தமிழக கிராமப்பகுதிகளில்  அய்யனார், கருப்பண்ணன், முனியப்பன், நாட்டுமுனி என ஏராளமான காவல்  தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. பொதுவாக இக்கோயில்கள் மக்கள் நடமாட்டம்  அதிகம் இல்லாத இடத்தில், ஊர் எல்லையில் இருக்கும். இதற்கு விதிவிலக்காக  சேலத்தில் ஊரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது முனியப்பன் கோயில்.  அதுவும் கலெக்டர், எஸ்.பி. என விஐபி அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு  நடுவே. 
சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து  ஏற்காடு செல்லும் சாலையில் அய்யந்திருமாளிகையில் கலெக்டர் பங்களாவுக்கு  எதிரே அமைந்திருக்கும் இந்த முனியப்ப சாமியை ‘பூட்டு முனியப்பன்’ என்று  வினோத பெயர் வைத்து அழைக்கின்றனர் சேலம் மாநகர மக்கள். 
இந்த கோயில் எப்படி வந்தது? இங்கு நடக்கும் வினோத வழிபாடு என்ன? 
சற்று  யோசித்துவிட்டு சொல்ல ஆரம்பிக்கிறார் இதே பகுதியை சேர்ந்த 85 வயது  முதியவர் சடையக்கவுண்டர்... “இப்ப இந்த பகுதிய அய்யந்திருமாளிகைன்றாங்க.  150 வருஷம் முன்னாடி இதோட பேரு ஆலங்கோட்டை. அப்ப பிரிட்டிஷ் கவருமென்ட்.  வயசான பூசாரி ஒருத்தரு இந்த பக்கமா நடந்து போய்ட்டிருந்திருக்காரு. வழியில  அவருக்கு கல் ஒண்ணு தென்பட்டுது. ஏதோ சங்கடத்துல இருந்த அவருக்கு சாமி  மாதிரி தெரிஞ்சிருக்கு அந்த கல்லு. அது முன்னாடி நின்னு, தன்னோட  கவலையெல்லாம் சொல்லி கதறுறாரு. கையில இருந்த பூட்டை அங்க வச்சு, ‘ஏ சாமீ!  என் பிரச்னைய உன் பாதத்துல வச்சு பூட்டுறேன். அதெல்லாம் தீத்துவையி.  அப்புறம் பூட்டை வந்து எடுத்துட்டுப் போறேன்’னு சொல்லிட்டு போய்டறாரு. 
கொஞ்ச  நாள்லயே அவர் வேண்டுனது பலிக்குது. அடுத்த நாள். அவரோட கனவுல வெள்ளைக்  குதிரையில முனியப்ப சாமி வர்றாரு. ‘நீ வணங்குன இடத்துல யாரு பூட்டு வச்சு  கும்பிட்டாலும் அவங்களோட பிரச்னைகள், கவலைகளை தீர்த்து வைப்பேன்’னு  சொல்லிட்டு மறைஞ்சிடுது. இப்படி உருவானதுதான் பூட்டு முனியப்பன் கோயில்.  பூட்டு வச்சு கும்பிடற வழக்கம் இப்பவும் நடக்குது. பல ஊர்லேர்ந்தும் வந்து  பூட்டு வச்சு முனியப்பன கும்பிட்டு போறாங்க...” என்கிறார் அந்த பெரியவர். 
பூசாரி  கிருஷ்ணனும் இந்த வழிபாடு பற்றி கூறுகிறார். “யாராவது நம்மை தப்பா  பேசினாலோ, தப்பா நெனச்சாலோ மனசு சங்கடப்படுது. அந்த நேரத்துல பூட்டு வச்சு  முனியப்பனை கும்பிட்டா, வீண் பழி சொன்னவங்களை முனி தண்டிப்பாரு. இது  மட்டுமில்லாம குழந்தை பாக்யம், திருமண தடை, வியாபார வளர்ச்சினு எல்லா  வேண்டுதலையும் முனியப்பன் நிறைவேத்தி வக்கிறாரு. சாமி முன்னாடி நின்னு நம்ம  கோரிக்கைய சொல்லி வேண்டிக்கிட்டு கோயில்ல இருக்கிற இரும்புக் கம்பியில ஒரு  பூட்டை பூட்டணும். நியாயமான கோரிக்கையை முனியப்பன் சீக்கிரமே நிறைவேத்தி  வப்பாரு. கோரிக்கை நிறைவேறினதும் மீண்டும் கோயிலுக்கு வந்து இன்னொரு ஒரு  பூட்டு பூட்டிட்டு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துறாங்க.  தினமும் வழிபாடு நடந்தாலும் புதன், ஞாயிறு இன்னும் விசேஷம்” என்று சொல்லி  முடித்தார். 
வெள்ளைக் குதிரையுடன்  கம்பீரமாக நிற்கும் முனியப்பன் முன்பு கண்ணை மூடி நின்றபடி ஆண், பெண் என  ஏராளமானவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை மானசீகமாக சொல்லிக்  கொண்டிருந்தார்கள். 
பூட்டு முனி  


வேண்டுதலை தெரிவித்தும் நேர்த்திக் கடனாகவும் கோயிலில் பக்தர்கள் கட்டி வைத்துள்ள பூட்டுகள்.


No comments:
Post a Comment