'இன்னும் ஒரு நிமிடம் மௌனமாக நின்றால், தன்னை பரிதாபப் பார்வை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்' என்பதை உணர்ந்த ஜெஸிக்கா, "கம்பெனியை திறம்பட நடத்துவது எப்படி என்பது சொல்லிக் கொடுப்பதில் நான் 'கை' தேர்ந்தவள் இல்லைதான். ஆனால்... தடைகளை எப்படித் தாண்டி வருவது என்பதை என் அனுபவம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடும்" என்று ஆரம்பிக்க, சில நிமிடங்களிலேயே ஜெஸிக்காவின் பேச்சோடு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒன்றி விட்டார்கள்.
ஆம்!  தன்னுடைய வாழ்க்கையைத்தான் அடுத்தவர்களுக்கு பாடமாக சொல்கிறார் அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த இந்த ஜெஸிக்கா. பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல்  பிறந்த குழந்தையான ஜெஸிக்காவைப் பார்த்துப் பதைபதைத்துப் போன தாயும்,  தந்தையும் 'எப்படியாவது மகளின் குறையைச் சரிசெய்துவிடவேண்டும்' என்று  துடித்தார்கள். உலகத்தின் எந்தனை பெரிய மருத்துவமனைக்கு சென்றாலும், எத்தனை  பெரிய டாக்டரைப் பார்த்தாலும் அந்தக் கைகளைச் சரி செய்ய முடியாது என்பதை  ஒருகட்டத்தில் உணர்ந்தவர்கள்... ஜெஸிக்காவின் மீது நம்பிக்கை வைக்கத்  துவங்கினார்கள். 
இதையெல்லாம் பார்த்து எல்லோரும் அசந்து கொண்டிருக்க... அத்தனைக்கும் சிகரம் வைத்த மாதிரி, யாரின் துணையும் இல்லாமல் பயிற்சி விமானத்தில் தன்னந்தனியாக பறந்து ஜெஸிக்கா சாதனை படைக்க... அரசு விமான பைலட்டுக்கான உரிமத்தை சமீபத்தில் கொடுத்திருக்கிறது அமெரிக்க அரசு.
"விமானத்தின்  காக்பிட்டில் உட்கார்ந்தபிறகு ஸீட் பெல்ட் போடுவதைவிட, ஸீட்பெல்ட்  போட்டுக்கொண்டே உட்காருவதுதான் வசதி என்பது துவங்கி, விமானம் ஓட்டுவதில்  இருக்கும் ஒவ்வொரு நுட்பமான விஷயத்தையும் எனக்கேற்றவாறு கற்றுக்கொள்ள  எனக்கு மூன்று பயிற்சியாளர்களும் மூன்று வருடங்களும் தேவைப்பட்டன!"  என்கிறார் ஜெஸிக்கா எளிமையாக. மனிதன், இயற்கையின் படைப்பு! என்றாலும் அது எல்லோரையும் சமமாக படைத்துவிடுவதில்லை. அவ்வப்போது தப்புகளையும் தவறுகளையும் செய்துவிடுகிறது இயற்கை. ஆனால், 'அதையெல்லாம் தன்னம்பிக்கையால் திருத்த முடியும்' என்று செயலில் காட்டிக் கொண்டிருக்கும் ஜெஸிக்கா, உலகத்துக்கே ஓர் உன்னத உதாரணம்!

No comments:
Post a Comment