Monday, August 16, 2010

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது..!

மேடம்.. உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மேடம்.. இந்த பாட்டை இப்ப என் மேல கோவமா இருக்குற என் லவ்வருக்கு டெடிகேட் பண்ணுங்க.. " என்று ரேடியோ ஜாக்கிகளுக்கு போன் போட்டு, 'ரேடியோ விடு தூது' செய்து கொண்டிருக்கும் இளசுகள் மத்தியில் ராகவ் என்னும் இளைஞர் தனித்து தெரிகிறார்.
பீகாரில் உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராகவ் மஹாடோ. எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளியில் சேர்ந்து படிக்குமளவுக்கு வசதி இல்லை. 1997-ல் ஒரு கடையில் ரேடியோ ரிப்பேர் செய்யும் வேலைக்கு சேர்ந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு கடை முதலாளி ஊரை விட்டுப் போக, சொந்தமாக கடை நடத்த ஆரம்பித்தார். அப்போது தான் ராகவ் மனதில் சொந்தமாக ஒரு ரேடியோ ஸ்டேஷன் நடத்தும் ஆசை வேர்விட்டது.
ரேடியோ ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்மிட்டர் வேண்டுமே. டிரான்ஸ்மிட்டரின் விலை சுமார் 3.5 லட்சம். பணத்துக்கு எங்கே போவது..? பெரிய மனிதர்கள் தொடர்பு இல்லை; கையில் பெருந்தொகை எதுவும் இல்லை. ராகவ் அதைப் பற்றி கவலையேபடவில்லை. கடையில் இருந்த பழைய பொருட்களை எல்லாம் வைத்து தானாகவே ஒரு டிரான்ஸ்மிட்டர் உருவாக்கினார். தயாரிக்க ஆன செலவு.. அதிகம் இல்லை ஜென்டில்மென்.. வெறும் 50 ரூபாய் தான்.
இரண்டு மூங்கில் கம்புகள், 50 ரூபாய் செலவில் சிறிய டிரான்ஸ்மிட்டர், நிறைய ஆர்வம்.. அவ்வளவுதான்.. ஒரு ரேடியோ ஸ்டேஷன் ரெடி..!
கடந்த 2003-ல் தன் கடைக்கு பக்கத்திலிருந்த மூன்று அடுக்கு மருத்துவனையின் மொட்டை மாடியில் மூங்கில்களை வைத்து டிரான்ஸ்மிட்டரைப் பொருத்தினார். ஆரம்பமானது கச்சேரி. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற ஊர் மக்கள் மத்தியில் ராகவ் எஃப் எம் உடனடி ஹிட்..!
ஹிந்தி மற்றும் போஜ்புரி சினிமா பாடல்கள் மட்டுமில்லாமல், எய்ட்ஸ் நோய் விழிப்பு உணர்வு, போலியோ சொட்டு மருந்து பற்றிய அறிவிப்பு, காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள், உள்ளூர் செய்திகள், மக்களுக்கான தகவல்கள், கலந்துரையாடல்கள் என கலக்கியிருக்கிறார் ராகவ்.
இத்தகைய ஒலிபரப்புகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இவருடைய சம்பாத்தியம் என்பது தான் வைத்திருக்கும் 'ப்ரியா எலெக்டிரானிக்ஸ்' கடையினால் மாதந்தோறும் வரும் 2000 ரூபாய் தான்.
இவருக்கு வரும் நேயர் விருப்பப் பாடல்கள் லிஸ்ட் தினமும் கூடிக் கொண்டே போக, கூரை போட்ட கடையிலிருந்து கொண்டு கேட்ட பாடல்களை ஒலிபரப்பி ஊர்மக்களை மகிழ்வித்திருக்கிறார்.
காணாமல் போன 6 குழந்தைகள் இவரின் ஒலிபரப்பால் பெற்றோருடன் மீண்டும் இணைந்ததை அந்த ஊர்காரர்கள் பெருமையாக இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வயிற்றுக்காக எலக்டிரானிக் பொருட்கள் ரிப்பேர் செய்யும் கடை, மனசுக்காக 'ராகவ் ரேடியோ' என ராகவ் நாட்கள் பிஸியாக போய்க் கொண்டிருந்தபோது, விதி சிரித்தது. அரசாங்க விதி.
2006-ம் வருடம் அரசாங்க ஆட்கள் வந்து, லைசென்ஸ் இல்லாமல் ஒலிபரப்பு செய்ததற்காக இவர் வைத்த டிரான்ஸ்மிட்டரை கழட்டி போட்டுவிட்டார்கள். இவரை கைது செய்து கொண்டு போய் வைத்து சிறிது நாள் கழித்து வெளியே விட்டார்கள். ராகவ் எஃப் எம் மூடப்பட்டது.
டிரான்ஸ்மிட்டர் தயார் செய்து, ரேடியோ ஸ்டேஷன் நடத்துமளவுக்கு திறமை படைத்த ராகவ் பற்றி தகவல்கள் வெளிவர, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில களத்தில் குதித்தன. எனினும் முறையாக ரேடியோ டிரான்ஸ்மிட்டர் பொருத்தி அரசாங்கத்துக்கான தொகைகளைக் கட்ட (ராகவ் முன்பு நடத்தியது போல் நடத்த) சுமார் 4 லட்ச ரூபாய் முதலீடு தேவைப்பட்டது.
ராகவ் உழைக்கத் தயாராய் இருந்தார். ஆனால் பணம் முதலீடு செய்து முறைப்படி லைசென்ஸ் பெற்றுத் தர ஆளில்லை.
ராகவைப் பற்றி கேள்விப்பட்ட பங்கர் ராய் (Bunker Roy) ராஜஸ்தானில் இருக்கும் தன் பேர்ஃபுட் காலேஜில் (Barefoot College) ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.
இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட NCERT (National Council of Education, Research and Training) ராகவின் கௌரவத்தை மேலும் உயர்த்தியது. அதன் 12-ம் வகுப்புக்கான 'சமுதாய மாற்றம் மற்றும் முன்னேற்றம்' என்னும் பாட புத்தகத்தில், 'ராகவ் ரேடியோ' பாடமாக வைக்கப்பட்டது. ராகவ் பள்ளிக்கூடம் போக முடியாத சூழ்நிலையில் வளர்ந்தாலும், அவர் ரேடியோ ஸ்டேஷன் அமைக்க செய்த முயற்சிகளையும், அதன் ஒலிபரப்பினால் அவர் எதிர்கொண்ட சவால்களையும் குறிப்பிட்டு, ராகவ் சமுதாய முன்னேற்றத்தின் முன்மாதிரி என்று போற்றியிருக்கிறது.
ராகவ் பள்ளிக்கூடம் போனதில்லை.. அதனால் என்ன.. பல இளைஞர்கள் அவரைப் பாடமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் அன்று தன் ஊர் மக்களுக்கு செய்த ஒலிபரப்பு, இன்று பலருக்கு நம்பிக்கையொளிபரப்பிக் கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment