'அடடே நன்றாகத்தான் இருக்கிறது கதை' என்கிறீர்களா? இது கதையல்ல... இதில் சொல்லப்பட்ட சம்பவங்களும், கண்ணீரும், போராட்டங்களும் நிஜமோ நிஜம். ஆனால், சம்பவம் நடந்தது இங்கல்ல, தென்னாப்பிரிக்காவில். அந்த தென்னாப்பிரிக்க சாந்தியின் பெயர் கேஸ்டர் செமன்யா.
சர்வதேச போட்டிகள் ஒவ்வான்றாக ஓடியோடி தங்கங்களை வாரிய செமன்யாவுக்கு, இறுதி இலக்காக ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று, தன்னை செதுக்கிய தாய்நாட்டுக்குப் பெருமைச் சேர்க்க வேண்டுமென்பது கனவு. செமன்யாவின் அந்தக் கனவை தென்னாப்பிரிக்க தேசத்து மக்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக நம்பினர். அவரை உற்சாகப்படுத்துவதற்காகவே நாட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு செமன்யாவின் பெயரைச் சூட்டினார்கள்.
தேசத்துக்கு நற்செய்தி கிடைத்தது! சென்ற வருடம் ஆகஸ்ட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் செமன்யா. தங்கள் வீட்டுப் பெண்ணே வென்றதாக தென்னாப்பிரிக்க மக்கள் மகிழ்ந்தனர். ஆனால், அந்த சந்தோஷத்துக்கு ஆயுள் அத்தனை கெட்டியாக இல்லை.
பெருமிதத்தோடு தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்த செமன்யா, பாதியிலேயே சோர்ந்து போனார். ஆனால், அவரை வரவேற்க ஜோஹன்ஸ்பெர்க் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் வெள்ளம் துளியும் கலையவில்லை. ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்களில் இம்மி பிசகாது தங்களது வீராங்கனையை பெருமிதத்தோடு கௌரவித்தார்கள். செமன்யா, அதிபர் மாளிகைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அதிபர் ஜேக்கப் ஜுமா, வரவேற்று வாழ்த்துக்கள் சொன்னதோடு, 'பதக்கத்தைத் திருப்பித் தரவேண்டாம். சர்வதேச அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று தைரியம் சொன்னார்.
அதிபர் மட்டுமல்ல... செமன்யாவுக்கு ஆதரவாக நாடே உணர்வுப்பூர்வமாக திரண்டது. வழக்கமாக உலகப் பிரச்னைகளில் அடையாளம் காணப்படும் கறுப்பு - வெள்ளை கச்சேரி இதிலும் களைகட்டியது. இன துவேஷத்தோடு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மருத்துவ அறிவியலைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, செமன்யாவை வார்த்தைகளால் சுட்டன.
தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை தலைவர் லியோனார்ட், "எங்கள் நாட்டுப் பெண்ணை வரையறை செய்ய ஐரோப்பியர்கள் யார்? உங்கள் உயிரியல் பரிசோதனைகளை தூக்கி உடைப்பில் போடுங்கள். எங்களைப் பொறுத்தவரை செமன்யா பெண்தான். அவள் எங்கள் தேசத்தின் ஹீரோயின். செமன்யாவுக்கு நியாயம் கிடைக்க எந்த உச்ச வரையறையையும் உரசிப் பார்க்க நாங்கள் தயார். இந்த விவகாரத்தில் மூன்றாம் உலகப்போரே மூண்டாலும் சரி... நாங்கள் சும்மா விடப்போவதில்லை" என்றார் உச்சகட்ட கோபத்தோடு.
அமைச்சரின் இந்த உஷ்ணம் மக்கள் கொந்தளிப்பின் ஒட்டுமொத்த பிரதிலிப்பு. தென்னாப்பிரிக்காவின் இந்த எழுச்சி உலககெங்கிலும் மருத்துவம், உளவியல், விளையாட்டு, அரசியல் என பலப்பல மட்டங்களிலும் ஆரோக்கிய விவாதங்களை கிளப்பிவிட்டது.
குறிப்பாக, பாலினம் பற்றி உலக சமுதாயத்தில் ஆரோக்கியமான அனுகூலங்கள் உரசிப் பார்க்கப்பட்டன. உளவியல்பூர்வமாகவும் சரி, உடலியல்பூர்வமாகவும் சரி... ஆண் என்றோ, பெண் என்றோ திட்டவட்ட வரையறைகள் சொல்லிவிட முடியாது என்பதுதான் உண்மை. உணர்வுப்பூர்வமாக ஒவ்வொரு ஆணும் சில சந்தர்ப்பங்களில் தன்னுள் பெண்மையை உணர்வதும், ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் ஆண்மையை உணர்வதும் இயற்கையே. ஆண், பெண் தன்மைகளை தீர்மானிக்கும் ஹார்மோன்கள் எதிரெதிர் பாலினரிடமும் ஓரளவு உண்டு என்பதும் மருத்துவ உண்மை. இந்த ஹார்மோன் விகிதாச்சாரம், சிலசமயம் களேபரமாகும்போதுதான் சாந்திக்களும், செமன்யாக்களும் உயிரோடு அணு அணுவாகக் கொல்லப்படுகிறார்கள்.
செமன்யாவின் கண்ணீர் துடைக்க ஒவ்வொரு தென்னாப்பிரிக்கரும் முன்வந்தார்கள். உலக கவன ஈர்ப்பாக குடிமக்கள் ஏற்பாடு செய்த பிரமாண்ட பேரணியில் அதிபர் ஜேக்கப் ஜுமா கலந்து கொண்டார். செமன்யா... விளையாட்டு வீராங்கனை, பெண் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதப் பிறவியாக அவரது சிவில் மற்றும் லீகல் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று சொல்லி, சட்ட பாதுகாப்புக்காக 'டீவி அண்டு லிபோயட்' என்ற சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனத்தை நாடினார் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர்.
தென்னாப்பிரிக்க ஃபேஷன் பத்திரிகைகள், செமன்யாவின் படங்களை அட்டையில் தாங்கி அழகாக வெளியாகின. சர்வதேச விளையாட்டு ஆணையத்தின் மருத்துவப் பரிசோதனை முறைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. 'ஆணாதிக்க வெளிப்பாடே இந்த சச்சரவுகளுக்கு ஆழமான காரணம்' என்று சர்வதேச பெண்ணிய அமைப்புகள் சப்போர்ட்டுக்கு வந்தன.
இப்படியாக ஒரு சாதாரண கறுப்பின பெண்ணை மையப்படுத்தி இனவெறி, பெண்ணியம் என்றெல்லாம் சமுதாய சுனாமி உருவாவதை பார்த்து சர்வதேச தடகள விளையாட்டு ஆணையம் மிரண்டது. ஒருவழியாக ஓர் ஆண்டு இழுபறிக்குப் பின், ஜூலை ஆறாம் தேதி செமன்யாவுக்கு எதிரான தடைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தனக்காக போராடிய தேசத்துக்கு நன்றிக்கடன் தீர்க்க இப்போது நெகிழ்ச்சியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் கேஸ்டர் செமன்யா. அக்டோபர் காமன்வெல்த் போட்டிகளில் அவரின் மின்னல் ஓட்டம் காத்திருக்கிறது.
சரி... இனி நம் தேசத்துக்கு வருவோம். எப்படி இருக்கிறார் புதுக்கோட்டை சாந்தி?
காந்தி, பின்னாளில் மகாத்மா என்று உருவாவதற்கு தென்னாப்பிரிக்க ரயில் சம்பவ மும் ஒரு காரணம் என்பது வரலாறு. மகாத்மா காந்திக்கு வழி செய்த தென்னாப்பிரிக்கா, அபலை சாந்திக்கும்கூட வழி காட்டியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் சாந்திகள் கடைத்தேறுவது நம்மூரில் சாத்தியம்தானா?

No comments:
Post a Comment