Thursday, August 19, 2010

குழந்தைப் பேறு... குடியிருக்க வீடு... பெரியமனதுடன் அருளும் பெரியபெருமாள்!

வேண்டுதல்களை, மனத்துயரங்களை இறைவனிடம் இறக்கி வைத்து, 'எல்லாம் நீயே' என்று சரணடைந்தால், அந்த நம்பிக்கைக்காக... பக்திக்காக... வேண்டுவனவற்றை எல்லாம் கடவுள் அற்புதமாக நடத்தி வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி பக்தர்களின் வேண்டுதல்களை நடத்தி வைக்க, இறைவன் எழுந்தருளியுள்ள இடங்களைத்தான் புண்ணிய தலங்களாக வழிபடுகிறார்கள்.
இதேபோல, தெய்வங்கள் தங்களுக்குள் அருள்பாலித்த இடங்களும் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கின்றன. அப்படி லஷ்மிதேவிக்கு, பெருமாள் அருளி, அவளை மணமுடித்த கிருஷ்ணமங்களஷேத்ர தலங்களில் ஒன்று... திருக்கண்ணமங்கை. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் இந்த திருக்கண்ணமங்கையில்தான் இந்த இதழுக்கான தரிசனம்!
பெரிய பெருமாளாக 16 அடி உயரத்தில் கண்கள் நிறையும் வண்ணம் அடியும், முடியும் அழகாக தெரிய, நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார் பக்தவத்சல பெருமாள். நான்கு வேதங்களும் தூண்களாக நிற்கும் ஸ்ரீமண்டபத்திலிருக்கும் அவரைப் பார்க்கிறபோதே நம்பிக்கை துளிர்க்கிறது பக்தகோடிகளுக்கு!
வடக்கில் ஓடம்போக்கி ஆறும், தெற்கில் வெட்டாறும் ஓட, கிட்டத்தட்ட ஸ்ரீரங்கம் போன்றதொரு சூழலில் அமையப் பெற்றிருக்கிறது கோயில். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கோயிலில் கிழக்கு நோக்கி நிற்கும் அவருக்கு வலதுபுறம் தனிக்கோயில் கொண்டு அமர்ந்திருக்கிறாள் தாயார் அபிஷேகவள்ளி. இடதுபுறம் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாளும் தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். பெருமாளுக்கு எதிரே பட்சிராஜனான கருடாழ்வார், நின்ற கோலத்தில் இருந்து பெருமாளை சேவிப்பவர்களுக்கு வரப்பிரசாதியாக கருணை காட்டுகிறார்.
பட்சிராஜனுக்கு புடவை சார்த்தி தீபம் காட்டப்பட்டுக் கொண்டிருக்க... அங்கே கணவனுடன் நின்று, கண்கள் மூடி பிரார்த்தித்து கொண்டிருந்தார் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை.
"எனக்கும் பெருமாளுக்குமான நட்பு... நாற்பது வருஷ நட்பு. நல்ல கணவர், பிடிச்ச ஆசிரியை வேலை, நல்ல பிள்ளைகள், வசதியான, நிம்மதியான வாழ்க்கைனு எல்லாமே பெருமாளின் அருளால நல்லபடியா நடக்குது. திருமணத்துக்கு அப்பறம் ஒரு பொண்ணு பொறந்துது. பிறகு, எட்டு வருஷம் ஆண் வாரிசு இல்லாம தவிச்சிருந்தேன். இந்தப் பெருமாளை பார்த்து வேண்டிக்கிட்ட அடுத்த வருஷமே பொறந்தது ஆண் குழந்தை!
அதுக்குப் பிறகு, எங்க வாரிசுங்க வளர்ந்தது... அவங்களுக்கு திருமணமானது... இன்னிக்கு வேலை, தொழில்னு நல்லபடியா வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கறதுனு எல்லாமுமே இந்த பெரிய பெருமாள், பெரியமனசோட கொடுத்ததுதான். அதுக்கெல்லாம் வரம் கொடுத்த இவரை, எப்பவெல்லாம் தோணுதோ அப்பவெல்லாம் வந்து பார்ப்போம். இப்பவும் அப்படித்தான் வந்திருக்கோம்" என்று அவர் சொல்ல, அதையெல்லாம் ஆமோதித்துக் கொண்டிருந்தார் கணவர் நாராயணசாமி.
தாயாரை சேவித்துவிட்டு, இடதுபுறம் இருந்த மாடத்தின் திரையை விலக்கி எதையோ தரிசனம் செய்து கொண்டிருந்தார் கணவர், குழந்தைகளுடன் சென்னையில் இருந்து வந்திருந்த கோமதி. அது என்னவென்று பார்த்தால், அதற்குள் இருக்கிறது ஒரு தேன்கூடு! அந்தத் தேன்கூட்டில் இருக்கிறது கோயிலின் வரலாறு. கோமதி சொல்லும் பெருமாள் பெருமையைக் கேட்டுவிட்டு, பிறகு கோயில் வரலாற்றுக்குள் போவோம்.
"எனக்கு சொந்த ஊர்... சிவகங்கை மாவட்டம். இவருக்கு, சொந்த ஊர் இந்தத் திருக்கண்ணமங்கை. இப்போ... சென்னை, மாம்பலத்தில் போலீஸா இருக்கறார். எங்களுக்கு திருமணம் முடிஞ்சப்போ, 'என்னை ஆளாக்கின பெருமாளைத்தான் நாம முதல்ல போய் தரிசிக்கணும்'னு சொல்லி, சொந்த ஊர்ல இருக்கற இந்தக் கோயிலுக்கு கூட்டிட்டு வந்து, பெரிய பெருமாளை காட்டினார். இறைவனோட நின்ற திருக்கோல அழகை பார்த்து நானும் பக்தி பரவசமாயிட்டேன்.
நாங்க சென்னையில இருந்தாலும், குடும்பத்துல ஏதாவது ஒரு முக்கிய முடிவெடுக்கணும்னா, நேரா கிளம்பி இங்கே வந்து, இவர்கிட்டதான் அனுமதி கேட்போம். குழந்தைகள், வீடு, கார், நிம்மதினு எங்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறார் இந்த பக்தவச்சலப் பெருமாள்" என்று சொல்லி பரவசத்துடன் பெருமாளை நோக்கி கும்பிடு போட்டார் கோமதி.
இப்படி வருகிறவர்களுக்கெல்லாம் வேண்டும் வரமளிக்கும் இந்த இறைவனின் அருளுக்கான காரண கதையை அறிய, கோயிலின் திருத்தல பெருமைக்குள் போவோமா...
மங்கை மகாலஷ்மி, தன் மனதில் பெருமாளைக் கணவனாக்க எண்ணம் கொண்டு இங்கு வந்து வனத்தில் தவம் செய்து கொண்டிருந்தாள். இந்தத் தகவல் பெருமாளை அடைய, அவருக்கும் மனதில் லஷ்மி மேல் இருந்த ஆசையை அப்படியே மடலாக எழுதி (காதல் கடிதம்!), தனது நம்பிக்கையான உதவியாளரான விஸ்வக்ஸேனரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
கடிதம் கிடைத்த லஷ்மிதேவி, வரச்சொல்லி அனுப்பிய நேரத்தில் சரியாக குளத்தங்கரைக்கு பெருமாள் வர, இருவருக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அந்தத் திருமணத்துக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து குவிந்துவிட, கடுமையான நெருக்கடி. அதனைப் போக்க அவர்களையெல்லாம் தேனீக்களாக ஆக்கினார் பெருமாள். அன்றிலிருந்து பெருமாள் இங்கேயே தங்கிவிட, அவரை தரிசிக்க தேனீக்களும் இங்கேயே தங்கிவிட்டன. அவைதான் தாயார் சந்நிதி மாடத்தில் தேனடையில் இன்னமும் இருக்கின்றன என்பது நம்பிக்கை.
தாயாரை திருமணத்துக்கு தயாராக்க, இங்குள்ள புஷ்கரணியில் இருந்து நீர் எடுத்து நீராட்டியதால் தாயாரின் பெயர் அபிஷேகவள்ளி, பெருமாள் திருப்பாற்கடலை விட்டு நீங்கி, இங்கே கோயில் கொண்டதால் அவருக்கு இன்னொரு பெயர் 'பெரும்புறக்கடல்'.
"மது, கைடபர் எனும் இரு அரக்கர்களை அழித்து, வேதத்தை மீட்கக் கோரி, பெருமாளை தேடிக்கொண்டு வந்தார் பிரம்மா. அவரின் வேண்டுதலை ஏற்று, அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார் பெருமாள். அதனால் தனது நான்கு வேதங்களையும் இங்கே நான்கு தூண்களாக்கி விட்டு, தானும் குளக்கரையில் அமர்ந்து பெருமாளை அனுதினமும் சேவித்து வருகிறார் பிரம்மா.
இப்படி, பக்தர்களையும் தேவர்களையும் வாத்சல்யம் செய்கிறவர் இவர் என்பதால்தான், பக்தவத்சலன் என்று பெயர். தன்னுடைய காதல் மனைவியைக் கைப்பிடித்து மகிழ்வான மனநிலையில் இங்கே நித்யவாசம் செய்வதால், இங்கே வருகிறவர்கள் எதைக் கேட்டாலும் அப்படியே அருளுகிறார் பெருமாள்!" என்று அற்புதக் காரணத்தைச் சொல்கிறார் மூத்த பட்டாச்சாரியார் ராமசாமி.
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர் இந்தப் பெருமாள். கடவுளை அதிகம் பாடாத வடலூர் வள்ளலாரும்கூட, இங்கு வந்து தாயாரைப் பற்றி ஒரு பாடலை பாடியிருக்கிறார். திருவரங்கமுதனார், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், அந்தகக்கவி வீரராகவ முதலியார் ஆகியோரும்கூட இந்தப் பெருமாள் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்.
இப்படி ஆதி முதல், இன்று வரை நின்ற திருவடியாக பக்தர்கள் கவலையைப் போக்கும், வளத்தைக் கொடுக்கும் வரப்பிரசாதியாக பக்தவத்சல பெருமாள் இருக்க, அவரைத் தேடி பக்தர்கள் வருவதில் வியப்பில்லைதானே!
எப்படி செல்வது?
திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது திருக்கண்ணமங்கை. பேருந்து வசதிக்கு குறைவேயில்லை. கோயில் அருகிலேயே பேருந்துகள் நிற்கும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்... காலை 7.30 முதல் மதியம் 12.30 வரை. மாலையில் 5.00 முதல் இரவு 8.30 மணி வரை. கோயில் அலுவலக தொலைபேசி எண்: 04366- 278070.
ஒருநாள் பயணமாக வருகிறவர்கள்... திருக்கண்ணமங்கையை பார்த்த கையோடு... திருவாரூர் தியாகராஜ சுவாமியையும் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய ஊர்களில் கோயில் கொண்டிருக்கும் முருகனையும் தரிசிக்கலாம்.

http://www.hindutemplesonline.com/product_info.php?products_id=277
http://holyindia.org/tamilnadu_temples/733.jsp

No comments:

Post a Comment