டி.பி.எஸ்.ஜெயராஜ்... 56 வயதான பத்திரிகையாளர். தமிழீழப் போராட்டம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதி உலகளாவ அதிகம் கவனம் ஈர்த்தவர். இப்போது கே.பி-யிடம் மிக நீண்ட பேட்டி எடுத்துள்ளார் டி.பி.எஸ்.ஜெயராஜ். 2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு, 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்' எனத் தன்னை அறிவித்துக்கொண்ட குமரன் பத்மநாபன், மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் அவரை அடைத்து சிங்கள ராணுவம் தொல்லை கொடுப்பதாக முதலில் தகவல் வந்தது. அதன் பிறகு, அமைச்சர் ஒருவரது இல்லத்தில் பாதுகாப்பாகத் தங்கி இருக்கிறார் என்று செய்தி பரவியது. திடீரென ஒருநாள், பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியும் கொடுத்தார் குமரன் பத்மநாபன். வெளிநாட்டில் இருந்து வந்த புலம் பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசவும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, 'கே.பி. இலங்கை அரசாங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டார். அவர் புலிகளின் நெட்வொர்க்கைக் காட்டிக் கொடுக்கும் காரியங்களை இப்போது திறம்படச் செய்கிறார்' என்று புலிகளின் ஆதரவு இணையதளங்கள் சொல்ல ஆரம்பித்தன. இலங்கை அரசு ஒருவரை எதிரியாகக் கைது செய்துவிட்டால், அதன் பிறகு அவர் ஒருக்காலும் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியாது. அதனால், கே.பி-யின் பேச்சும் செயல்பாடுகளும் ஒருவித சந்தேகத்துடன் பார்க்கப்படுவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்று!
இறுதிப் போர் மேலும் மேலும் இறுகுவதை எடுத்துச் சொல்லி நான் பதறிக்கொண்டே இருந்தேன். பணம் வரவே இல்லை. அந்தச் சமயம், இலங்கைக்கு வெளியே இருந்தார் புலிப் படையின் முக்கிய விமானத் தளபதியாக இருந்த அச்சுதன். அவர் மூலமாக திறமையான விமானிகளை ஏற்பாடு செய்துகொடுப்பதாக நெடியவன் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அச்சுதன் திடீரென என்னிடம் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
நான் அப்போதும் தளராமல், கூலிக்காக எந்த அதிரடியும் செய்யக்கூடிய இரண்டு விமானிகளை பேசித் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். கடைசி வரை பணம் வராததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவேளை, 'தலை வரின் குடும்பத்தைக் காப்பாற்றிய நற்பெயர் கே.பி-க்கு வந்துவிடக் கூடாது' என்றுகூட சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு கட்டத்துக்கு மேல் சிங்களப் படைகள் பலமாக முன்னேறி சுற்றி வளைத்துவிட்டதை அறிந்தபோது, காஸ்ட்ரோ மற்றும் நெடியவன் மீது நான் கடும் கோபமும் வருத்தமும் அடைந்தேன். சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் சகோதரி துவாரகா இருவருமே போர்க்களத்தில் வீரத்தோடு போராடி வீரச் மரணத்தைத் தழுவிக்கொண்டார்கள். மதிவதனி கொல்லப்பட்டார். பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் என்னை இன்னும் பலமாகப் பாதித்தது'' என்று பேட்டியில் கூறுகிறார் கே.பி.
கூடவே, பிரபாகரனின் கடைசி நிமிடங்கள்பற்றியும் சில விஷயங்களைச் சொல்கிறார்-
''தொலைக்காட்சியில் காட்டப்பட்டது பிரபாகரனின் சடலம்தான்'' என்று இவர் அந்தப் பேட்டியில் அழுத்திச் சொல்ல...
''அது எப்படி? தான் கொல்லப்பட்டால் எதிரிகளிடம் உடல் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தன்னோடு இருக்கும் ஒருவரிடம் எப்போதும் பெட்ரோல் தயாராக வைத்திருக்கச் சொல்லிஇருந்தாராமே பிரபாகரன்? அவர் உடல் எப்படி எதிரிகளுக்குக் கிடைத்திருக்க முடியும்?'' என்று பேட்டியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கேட்கிறார்.
இறுதி நிமிடங்களில் பிரபாகரன் உயிரோடு பிடிபட்டார் என்றும், அவரை சிங்கள ராணுவத் தளபதி மண்டியிடச் செய்து சுட்டுக் கொன்றார் என்றும் சிலர் பரப்பிய தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார் கே.பி. ''பிரபாகரனும் சரி... அவரோடு இருந்தவர்களும் சரி... மிக வீரமாக, கடுமையாகப் போரிட்டு வீர மரணம்தான் எய்தினார்கள். புலிகளுக்கான சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் சிலருக்கும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது தெரியும். முதலில், 'தலைவர் மரணத்துக்கு வீர அஞ்சலி செலுத்தி, துக்கம் அனுஷ்டிப்பதற்கு அறிவிக்க' அவர்கள் தயாராகவே இருந்தார்கள். திடீரென்று அந்த முடிவை மாற்றி, 'மரணச் செய்தியை உறுதிப் படுத்த' மறுத்துவிட்டார்கள்'' என்றும் கே.பி. சொல்லியிருக்கிறார் அந்தப் பேட்டியில்!
'மிக சாமர்த்தியமாக அளிக்கப்பட்டுள்ள பேட்டி இது! புலிகள் இயக்கத்தின் வீரத்தையும் வீரியத்தையும் தொடர்ந்து கொண்டுசெல்ல நினைப்பவர்களைப் பலவீனப்படுத்துவதற்கான கண்ணிவெடிகள் இதனுள் திறமையாகப் பொதித்துவைக்கப்பட்டுஉள்ளன' என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
எப்படியோ... அடுத்த கதைக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை!
கே.பி-யின் பேட்டியைத் தொடர்ந்து கேள்விகள் சில வேகமாக எழுந்து வருகின்றன! அவர் விவரிக்கும் சம்பவங்கள் நடந்த காலகட்டம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை. தமிழீழக் கடல் பகுதியாகச் சொல்லப்பட்ட அத்தனை இடங்களையும் தன்னுடைய கப்பற்படை வசம் ஒப்படைத்து, அங்கே இருந்து எதையும் உள்ளேவிடாமல், வெளியேவிடாமல் தடுப்பு அரண் போட்டு இருந்தது இலங்கை அரசு. இலங்கைக் கடற்படையின் தளபதி வசந்த கரண கோடா சொன்னதின்படி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஒரு கப்பலும், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10, 11 தேதிகளில் மூன்று கப்பல்களும், அக்டோபர் 7-ம் தேதி நான்கு கப்பல்களுமாக புலிகளுக்காக ஆயுதம் ஏற்றி வந்த எட்டு கப்பல்கள் வீழ்த்தி மூழ்கடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிலையில், கே.பி. எப்படி ஒரு கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் கொண்டுவர முடியும்?
இலங்கையின் எல்லைக்குள் தரை மார்க்கமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு புலிகள் நகர்வதே கடினமாக இருந்த சூழலில் 'வன்னிப் பகுதியில் ஹெலிகாப்டரைக் கொண்டுவந்து இறக்கத் திட்டமிட்டோம், அதன் பிறகு பறக்கத் திட்டமிட்டோம்' என்பதெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியம்?
ஒருவேளை, ஹெலிகாப்டர் அங்கே சிங்கள ராணுவக் கண்காணிப்பைத் தாண்டி இறங்கி இருக்க முடியும் என்றால், காசு கொடுத்து ஒரு செகண்ட் ஹாண்ட் ஹெலிகாப்டரை வாங்குகிற அளவுக்கா புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பு இருந்தது? அவர்கள் நினைத்தால், சேட்டிலைட் போனில் ஒரே ஒரு தகவல் சொன்னால், ஒன்றுக்கு நாலாக ஹெலிகாப்டர்களை அவர்களுக்காக கே.பி-யிடம் ஒப்படைக்க எத்தனையோ பேர், வெவ்வேறு நாடுகளில் தயாராக உண்டே?
- இப்படி முரண்பட்ட காட்சிகள்கொண்டதாக கே.பி-யின் பேட்டியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்ற பேச்சையும் கேட்க முடிகிறது!
No comments:
Post a Comment