Saturday, August 7, 2010

'கப்பு' அடிக்கும் 'பப்' கலாசாரம்...

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவரை கடந்த 2-ம் தேதி காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல், நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து பணம், பிரேஸ் லெட்டைப் பிடுங்கிவிட்டு ஒரே நாளில் விடுவித்தது. 'டிஸ்கொதே பப்பில் என்னுடன் நிறைய இளம் பெண்கள் ஆடியதால் ஆத்திரம் அடைந்தவர்கள், இவ்வாறு செய்தனர்...' என்று அந்த மாணவர் புகார் கொடுத்தார். பரபரவென களம் இறங்கிய போலீஸார், சில மணி நேரத்திலேயே ஆறு பேரைப் பிடித்தனர். ஆனால், பிடித்த வேகத்திலேயே கையைச் சுட்டுக்கொண்டதுபோல, ஆறு பேர் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவர்களை ராஜமரியாதையுடன் அனுப்பி வைத்திருக்கிறது காவல் துறை.
இதன் பின்னணியை விசாரித் தால் 'பப்'களில் நடக்கும் மலைக்க வைக் கும் பெரிய இடத்து தொடர்புகள் கொட்டுகின்றன!
டெல்லியைச் சேர்ந்தவர் உத்கார் சவுக். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்.

இவருக்கு சென்னையில் இருக்கும் பிரபல டிஸ்கொதே பப்களில் பரிச்சயம் உண்டு. சில பார்களில் டிஸ்கோ ஜாக்கியாக பார்ட் டைம் வேலையும் பார்த்தார். இதனால், நிறைய இளம் பெண்களுடன் இவருக்கு நெருக்கமான பழக்கம் உண்டு. இந்த நிலையில்தான், இவர் கடத்தப்பட்டார். நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''நாங்கள் ஏதோ ரவுடிகளாக இருக்கலாம் என்று நினைத்து ஆறு பேரையும் பிடித்தோம். அப்புறம்தான், அவர்கள் பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரிந்தது. அதிலும், ஒருவன் பிளஸ்-டூ மாணவன்! நாங்கள் பிடித்தபோதே, 'தேவையில்லாம கைவைக்காதீங்க. ஸ்டேஷனுக்கு எங்களை கூட்டிட்டுப் போகிறதுக்குள்ள உங்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடும்'னுதெனாவெட்டாக பேசினார்கள். சும்மா உதார் விடுகிறார்கள் என்று நினைத்து ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போனோம். வழக்கு பதிவுசெய்ய ஏற்பாடு நடந்துட்டு இருக்கும்போதே, 'அவங்களை உடனடியா அனுப்பிடுங்க. மரியாதைக் குறைவாக அவங்களை நடத்த வேண்டாம். முடிஞ்சா ஒரு 'ஸாரி' கேட்டுக்கோங்க...'னு எங்களுக்கு சொல்லப்பட்டது. அப்புறம்தான், வட சென்னையை ஆள்கிற ஒருவர் அந்த பசங்களுக்காக பேசி இருக்காருன்னு தெரிஞ்சது...'' என்றார்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல... சென்னை நகரிலும் அதன் கிழக்குக் கடற்கரை சாலையிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான டிஸ்கொதே பப் மற்றும் பார்களில் தினமும் நடக்கும் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அளவே இல்லை. இதுபோன்ற பப்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சிலரிடம் பேசினோம்.
''இங்கே சாதாரண ஆளுங்க போறது அத்தனை சுலபமில்லை. வருபவர்கள் அனைவருமே மிக செல்வாக்கான ஆட்கள். தொழில் நிறுவனத்தைக் கட்டியாளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், பப்பில் தனது கணவரோடு டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது, இன்னொரு பெரிய குடும் பத்து இளைஞர் ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். பெரிய அடிதடியாகி அந்த பப்பே நொறுங்கியது. உடனடியாக, அந்த நிறுவனத்தின் முக்கிய நபர், இங்கு இருக் கும் முக்கிய நபருக்குபேசி இருக்கிறார். கூடவே, அந்த வாரிசுகள் பப்புக்குள் நடத்திய கூத்துகளின் வீடியோ காட்சிகள் இருப்ப தாக எச்சரிக்கும் தொனியில் அவர் சொல்ல... இப்போது அந்தப் பெரிய குடும்பத்து ஆட்கள் இந்த நிறுவனத்தின் பப்புகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்ல தடையே போடப்பட்டு இருக்கிறது...'' என்கிறார்கள்.
இன்னொருவர், ''சென்னையில் பப்புகளில் அடாவடியாக ஆதிக்கம் செய்பவர்கள் என சுமார் 70 பேர் வரை இருக்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தமுக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் மற்றும் நண்பர்கள். இதனால், பிரச்னை என்று வந்தால் அடிதடியும் பெரிய அளவில்தான் இருக்கும். இங்கு பெண்ணை அடிப்படையாக வைத்துத்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. 'அவனோட ஃபிகரை நாளைக்கே நான் கரெக்ட் பண்றேன் பாரு...' என்று லட்சக்கணக்கில் பந்தயம் கட்டுவார்கள். அதுபோலவே, மறுநாள் அந்தப் பெண் இவனுடன் ஆடிக்கொண்டு இருக்கும். இப்படியே அடுத்தடுத்து ஈகோ பிரச்னைகள் வளர்வதால் அடிதடி நடக்கிறது.
ஒன்றரை மாதங்களுக்குமுன்பு நடந்த சம்பவம் இது... அண்ணா சாலையில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு காசு கொழிக்கும் அந்த அரசியல் நடிகர் ரெகுலராக வருவார். அவருடன் சுமார் 10 பேர் வருவார்கள். அவர் வந்தவுடன்... பப்புக்குள் டிஸ்கோ ஜாக்கிகள் ரெகுலராக சரிக்கட்டி வைத்து இருக்கும் சில ஹை-கிளாஸ் பெண்கள், அவருடன் ஆடத் தொடங்கி விடுவார்கள். போகும்போது அந்தப் பெண்களையும் டிஸ்கோ ஜாக்கிகளையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் குளிப்பாட்டி விட்டுத்தான் போவார்.
ஒருமுறை அரசியல் நடிகருடன் ஆடிக்கொண்டு இருந்த பெண்ணை 'அண்ணாநகர் கேங்க்' என்று அழைக்கப்படும் முன்னாள் தாமரை பிரமுகரின் வாரிசு ஒருவர் தள்ளிக்கொண்டு போக... இருவருக்கும் நடந்த அடிதடியில் அந்த அரசியல் நடிகர் மூக்கில் பேண்டேஜுடன் திரிய வேண்டியதாயிற்று. அதேசமயம், இவர்களை சமாதானம் செய்ய வந்த பொறியியல் கல்லூரி மாணவரான பகுதி நேர பப் ஊழியர் ஒருவர், பீங்கான் பூ ஜாடியால் மண்டையில் தாக்கப்பட்டார். இதில், அவர் மருத்துவமனையில் உயிர்ப் போராட்டம் நடத்தி, லட்சக்கணக்கில் செலவு செய்து சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
அவர், மருத்துவ செலவுக்கு என்று அந்த அரசியல் நடிகரிடம் பணம் கேட்க... இன்று வரை இதோஅதோ என்று இழுத்தடித்து வருகிறார். அதேசமயம், இரண்டொரு நாளில் சண்டை போட்டுக்கொண்டவர்கள், அதே பப்பில் பரஸ்பரம் மாறி மாறி, 'ஸாரி' சொல்லி ராசியாகிவிட்டார்கள். விடியற்காலை வேளைகளில் இருவரும் ஒரே காரில் ஒரே பெண்ணுடன் இருக்கும் அளவுக்கு இப்போது அவர்கள் திக் ஃப்ரண்ட்ஸ்..! இவர்களை எக்மோரில் இருக்கும் ஒரு பப்பில் அடிக்கடி பார்க்கலாம்.
டெல்லி வரை செல்வாக்குள்ள இன்னொரு பெரிய இடத்துக்காரர், தி.நகரில் நடத்தும் பப் மிகப் பிரபலமானது. இந்த பாரில் வருபவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவ, மாணவிகளே. இங்கு இருக்கும் சிறு சிறு கேபின்களுக்கு 3,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஜோடிகளை உள்ளே அனுப்பி 'எப்படி வேணும்னாலும் இருந்துக்கோ' என்று கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இதே தி.நகரில், வேறொரு கட்சிப் பிரமுகர் நடத்தும் பப்புக்குள் நிழல் உலக பேரங்கள் அத்தனையும் முடிக்கப் படுகின்றன. கஸ்டம்ஸ் வட்டாரத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த பப்பின் ரெகுலர் கஸ்டமர்கள். வெளிநாட்டு தொடர்பில் இருக்கும், 'கொக்கு, குருவிகள்' வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதியம் இரண்டு மணிக்கே இங்கு ஆஜராகி விடுவார்கள். புதிய ஆட்களுக்கு அனுமதி கிடையாது.இதே பாணியில்தான் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒரு பப் செயல்படுகிறது. விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே இந்த பப்பில் அனுமதி. ஆனால், வெளிப்பக்கமாக இருக்கும் இன்னொரு நுழைவுவாயில் மூலமாக ரெகுலராக வரும் வெளியாட்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு காலை ஆறு மணிக்கே ஆட்டம் தொடங்கிவிடும். நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு நபர் தினசரி மாலை நான்கு மணிக்கு வருவார். இளம் பெண்கள்தான் இந்த நபரது டார்க்கெட். பப்புகளில் தன்னுடன் ஆடும் பெண்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று திரும்ப வரும்போது வைர நகைகளை பரிசளிப்பது இவரது பாலிசி. விமானப் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த குடும்பத்தினரும் இவருடன் ஆட்டம் போடுவதை சாதாரணமாகப் பார்க்க முடியும்...'' என்றவர் எல்லா விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார்.
விவரம் தெரிந்த மற்றொரு நபர், ''நகருக்குள் இப்படி என்றால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் பங்களாக்களில் நடத்தப்படும் அறிவிக்கப்படாத இரவு கிளப்புகள் வேறு தினுசு. இங்கும் எதற்குமே தடை இல்லை. அனைத்து சமாசாரங்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால், ஜோடியுடன் சென்றால்தான் உள்ளே விடுவார்கள். நுழைவுக்கட்டணம் 10 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை. உள்ளே சரக்கு 'ஸ்மால்' விலையே 300 ரூபாயில் இருந்து துவங்குகிறது. தவிர, இங்கு தனியாக ஸ்மோக்கிங் பார் என்று நடத்துகிறார்கள். அபினில் ஆரம்பித்து பல போதை வஸ்துக்களை இங்கே புகைக்கலாம்; சுவைக்கலாம். ஒவ்வொன்றுக்கும் தனி ரேட். இங்கு இருக்கும் நீச்சல் குளங்களில் வெளிநாடுகளைப்போல ஜோடிகள் அரைகுறை ஆடைகளில் சல்லாபிப்பது சர்வசாதாரண விஷயம்..!
இதுபோன்ற, கடற்கரை பங்களாக்களில் சமீபகாலமாக அதிர வைக்கும் மற்றொரு கலாசாரமும் பரவி வருகிறது. இணையதளங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் இந்த நட்பு வட்டாரம், சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு எல்லாம் இங்கு ஆஜராகி விடும். 30-ல் இருந்து சுமார் 40 ஜோடிகள் வரை கூடுவார்கள். முதலில் சரக்கு... அடுத்து ஆட்டம். மெதுவாக தொடங்கும் ஆட்டம், சிறிது நேரத்தில் வேகம் பெற்று எல்லோருமே மொத்தமாக உடைகளைத் துறந்து நிர்வாண நிலையில் ஆவேசமாக ஆடி அடங்குவார்கள். அவ்வப்போது பீர் குளியலும் உண்டு...'' என்று அவர் சொல்ல நமக்கு தலை தட்டாமாலை சுற்றியது!
ஆனால், போலீஸ் தரப்பில் பேசுபவர்களோ, ''இந்த விவகாரங்களில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. சென்ற வாரம் அதிகாலை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பப்பில் இருந்து வெளியே வந்த கார் ஒன்று கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடி ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் பாய்ந்து, அங்கு நின்று கொண்டிருந்த பல கார்கள் மீது மோதி பலமான சேதம் ஏற்பட்டது. இதில் வாட்ச்மேன் படுகாயம் அடைந்தார். அபார்ட்மென்ட்வாசிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எவனைப் பிடித்தாலும் ஒன்று... நடிகரைத் தெரியும் என்கிறான்! அல்லது, அரசியல்வாதியைத் தெரியும் என்கிறான். அவன் சொல்வதைப் போலவே மேலிடத்தில் இருந்து எங்களுக்கு பிரஷர் வருகிறது!'' என்றார் வேதனையுடன்!
மேற்கண்ட விஷயங்களை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனரான ஷகில் அக்தரிடம் கேட்டோம். ''எங்க ளுக்கும் பப்களில் நடக்கும் தகராறுகள் தொடர்பாக நிறைய புகார்கள் வந்தன. சில நாட்களுக்கு முன்பு பப் நிர்வாகிகளை வரவழைத்து கூட்டம் போட்டு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறோம். காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மட்டுமே பப் திறந்து இருக்கவேண்டும். 21 வயதுக்கு குறைவானவர்களை அனுமதிக்கக் கூடாது. அரசு அனுமதித்துள்ள மது வகைகளை மட்டுமே விற்கவேண்டும். இல்லையெனில் பப்பின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளோம். அதேசமயம், பப்களில் நடக்கும் தகராறு தொடர்பான விசாரணைகளில் பல்வேறு தரப்புகளில் இருந்து எங்களுக்கு பிரஷர் வருகிறது. ஆனால், அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறோம்!'' என்றார்.
குதூகலம் என்ற பெயரில் பப்கள் குற்றபூமியாக மாறிக் கொண்டிருப்பதைத் தடுக்க காவல் துறைதான் மேலும் உஷாராகச் செயல்பட வேண்டும்!

No comments:

Post a Comment