Monday, August 9, 2010

இந்தியாவின் முதல் தங்க மகள் தேஜஸ்வினி சாவந்த்!

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த், முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
இதன்மூலம் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பின்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார், தேஜஸ்வினி சாவந்த்.
ஜெர்மெனியின் உள்ள முனிச் நகரில் நடந்து வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் 600-க்கு 597 புள்ளிகள் (100,100,100,99,99,99) குவித்து தங்கப் பதக்கம் வென்றார்
இந்த வெற்றியின் மூலம் 29 வயதான தேஜஸ்வினி சாவந்த், 1998-ம் ஆண்டில் ரஷிய வீராங்கனை மரினா போப்கோவா 597 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்த ஸ்கோரை ஞாயிற்றுக்கிழமை சமன் செய்தார்.
இந்தச் சாதனை குறித்து தேஜஸ்வினி சாவந்த் கூறுகையில், "எனது சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பதக்கம் வெல்வேன் என்றோ, உலக சாதனை படைப்பேன் என்றோ நினைத்து கூட பார்க்கவில்லை.
இரண்டும் ஒரு சேர கிடைத்து இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த உணர்ச்சியை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை. எனது பயிற்சியாளர்கள் சில திட்டங்களை வகுத்து கொடுத்தனர். அதன்படி எல்லாம் திட்டமிட்டபடி நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
காமன்வெல்த் போட்டிக்கான நான் நீண்டகாலமாக தயாராகி வருகிறேன். இந்த வெற்றி எனது நம்பிக்கையை அதிகரிக்கும்," என்றார் தேஜஸ்வினி.
பிரதமர் பாராட்டு...
முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்னை தேஜஸ்வினிக்கு பிரதமர் மன்மோகன் சிங் திங்கட்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டச் செய்தியில், தேஜஸ்சினியின் அற்புதமான திறனால் இந்தியாவே பெருமிதம் கொள்கிறது. அவரது சாதனை, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு நல்ல தூண்டுகோலாக அமையும் என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment