Tuesday, August 17, 2010

எந்திரன் - Special news...

165 கோடி ரூபாய்க்கு இந்தியாவின் 'ஹை பட்ஜெட்' படமாக உருவாகி- இருக்கிறது 'எந்திரன்.' கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற எந்திரனின் படப்பிடிப்பு, கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆகஸ்ட் மாத இறுதியில் ரிலீஸாக இருக்கும் எந்திரனில் ஆட்டோமொபைல் ஸ்பெஷல் என்ன?
'காதலன்' படத்திலேயே பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கண்ணாடிபஸ்ஸைக் காட்டிய ஷங்கர், பல கோடி ரூபாய் பட்ஜெட் படமான எந்திரனில் சும்மா விடுவாரா? சி-கிளாஸ், இ-கிளாஸ், சி.எல்.கே என பென்ஸின் பல வரிசை கார்களையும் எந்திரனில் சண்டை போட வைத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர்.
'ஐங்கரன்' தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு 'எந்திரன்' கைமாறுவதற்குக் காரணமாக இருந்ததும் மெர்சிடீஸ் பென்ஸ் கார்தான் என்ற பேச்சும் உண்டு. கடந்த 2008-ம் ஆண்டு இறுதியில் எந்திரன் படத்தின் சண்டைக் காட்சி கோவாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. பட ஷூட்டிங்குக்காக மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ என இரண்டு புத்தம் புது கார்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. இதில், கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய பென்ஸ் காரை, சண்டைக் காட்சியின்போது நிஜமாகவே எரித்ததும் டென்ஷனாகிவிட்டதாம் ஐங்கரன்!
சென்னையில் எந்திரன் ஷூட்டிங் நடந்தால், எப்போதுமே தன்னுடைய சொந்த காரான செவர்லே டவேராவில்தான் வந்து இறங்குவார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஷங்கர் தனது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் வர... ஐஸ்வர்யா ராய் பென்ஸ் காரில் ஷூட்டிங்குக்கு வருவாராம்!
எந்திரன் படத்தில் ஹீரோ - வில்லன் இரண்டுமே ரஜினிதான். ஹீரோ ரஜினி பென்ஸ் கார் பயன்படுத்துவது போலவும், வில்லன் ரஜினி பிஎம்டபிள்யூ கார் பயன்படுத்துவது போலவும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
கோலிவுட்டில் பிஎம்டபிள்யூ சென்டிமென்ட் ஒர்க்-அவுட் ஆகிக்கொண்டிருக்க... எந்திரனில் அதிகமாக பென்ஸ் கார்கள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மதுரவாயல் அருகே உள்ள பாலத்தில் இன்னொரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அங்கே இரண்டு பென்ஸ் சி.எல்.கே ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒன்று நிஜ கார்; இன்னொன்று டம்மி! ஷூட்டிங்கில் இந்த டம்மி பென்ஸ் சி.எல்.கே காரை சுக்கு நூறாக உடைத்து எடுத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றும் எந்திரனில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த சொகுசு காருக்குள் ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் டூயட் பாடிக்கொண்டே பறக்க... திறந்த ஜிப்ஸியில் பயணித்தபடி ஷூட் செய்திருக்கிறார்கள். அந்த கார், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் 'ஆஸ்டன் மார்ட்டின்' கார்தான் என்றும் சொல்கிறார்கள்.
படத்தில் கார் ஸ்டன்ட்டும் இடம் பெற்றிருக்கிறது. பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட ஸ்டன்ட் டீம்தான் இந்த கார் ஸ்டன்ட்டைச் செய்திருக்கிறது!

No comments:

Post a Comment