Monday, August 16, 2010

ஆஸ்திரேலியத் தேர்தலில்... முதல் தமிழ்ப் பெண்...!

ட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்த பிராமி ஜெகனுக்கு இப்போது 30 வயது! இதில் ஆச்சர்யக் குறிக்கு என்ன வேலை என்கிறீர்களா? இந்தப் பெண்மணி இன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) போட்டியிடுகிறார்!
பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல்
அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்... கோயில் கட்டுவார்கள். அவ்வளவுதான் ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்கு சமமாக அரசியல் களம் காண்பது ஆச்சர்யம்தானே!' கிரீன்ஸ் கட்சி'யின் சார்பாகப் போட்டியிடும் பிராமி ஜெகனின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் இன்ஜினீயர். அம்மா கிருஷ்ணா, ஆசிரியை. 1988-ம் ஆண்டு குடும்பத்துடன் ஆஸ்திரேலியா வந்தவர்கள். சிட்னியில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 'இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்' பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான 'மெக்குவாரி வங்கி'யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மார்கனில், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் 2002-ம் ஆண்டு முதல் லண்டனிலும் பணியாற்றினார். லண்டனில் இருந்தபோது இதழியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, 'லண்டன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிச'த்தில் இதழியல் பட்டயம் பெற்றார். மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி, வங்கி வேலையை விட்டுவிட்டு எஸ்.பி.எஸ். தொலைக் காட்சியில் பணியாற்றியவர், தற்போது 'அஃபிடா' என்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனத்தில் தகவல் தொடர்புத் துறை அதிகாரி!
''நான் இலங்கையில் பிறந்தாலும், 2002 வரை... அதாவது எனக்கு 22 வயது ஆகும் வரை இலங்கைக்குச் செல்லவில்லை. எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய நாளில் இருந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதால், 'இயல்பாகவே வாழ்க்கை என்பது சுதந்திரமான, வசதியான, மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கைத் தரம்தான்' என நினைத்து இருந்தேன். இலங்கையின் நிகழ்வுகளைச் செய்திகளாகப் படித்திருந்தாலும், போரின் கோரத் தாண்டவத்தை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். அதன் தாக்கத்தால்தான், உலகில் தங்கள் வாழ்க்கையில் கொடுமைகளைத் தவிர வேறு எதையுமே சந்தித்திராத இலங்கைத் தமிழர் உள்ளிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதழியல் படித்தேன்.''
''ஆஸ்திரேலிய அரசியலில் ஏன் 'கிரீன்ஸ் கட்சி'யைத் தேர்ந்தெடுத்தீர்கள்?''
''ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகள் இரண்டு மட்டுமே. ஒன்று, தற்போது ஆளும் தொழிலாளர் கட்சி. இரண்டாவது, எதிர்க்கட்சியான லிபரல் கட்சி. இவ்விரு கட்சிகளுக்கு அடுத்த கட்சியாகவும், சராசரியாக 12 முதல் 16 சதவிகிதம் வரை வாக்கு வங்கியைக்கொண்டதாகவும் உள்ள கிரீன்ஸ் கட்சி, ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய கட்சி. 'நேர்மை, மனித நேயம், சுற்றுச் சூழல், வறியவர்களைச் சுரண்டுதலை எதிர்த்தல், எல்லார்க்கும் எல்லாமும்' போன்ற கொள்கைகளைத் தன் உயிர்நாடியாகக்கொண்ட கட்சி. இதன் தலைவர், செனட்டர் பாப் பிரவுன்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆஸ்தி ரேலிய நாடாளுமன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, அமெரிக்காவின் போரில் அநியாயமாகக் கொன்று ஒழிக்கப்பட்ட அப்பாவி ஈராக்கியர்களுக்கு ஆதரவாக ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து முழங்கியவர் பாப். அதனால், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். இப்படி எதிர்த்துப் போராடும் குணமும், கொள்கைப் பிடிப்பும்கொண்ட கட்சியாக கிரீன்ஸ் கட்சி இருப்பதால்தான் அதில் சேர்ந்தேன்.''
''இலங்கைத் தமிழருக்கு உங்கள் கட்சியால் உதவ முடியுமா?''
''கிரீன்ஸ் கட்சி மட்டுமே, ஆதிக்கப் போர்களினாலும், இன ஒடுக்குமுறைப் போர்களினாலும் பாதிக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஆஸ்திரேலியாவில் ஆதரவு வழங்குகிறது. இலங்கை இனப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களையும் ஆதரிக் கிறது. ஆஸ்திரேலியாவும், ஏனைய உலக நாடுகளும், ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகளும் ஒன்றிணைந்து இலங்கை இனப் பிரச்னையைத் தீர்க்கவும், அங்கு நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டி யதின் அவசியத்தை உணர்த்தவும், கிரீன்ஸ் கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.''
''தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு என்ன சொல்கிறீர்கள்?''
''தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்னைவிட வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் மூத்தவர்கள். 'அச்சம் தவிர்ந்தது வாழ்வு... நல்லன்பில் விளைவது வாழ்வு' என்று பாரதிதாசன் பாடிய வாழ்க்கை, எமது தமிழ் மக்களுக்குக் கிடைப்பதற்கு அருள் கூர்ந்து உதவுங்கள் என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.''
''திருமணம்..?''
''எனக்கும் திருமணம் நடக்கும் என்று நம்புகிறேன். ஆனால், திருமணம் செய்யாமல் ஒரு தமிழ்ப் பெண் வாழ முடியாது என்ற கருத்தை நான் ஒப்புக் கொள்ள வில்லை!''

No comments:

Post a Comment