செல்கிற குதிரையை மண் வடிவில் உருவேற்றித் தெய்வமாக்கி அதனைத் தன்மீது சுமந்து சென்று வழிபடுகிற மனிதர்கள் வாழும் பகுதிகளும் பூமியில் இருக்கின்றன தமிழ்நாட்டுக்குள் கிராமங்களாய்...
எதையாவது அல்லாமல் ஏதேனும் திடமான ஒன்றை நம்பிக்கையோடு ஏற்று வழிபடுகிற பாங்கு இயல்பாகவே கிராம மக்களுக்கு உண்டு. அது பெரும்பாலும் இயற்கையாகவும், இயற்கை உயிரினங்களாகவும் இருக்கும். உருவத்துக்கும் உயிருக்குமான இடைவெளியில் நம்பிக்கை உருவத்தையும் உயிராக்கி விடுகிறது. அந்த உயிர்கள் எழுந்து நடமாடத் தொடங்கி விடுகின்றன.

'ஒரே ஒரு ஊரிலே' என்பதான கதைகள் தொடங்கி, நிஜமாகவே நடந்த நிகழ்வுகளும் கதைகளாகவே ஆகிப் போனபோதும் அந்தக் கதைகளில் ஒளிந்திருக்கும் உண்மைகளுக்கு மக்கள் மரியாதை செய்யும் விழாப் பெருமைகளில் அது தொழுவதற்குரியதாகி விடுகிறது.
அப்படியானதொரு கிராமம்தான் சொக்கம்பட்டி.
மதுரை மாவட்டத்து மலையடிவாரத்துக் கிராமம்... சுற்றிலும் பச்சைப் பசேலென்று வானம் பார்த்து வாழக் கூடிய விவசாயிகளின் பூமி... இந்தக் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு அந்தக் கிராமத்தின் வரலாற்றையே மாற்றிவிட்டது. அந்த மாற்றம் இன்றைக்கும் பெரிய அளவில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த விழாவில்தான் குதிரை, காளை, நாக வடிவங்களெல்லாம் வைத்து வழிபடப்பெறுகின்றன. ஊரின் மந்தை என்று அழைக்கப்பெறும் பெரிய திடல் முழுக்க நிரம்பியிருக்கும் அந்த சிலைவடிவங்களோடு நிகழ்வின் கதாநாயகர்களும் சிலைவடிவத்தில் கதைசொல்லியபடி இருக்கிறார்கள்.
"இதோ இங்கே நாலு சாமி இருக்கு பாருங்க... இதுல பெரிசா மீசை வச்சிக்கிட்டு அம்பு, வேலோட இருக்காரே இவரு பேருதான் சொட்டக்கார ஐயா. இவரு திருமலை நாயக்கர் காலத்துல குதிரைப் படையில வீரரா இருந்தாராம்... இங்க பக்கத்துல இவர மாதிரியே இருக்காரு பாருங்க இவரு பேரு ராமண்ணா, அவரோட தம்பி, அவருக்குப் பக்கமா இருக்குது பாருங்க... அது ராசக்கா... இவங்களோட தங்கச்சி" என்று ஆரம்பித்துக் கதைசொல்கிறார்கள் ஊரில்...
திருமலை நாயக்கர் காலத்தில் குதிரைப்படை வீரராக இருந்த சொட்டக்காரரின் தங்கையான ராசக்காளின் மீது மோகம் கொண்டு விட்டான் ஒரு மேலதிகாரி. அவனிடம் இருந்து தப்பித்து இந்தக் கிராமத்து மலைப்பகுதியில் வந்து மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள் மூவரும். மலைப்பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்த இந்தக் கிராமத்து மக்கள் இவர்களைக் கண்டு, தேற்றி நம்பிக்கையும் ஆதரவும் அளித்துக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், யாரோ சிலர் காட்டிக் கொடுக்கத் துணிந்து விட, அதை அறிந்து கொண்ட சொட்டக்காரர் தன் தங்கையையும், தன் தம்பியையும் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டாராம். இவர்களைக் காப்பதற்காக முயற்சி செய்த சன்னாசி என்பவரும் தன்னால் அது முடியாமல் போனதால் இவர்களோடு சேர்ந்து இறந்து போனாராம். தெய்வநிலை அடைந்த சொட்டக்காரர் தன்னைக் காத்த அந்த ஊர்மக்களுக்குத் தான் காவலாக இருப்பதாக உறுதி அளித்து இன்றுவரை அந்த உறுதியைக் காப்பாற்றி வருவதாக கிராம மக்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.
புரவி எடுப்பு என்று சொல்லப்படும் இந்த மண்ணினால் செய்யப்பட்ட திருவுருவங்களின் வழிபாடு ஏறக்குறைய ஏழு ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. சுற்றிலும் இருக்கிற மண்வண்ணக் கலைஞர்கள் குழுமி அந்தத் தெய்வீக நிகழ்வில் தாங்களும் பங்கெடுக்கும் பேற்றோடு ஈடுபடுகிறார்கள்.
மண் எடுப்பதற்குச் சரியான இடம் தேர்வு செய்யப்பெற்று கோயிலுக்கு அருகிலேயே சிலைகள் உருக் கொள்கின்றன. அக்காலங்களில் அவர்கள் விரதமிருந்து அப்பணியை மேற்கொள்கின்றனர். மண்ணைப் பிசைந்து குழைத்து உருவங்களைச் சமைத்து, பாகங்களை வடித்து, பின்னர் நெருப்பிலிட்டுச் சுடுவது வரையிலும் எல்லாமே ஊர்மந்தையில் இருக்கும் கோயிலுக்கு முன்பாகவே நடைபெறுகிறது.
சற்றும் பிசகில்லாமல் பிரம்மாண்டத்தை முன்னிறுத்தும் இரண்டு ஆளுயரக் குதிரைகள் மண்ணினால் செய்யப்பட்டவை என்பது மறந்து போய் கண்முன்னே நிஜக்குதிரைகளையே காட்டுகிற அழகுக் கலைஞர்களின் கைவண்ணம் சொல்லி மாளாது. அத்தனை நளினம்.
அரண்மனைப் புரவி என்று அழைக்கப்படும் இவற்றின்மீது ஏறி நின்று சாமியாடி என்று அழைப்பவர் ஆடிவருகிறார். இவர்மீது சொட்டக்காரர் வந்து அருளுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஊர்மக்கள் அனைவரும் கூடி விழாநாளை நிச்சயிக்க, விருந்தோம்பலுக்கு விரைகிறார்கள். சுற்றிலும் உள்ள கிராமங்களும் சேர்ந்து இந்த உற்சாகத்தில் இணைந்து கொள்ள வியாபாரிகளும், பக்தர்களும் கூட கிராமமே மூன்று மடங்காகி விட்டதாய் மக்கள் வெள்ளம் நிறைகிறது.
மூன்று நாட்கள் நிகழும் இவ்விழாவில் சுமார் அரண்மனைப் புரவிகளைத் தவிர மக்கள் தங்கள் வேண்டுதலுக்காகச் செய்த 200க்கும் மேற்பட்ட காளை, குதிரை, யானை உருவங்கள் அந்த மந்தையையே நிரப்புகின்றன. கிட்டத்தட்ட ஒரு ராஜாவின் பரிவாரங்களைப் போல அணிவகுத்து விடுகின்றன. முதல்நாள்வரையிலும் மண்ணாகவே இருக்கும் அவையாவும் வண்ணம் தீட்டப்பெற்று கண்கள் திறக்கப்பட்ட நிலையில் கலை உருவங்களாக வடிவெடுக்கின்றன.
இரண்டாவது நாளில் மலர்களாலும் இயற்கைப் பொருள்களாலும் அழகூட்டப்பட்டு மந்தையில் கொலுவேற்று நிற்கிறபோது பெண்களின் குலவை ஓசையில் தெய்வீகத் திருவுருவங்களாக மாறிவிடுகின்றன. உண்மையாலுமே கண்களில் ஒளிசிந்துகிறது. இரண்டாம்நாள் முழுவதும் வழிபாடுகள்தான்...
பழங்கள், தேங்காய்கள், பூக்கள், மலர்மலைகள் குவிகின்றன. ஊரெல்லாம் ஒரே நறுமணம், கொட்டும் முழக்கும் சேர்ந்து கொள்ள அந்தக் கிராமத்து மனிதர்களுக்குள் சூழல் இயல்பாகவே பக்தி உணர்வைப் பெருக்கெடுக்கச் செய்து விடுகிறது.
மூன்றாம் நாள் சொட்டக்காரர் தான் தெய்வமாகிய இடத்துக்குப் பரிவாரங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறார். ஊர் கூடிநின்று தங்கள் காவல் தெய்வத்துக்கு மரியாதை செய்து வழியனுப்பி வைக்கிறார்கள்...
கிராமத்துக் கோயிலிலிருந்து மலையில் இருக்கும் கோயிலைச் சென்றடைவதற்கு மூன்று கிலோமீட்டர் தூரம். மலைமீது ஏறி இறங்கினால் அந்தப் பக்கமாய் ஒரு பள்ளத்தாக்கில் மரங்களடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது கோயில்.

கணக்கிட முடியாத கனம் நிறைந்த அந்த அரண்மனைப் புரவிகளைப் பத்திரமாய் தூக்கிச் செல்வதற்கு மனித சக்தி மட்டும் முடியாது என்பதாய் அங்கே பக்தியும் அவர்களோடு கைகோர்த்துக் கொள்கிறது. ஆவேச ஒலிகள் வானைப் பிளக்க ஊர்மக்கள் அந்தப் புரவிகளை மிகக் கவனமாய் மலைமேடுகளில் ஏற்றி, சரிவுகளில் இறக்கித் தங்கள் கண்களைப் போலக் காத்து ஏந்திச் செல்கிறார்கள். பெண்கள் கூடவே  தண்ணீர்க் குடங்களை ஏந்திச் சென்று சூடேறிய அவர்கள் பாதங்களை நனைக்கிறார்கள்.
ஊர் இளைஞர்களின் நம்பிக்கை மிகுந்த தோள்களின் மீதேறிச் செல்லுகிற அவற்றின் மண்உருவங்களில் தெய்வநர்த்தனம் புலப்படுகின்றன. மேலேறி நின்று ஆடுகிறார் சாமியாடி. கையில் மின்னுகிறது ஒரு ஒளிவாள்... அது குறித்தும் ஒருகதை சொல்லுகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாகவும் இருக்கிறது.
'வெள்ளைக்காரன் காலத்துல நடந்த ஒரு புரவி எடுப்புல வேடிக்கை பாக்க வந்த ஒரு துரை, மண்பொம்மையைப் போய்க் கும்பிடுறீகளான்னு கேலி பண்ணி, சாமியாடி குறி சொல்வதையும் பொய்யுன்னு சொல்லிச் சிரிச்சானாம். உடனே சாமி வெகுண்டு போச்சு. உனக்கு எப்படி நிரூபிக்கிறதுன்னு சாமி கேட்க, அந்தத் துரை ஒரு பூட்டியிருந்த பெட்டியக் காட்டி, அதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுன்னுன்னானாம். அதுக்கு சாமி, நீ வச்ச ஒரு பூனை நான் தந்த மூணு குட்டிகளோட உள்ளே இருக்குடா, திறடான்னு ஆவேசத்துல சொல்லிச்சாம். ஊரே கூடி நின்னு பெட்டியத் திறந்தா உள்ளிருந்து குட்டிகளோட பூனை வந்துச்சாம். அந்தத் துரை பயந்து வணங்கி தன் கையிலிருந்த வாளை சாமி கையில கொடுத்து மன்னிப்புக் கேட்டானாம்' என்று அந்த வாள்வந்த கதையைச் சொல்லுகிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.
இதுபோலப் பலகதைகள், பலவாறு செவிவழியாகவே சொல்லப்பட்டு வந்தபோதும்,  சொட்டக்காரரின் பெயர் அந்த ஊர் மக்களுக்கு சத்தியவாக்கு ஆகிவிட்டது. சொட்டைக்காரர் மீது சத்தியம் என்றால் அங்கே பொய்க்கோ, ஏமாற்றுக்கோ, வஞ்சகத்துக்கோ வேலையில்லை. பிரச்னைகள் எல்லாம் அவர் சந்நிதி முன்பு சற்றும் ஒலியெழுப்பாமல் சரணடைந்து போகின்றன. 
தெய்வமே காவல் என்று ஏற்றுக் கொண்ட பின்னால் தங்கள் ஊருக்குள் கிராமமக்கள் காவலர்களைக் கூட அனுமதித்ததில்லை. பாதுகாப்பிலிருந்து தொடங்கி எதற்கும் ஊர்மக்கள் தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு தங்களைத் தாங்களே காத்துக் கொள்கிறார்கள். காவலர்கள் கடமைக்காய் வந்து உடன் இருக்கிறார்கள். சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கு மத்தியில் திருவிழாவில் கூடப் பிரச்னை இல்லாத ஒரு கிராமம் அவர்களுக்கு அதிசயமாய்ப் படுகிறது.
பேதங்களை வளர்க்கிற சாதி, மத, அரசியல் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் ஊருக்குள் அனுமதிப்பதே இல்லை. கட்சிக்கொடிகள் தொடங்கி போஸ்டர்கள், கட்அவுட்டுகள் என எதற்கும் அங்கே அனுமதி கிடையாது. ஊர்க் கட்டுப்பாடு என்றால் சொட்டக்காரரின் பெயரைச் சொல்லித் தலைவணங்கி ஏற்கிறார்கள்.
புகைபிடிப்பதற்கும், குடிப்பதற்கும் தடைபோட முடியாவிட்டாலும் விழாக்காலங்களில் அதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு. பெண்களின் பாதுகாப்பைப் பெரிதும் போற்றுகிற இவர்கள், அவர்களைத் தாய்மை உணர்வோடு நடத்துகின்றனர்.
இயற்கைக்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்து விடாமல் இவர்கள் வழிபடுகிற போதில் பூமித்தாய் உள்ளம் குளிரும்படியாக மழையும் வந்து விடுகிறது.
திருவிழாவின்போது உள்ளூர் இளைஞர்கள் தொண்டர்களாகி விடுகிறார்கள். தங்களுக்கென தனித்த சீருடை அணிந்து கொண்டு கையில் கோலேந்திச் சொட்டக்காரரின் சேவகர்களாகப் பொதுமக்களுக்குத் தொண்டு புரிகிறார்கள். எல்லார் வீடுகளிலும் விருந்து மணக்கிறது. குழந்தைகள் முதற்கொண்டு முதியோர் வரைக்கும் புத்தாடை புனைந்து கொண்டு கொண்டாடுகிறார்கள்.
மற்றவர்களுக்கு இதுபெரிய கொண்டாட்டமாக இருந்தாலும், பொறுப்பாளர்களுக்கு அதிகக் கவலை வந்து விடுகிறது. எந்தக் குற்றமும் நடக்காமல், அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்து விடாமல், ஊர்மக்களின் பாதுகாப்போடு திருவிழா இனிது நடந்தேற வேண்டுமே என்ற பொதுவான கவலைதான் அது... ஒவ்வொரு முறையும் திருவிழாக் கூடும்போது தாங்கள் நெருப்பில் நடப்பவர்களைப் போல உணருகிறார்கள் அவர்கள். ஒவ்வொரு திருவிழாவிலும் பெற்ற அவர்களின் அனுபவங்களே தனிக்கதைகளாகின்றன.
இந்த மண் உருவங்களையெல்லாம் உருவாக்குவதில் தொடங்கி திருவிழாவை நடத்தி எவ்விதமான சேதமும் இல்லாமல் பத்திரமாகச் சுமந்து சென்று மலைக்கோயிலில் சேர்ப்பிப்பது எத்துணை சுகமுடைய சுமையான தெய்வப்பணி என்பது, வெறுங்கையோடு மலையேற முடியாமல் மூச்சிரைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிற நமக்கு, சுமந்து வருகிற அவர்களை நிமிர்ந்து பார்க்கிறபோது புலப்பட்டு விடுகிறது.
திரைப்படம், கரகாட்டம், நாடகம், கலைக்கூத்துகள் என எங்கும் இசைவெள்ளம் நிறைந்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் மீறி அருள்வந்து ஆடுகிற சொட்டக்காரச் சாமியின் சலங்கை ஒலி காதுக்குள் ஒலிக்கிறது. மரங்கள் அடர்ந்த மலைக்கோயிலில் அவர்கள் நால்வரும் தெய்வநிலை அடைந்த இடத்தில் நிற்கிறபோது நம்முள்ளே ஒரு சிலிர்ப்பு நம்மையறியாமலேயே ஏற்படுகிறது.
வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தொழில்நிமித்தம் சென்றிருக்கக்கூடிய உள்ளூர்வாசிகள் கண்டிப்பாய் வந்து கலந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் சொட்டக்காரரின் விபூதி பிரசாதம் ஏர்மெயிலிலும்  வெளிநாடுகளுக்குப் போய் அருள்பாலிக்கிறது.
இப்போதெல்லாம் வெளிநாட்டு ஆர்வலர்கள் நிறைய வருகிறார்கள். புகைப்படம் எடுக்க வந்த இவர்களுக்கு இந்தக் கிராமத்து மனிதர்களின் பக்தியும் அன்பும் பேரின்பத்தைத் தருகிறது. அவர்களும் தங்களை அந்தக் கிராமத்தில் ஒருவராகவே பாவித்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக அயல்நாட்டுப் பெண்கள் அத்திருவிழாவில் பூச்சூடிக் கொள்வதும், மலையேறி மக்களோடு சேர்ந்து நடப்பதும் உண்டு.
உண்டென்பதும் இல்லையென்பதும் அவரவர் தனிக்கருத்து என்றாலும் கடவுளைக் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கையை நிஜமாக நடந்த ஒரு கதையின்மூலம் உணர்ந்து கொண்ட அவர்கள் அந்தச் சக்தியின் முன்னால் சரணாகதி அடைந்து பேரின்பம் அடைகிறபோது நாமும் அவர்களோடு கலந்து போகிறோம்.
திருவிழா முடிந்து கிராமம் ஓய்ந்து போன பின்னாலும் அந்த மூன்று நாட்களின் வண்ணஷாலமான பதிவுகள் மனதுக்குள்ளேயே பசுமையாகப் பதிந்து போய்விடுகின்றன நமக்கும்... கூடவே சொட்டக்காரரின் பெயரும் கதையும் சேரக் கிராமத்திலிருந்து திரும்பி வரும்போது சொர்க்கத்திற்கே போய்விட்டு வந்த உணர்வு கிடைக்கிறது. கூடவே ஏக்கமும்... இன்னும் அடுத்த திருவிழாவிற்குப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டுமே..!

1 comment: