இப்படிப்பட்ட பெண்கள் ஒவ்வொரு கல்லூரியிலும், ஏன் உங்கள் கல்லூரியிலும் இருக்கிறார்கள்தானே?! 'அழகான வெளித்தோற்றம்' என்ற மாயமானை துரத்திச் சென்று துயரக்காட்டுக்குள் வாழ்க்கையை தொலைக்கும் இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன? மார்பகத்தின் அளவை பெரிதாக்குவது மருத்துவரீதியில் சாத்தியமா? கேள்விகளோடு தகுந்த நிபுணர்களைச் சந்தித்தோம். 'சைஸ்' பிரச்னை குறித்து விரிவாகப் பேசிய சேலத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்டான ரம்யா,
"பொதுவா ஒவ்வொரு பொண்ணுக்கும் வயசுக்கு வர்றதுக்கு சில மாதங்களுக்கு முன் இருந்து அவளோட மார்பகங்கள் டெவலப் ஆக ஆரம்பிச்சு, டெலிவரியாகி தாய்ப்பால் கொடுக்குறது முடியும் வரை அந்த வளர்ச்சி தொடரும். இதுதான் இயல்பான போக்கு. இதை மாற்ற நினைக்கறது முட்டாள்தனமானது மட்டுமில்லாம, அவசியமற்றது" என்று அறிவுறுத்தியவர்,
"எடுப்பான மார்பகங்கள்தான் அழகின் அம்சம்னு நினைக்கிறதே அடிப்படையில தப்பு. மார்பகம்ங்கிறது கொழுப்புகள் ஸ்டோர் ஆகிற ஒரு அமைப்பு. அவ்வளவுதான். அதேபோல, சின்ன மார்பகங்களுக்கும், பால் சுரப்புக்கும் சம்பந்தமில்ல. ஒல்லி, குண்டுனு எல்லா பொண்ணுங்களுக்கும், அவங்க குழந்தைக்குத் தேவையான பாலை சுரக்கறதுக்கான தகவமைப்பு, இயற்கையாவே அவங்க உடல்ல இருக்கும். அப்படி தன் குழந்தைக்கு அருமையான உணவை அம்மா ஊட்டுறதுக்காக இயற்கை கொடுத்திருக்கிற உடலமைப்பு இது. அதனால, மார்பகத்தையும் ஒரு உறுப்பா பார்க்கணுமே தவிர, கிளாமரோட இதை சம்பந்தப்படுத்தவே கூடாது.
ஆனா, இதைப் புரிஞ்சுக்காத பொண்ணுங்க, விளம்பரங்களை பார்த்துட்டு பல ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு அஞ்சு பைசாவுக்கு பெறாத உபகரணங்களை வாங்கி நஷ்டப்படுறாங்க. பால் சுரப்பை தரக்கூடிய சிறு சிறு அமைப்புகள் மார்பகங்கள்ல இருக்குது. இந்த சென்சிட்டிவான பகுதியை ஜெல், க்ரீம் மாதிரியான விஷயங்களைப் போட்டு கண்டபடி தேய்க்கிறது ஆபத்துல போய் முடியலாம். அதனால, மார்பகத்தின் சைஸை இயல்பான முறைகள்ல பெருசாக்குறதுங்கிறது மருத்துவத்தில் சாத்தியமில்லாத விஷயம்! செயற்கையா வேணும்னா... செய்துக்கலாம். ஆனா, பல சமயங்கள்ல அது உயிருக்கே ஆபத்தான விஷயமா மாறிடும்கிறத மறந்துடக் கூடாது" என்றார் அழுத்தமாக. 'ஸ்ட்ரக்சர் பிரச்னை'யில் அல்லாடும் பெண்களின் தாழ்வு மனப்பான்மைக்கு தீர்வு சொல்லும் ஈரோட்டை சேர்ந்த மனநல மருத்துவரான வசந்தி, "மனுஷனா பிறந்த ஒவ்வொருத்தருக்கும் பொக்கிஷ மான வயசு... இந்த இளமைப் பருவம். தன் அழகைப் பத்தின அக்கறையைக் காட்டறதோட, கூடவே ஃப்யூச்சர்ல தான் என்னவா ஆகப்போறோம்ங்கிறதை நிர்ணயிக்க கூடியதும் இந்தப் பருவம்தான். இந்த அற்புதமான காலகட்டத்தை தேவையற்ற எண்ணத் தால வீணாக்கலாமா? அடுத்தவங்களோட எண்ணங்களுக்காக வாழுறதை விட்டுட்டு முதல்ல நமக்காக வாழ ஆரம்பிக்கணும். ஃபர்ஸ்ட் லவ் யுவர்செல்ஃப்..." என்ற வசந்தி, " 'நான் கறுப்பா இருக்கேன், எனக்கு வெள்ளை முடி விழுந்துடுச்சு, என்னோட ஸ்ட்ரக்சர் சரி யில்லை'ங்கற நினைப்பையெல்லாம் மனசுல இருந்து தூக்கி கடாசுங்க. வாழ்க்கையில ஆப்டிமிஸ்டா இருக்கப் பழகிட்ட யாரையும் எந்த மனக்கவலையும் துரத்தாது. அரை டம்ளர் தண்ணியைப் பார்த்து, பாதி டம்ளர் காலியா இருக்குதேனு வருத்தப்படுறதை விட, அரை டம்ளர் தண்ணி இருக்குதேனு சந்தோஷப்படணும். இதைத்தான் ஆப்டிமிஸம்னு சொல்வாங்க. சச்சின் பண்ணியிருக்கிற சாதனை களோட ஒப்பிடும்போது அவரோட வளர்த்தி ரொம்பவே குறைச்சல்தான். தான் கொஞ்சம் குள்ளமா இருக்குறதா நினைச்சு சச்சின் முடங்கியிருந்தா... இந்த உலகம் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேனை இழந்திருக்குமே? ஆக, வெளித்தோற்றம் பற்றிய கவலைகளை மனசுல இருந்து வெளியேத்திட்டு, உங்களுக்கான துறையில நீங்க முன்னேறிப் போங்க. இந்த உலகமே உங்க பின்னாடி வந்து நிக்கும்... ரெண்டு கைகளையும் தட்டியபடி!" என்று உற்சாகம் தந்து முடித்தார் வசந்தி!
No comments:
Post a Comment