Tuesday, August 10, 2010

ஓங்கி.ஒலிக்கும் லோக்கல் கால்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரி மாணவனுக்கு செல்போன் வாங்கித் தர யோசித்த பெற்றோர்கள், இன்று ஸ்கூல் செல்லும் குழந்தைக்குக்கூட மொபைல் போன் வாங்கித் தருகின்றனர். குழந்தைக்கு எதற்கு செல்போன் என்று கேட்டால் விலை மிகவும் குறைவு என்பதே அவர்கள் சொல்லும் காரணம். இன்று ஆயிரம் ரூபாய்க்கே செல்போன்கள் கிடைப்பதால் ஒரு வீட்டுக்கு குறைந்தது மூன்று செல்போன்களாவது இருக்கும் நிலை வந்துவிட்டது. நகரத்தில் மட்டுமல்ல, கிராமத்திலும் இதே மாதிரியான வளர்ச்சியை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
முன்பு ஒரு சிம்கார்டு போனை வைத்திருந்தவர்கள் இன்று இரண்டு சிம்கார்டு செல்போன்களை வைத்திருக்கின்றனர். தினம் ஒரு வசதி செல்போன் தொழில்நுட்பத்தில் வந்து கொண்டிருப்பதால் அடிக்கடி போன்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் மக்கள். இதனால் செல்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிகராக தற்போது இந்திய நிறுவன செல்போன்களும் சக்கை போடு போட்டுக் கொண் டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் எட்டு மில்லியனாக இருந்த சந்தை தற்போது 11 மில்லியனாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
எக்ஸ்பிரஸ் வேக வளர்ச்சி!
சில ஆண்டுகளுக்கு முன்பு பேசுவதற்கு மட்டுமே பயன்படுத் தப்பட்ட செல்போன், நாளடைவில் பல தேவைகளைப் பூர்த்தி செய்தது. கேமிரா, ரேடியோ, டி.வி, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., என பல விதமான பயன்பாட்டுக்கு உபயோகப்படுகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், இருந்த இடத்திலிருந்து தகவல் களைப் பரிமாறிக் கொள்ளவும் செல்போன் மிகவும் சௌகரியமாக இருந்ததால், குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய அளவில் மக்களிடம் இடம் பிடித்தது. மேலும் வரப்போகும் 3ஜி, 4ஜி போன்ற தொழில்நுட்ப வசதிகள் புதிய புரட்சியையே உருவாக்கப்போகின்றது. 3ஜி மூலம் இந்தியாவில் அடுத்த 2-3 ஆண்டுகளில் 7 கோடி புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கணிப்பு ஒன்று சொல்கிறது.
இந்திய மொபைல்கள்!
இந்திய மொபைல் போன் சந்தையை நோக்கியா, சோனி எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் ஆக்டோபஸ்ஸாக ஆக்கிரமித்திருந்த நிலையில் தற்போது மாற்றங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. உள்நாட்டுத் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ், கார்பன், சென், லாவா போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பு சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் முன்னணி பிராண்டட் செல்போன்களில் இருக்கும் அத்தனை வசதிகளும் இந்த செல்போன்களில் இருப்பதால் மக்களை இவை வெகுவாகக் கவருகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்த நேரத்தில் டி.வி.க்களில் விளம்பரம் செய்ததன் மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மக்களிடம் நன்கு பிரபலமடைந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செல்போன்களைவிட இவை 50 சதவிகிதம் விலை குறைவு என்பது இன்னொரு ஆச்சரியம்.
ஏற்கெனவே செல்போன் நிறுவனங்களின் வளர்ச்சி நகரங்களில் 110 சதவிகிதத்தை எட்டிவிட்டதை அடுத்து, இந்த இந்திய தயாரிப்புகள் கிராமங்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் ஆண்களை மட்டுமே குறிவைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பெண்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் தற்போது சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மைக்ரோமேக்ஸ் கியூ 55 ரக மாடல். இது பெண்களை வெகுவாகக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனத் தயாரிப்பு!
இந்திய தயாரிப்பு என்று சொன்னாலும்கூட, பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவிலிருந்துதான் போன்களை வாங்கி சந்தைக்கு விடுகின்றன. ஸ்பைஸ், கார்பன், லாவா போன்ற நிறுவனங்கள் விற்கும் செல்போன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைதான். இதற்கு முன்பு வந்த கொரியன் செல்போன்கள் பிராண்டட் மொபைல்களை அப்படியே காப்பியடித்து உருவாக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்திய நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்துவரும் போன்கள் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி, மல்டிநேஷனல் கம்பெனிகளின் தயாரிப்புக்கு இணையாகக் கொடுக்கிறது. பிராண்டட் செல்களில் இருக்கும் சகல வசதிகளும் இந்த போன்களில் இருப்பதால் மக்களும் அதிகளவில் வாங்குகின்றனர்.
ஒரே மாடல் செல்போன்களை அதிக நாட்கள் பயன்படுத்துவது தற்போது குறைந்துவிட்டது. சந்தைக்குப் புதிதாக வரும் மாடல்களை அடிக்கடி மாற்றுவதற்கும் இது போன்ற குறைந்த விலை செல்போன்கள் சுலபமாக உள்ளது. நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் அதிகளவில் வாங்குவது லோக்கல் போன்களையே. முக்கியமாக இரண்டு சிம்கார்டுகள், அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி போன்றவை பிராண்டட் போன்களில் எதிர்பார்க்க முடிவதில்லை. கிராமங் களில் மின்சாரம் அதிக நேரம் இருப்ப தில்லை. அவர்கள் நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி கொண்ட செல்போன்களே அதிகளவில் வாங்குகின்றனர். இந்திய மக்களின் தேவைகளை அறிந்து மக்களுக்கு அதனைக் கொடுப்பதில் லோக்கல் நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டு கின்றன. அதுவே அவர்களது சக்சஸ் ஃபார்முலாவாகவும் உள்ளது.

''இன்னும் அபாரமாக வளரும்!''
மல்டி நேஷனல் நிறுவனங்கள் தங்களது டீலர்களுக்கு வழங்கும் லாபத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்நாட்டு நிறுவனங்கள் வழங்குவது முக்கியமான விஷயம். இது குறித்து யுனிவெர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ்பாபுவிடம் பேசினோம்.
''செல்போன் என்பது மினி கம்ப்யூட்டராகவே மாறி விட்டது. செல்போன் கையில் இருந்தால் அலுவலகமே தங்களுடன் இருப்பதாக உணர்கின்றனர். இரண்டு மணி நேரம் கிடைத்தால் லேப்டாப், அதுவே அரைமணி நேரம் இருந்தால் மொபைல் போன் மூலமாக ப்ரவுசிங் செய்யவே மக்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இந்திய அளவிலான மொபைல் போன் சந்தையில் 29 முதல் 30% விற்பனையை தமிழ்நாடு கொண்டுள்ளது. இரண்டு செல் போன்கள், இரண்டு சிம்கார்டுகள் கொண்ட மொபைல்களைதான் மக்கள் அதிகளவில் தற்போது பயன்படுத்துகின்றனர்.
22 மாதங்களுக்கு ஒரு முறை ஒருவர் தனது செல்போனை மாற்றுவதாக ஆய்வு கூறுகிறது. சந்தையில் அதிக நாள் இருக்கும் மாடல்களை மக்கள் விரும்புவது இல்லை. புதிது புதிதாக சந்தைக்கு வரும் மாடல்களையே அதிகம் விரும்புகின்றனர். எனவே செல்போன் தயாரிப்பு நிறுவனங் களும் ஒரு மாடல் சந்தைக்கு வந்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதை நிறுத்திவிட்டு, அடுத்த மாடலை அறிமுகம் செய்துவிடுகிறது.
மேலும் தற்போது புதுப்புது பிராண்ட்கள் சந்தைக்கு வருகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு நாள் புது பிராண்ட் என்கிற கணக்கில் புதிய செல்போன்கள் சந்தையில் அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 90 வகையான செல்போன் பிராண்ட்கள் உள்ளது.
இ.எம்.ஐ. நம்பர் இல்லாத செல்போன்களை அரசு தடை செய்ததை இந்திய செல்போன் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. விலை குறைவாக இருக்கும் இந்திய செல்போன்கள் மற்ற முன்னனி பிராண்டட் மொபைல்களுக்கு இணையாக தரமான பேட்டரி, நிறைய பயன்பாடுகள், இரண்டு சிம்கார்டு வசதிகள் என மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தன.. மெமரி கார்டு கொண்ட பிராண்டட் செல்போனின் விலை 3000 ரூபாய்க்கு மேல்தான்.
ஆனால் அதே வசதிகள் கொண்ட லோக்கல் மொபைல்கள் 1000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இருப்பினும் பிஸினஸ் போன்கள், ஆபீஸ் போன் களைப் பொறுத்தவரை பிளாக்பெரி, நோக்கியா இ சீரிஸ் போன்ற பிராண்டட் அயிட்டங்களையே விரும்புகின்றனர்.
3-ஜி வந்தபின்பு மொபைல் மார்க்கெட் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும். பெரிய திரையில் பார்த்த விஷயங்கள் அனைத்தும் இனி சிறிய திரையில் கைக்குள் வந்துவிடும். வீடியோ காலிங், பிராட்பேண்ட், பேங்கிங், டி.வி. என அனைத்தும் உள்ளடக்கிய 3-ஜி வந்த பின்பு இதன் வளர்ச்சி இன்னும் எண்ணி பார்க்க முடியாத இடத்திற்குச் செல்லும். மேலும் தமிழகத்தில் மட்டும் 12 நிறுவன ஆப்ரேட்டர்கள் இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆப்ரேட்டர்கள் புதிதாக வரவுள்ளனர். இதனால் நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் குறைவான கட்டணத்தில் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகள் வழங்குவதால் செல்போன்களின் விலை இன்னும் குறையவே வாய்ப்பிருக்கிறது. குறைந்த பணத்தில் நிறைவான பலனை அளிப்பதால் செல்போன்களின் வளர்ச்சி வரும் காலத்தில் இன்னும் அபாரமாகவே இருக்கும்'' என்றார்.
இந்திய மொபைல்கள் மட்டுமல்ல, இனிவரும் நாட்களில் செல்போன் சார்ந்த உதிரி பாகங்களின் விற்பனையும் அதனைச் சார்ந்த தொழில்களும் சக்கை போடு போடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment