ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முதலாவது ராணுவ நீதிமன்றத்திலும், ராணுவ சட்டத்தை மீறி மோசடியான முறையில் ஆயுதக் கொள்முதல் செய்ததாக சொல்லப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் இரண்டாவது ராணுவ நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டன. இதில் முதலாவது நீதிமன்றம், கடந்த 13-ம் தேதி ஃபொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதன்படி, கடந்த 40 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பெற்றிருந்த அத்தனை கௌரவமான பரிசுகள், பதக்கங்களை ஃபொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்போகிறது சிங்கள அரசு. இதில் ரொம்பவே பதறிப்போய் இருக்கும் ஃபொன்சேகா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தீவிரமாகி வருகிறார். இது குறித்துப் பேசும் ஜே.வி.பி பிரதிநிதிகள் சிலர், ''ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை நடந்தபோது, சிவில் நீதிமன்றங்களில் விடுமுறை காலம். அதனால், வேறொரு நாளில் விசாரணை நடத்தும்படி ஃபொன்சேகா தரப்பினர் போராடினார்கள். ஆனால், அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. அப்போதே ஃபொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்புதான் வரும் என்று தெரிந்துவிட்டது. கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடந்த விசாரணையில் அவரது தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராணுவ நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்க முடிவெடுத்தாலும், அது குறித்து சிவில் நீதிமன்றங்களில் ஆலோசனை நடத்துவது பொதுவான வழக்கம். ஆனால், ஃபொன்சேகாவுக்கு எதிரான விவகாரத்தில் இந்த மரபும் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற பல விவகாரங்களில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்ற வரலாறுகள் உள்ளன. அதன்படி ஃபொன்சேகா மேல்முறையீடு செய்தாலே, அவருடைய பதக்கங்களை அரசால் பறிக்க முடியாது!'' என்கிறார்கள் இன்னமும் குலையாத நம்பிக்கையுடன். ஆனால், சிங்கள அரசின் அடுத்தடுத்த 'மூவ்'களை அறிந்திருக்கும் புள்ளிகளோ, ''எத்தகைய சட்டப் போராட்டத்தை நடத்தினாலும் சிங்கள அரசின் பிடியில் இருந்து ஃபொன்சேகாவால் தப்ப முடியாது. இரண்டாவது ராணுவ நீதிமன்றத்தில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஏராளமான ஆதாரங்களை வழங்கி இருக்கிறது அரசுத் தரப்பு. கடைசிக் கட்டப் போரின்போது, சரண் அடைந்த புலித் தலைவர்களை பாதுகாப்புச் செயலர் கோத்தபய உத்தரவின் பேரில் சவேந்தர் சில்வா என்ற அதிகாரி சுட்டுக் கொன்றதாக ஃபொன்சேகா பகிரங்கமாகச் சொன்னார். ஆனால், கடைசிக் கட்டப் போரில் அனைத்து உத்தரவுகளுமே ஃபொன்சேகாவால்தான் வழங்கப்பட்டன என ராணுவ நீதிமன்றத்தில் சொல்லி இருக்கும் அரசுத் தரப்பு, 'ஒருவேளை சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் அதற்குக் காரணமும் அவர்தான்!' எனச் சொல்லி உலகளாவிய குற்றச்சாட்டையும் மொத்தமாக அவர் மீது போட்டு தப்பிக்கத் தயாராகி வருகிறது. இதை உடைக்கும் விதமாக கடைசிக் கட்டப் போரின்போது, தான் சீனாவில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்களை ஃபொன்சேகா திரட்டினார். ஆனால், ராணுவத்தில் அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளையே அவருக்கு எதிரான சாட்சிகளாக நிறுத்தப்போகிறது அரசுத் தரப்பு. ராணுவ ரகசியங்களை வெளியிட்டது, ஆயுதம் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது,
க்ளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் அட்டாக் என போர் மரபுகளை அடியோடு புறந்தள்ளி, அப்பாவி மக்களையும் புலிகளையும் வீழ்த்தி வெ(ற்)றி வீரனாக வலம் வந்த ஃபொன்சேகா, ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு ''தீவிரவாதத்தின் பிடியில் இருந்து என் நாட்டைக் காப்பாற்றியதற்காகவா இந்தத் தண்டனை?'' எனப் புலம்பி இருக்கிறார்.
அப்பாவி ஆடுகளை வேட்டையாடிய ஓநாய்களில் ஒன்று வெளியிடும் அழுகையாகவே அது தொனிக்கிறது!

No comments:
Post a Comment