Friday, December 3, 2010

உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே!

லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..
காட்சி:1 இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள

ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். தலை சிதறி, குலுங்கக்கூட சக்தியற்று போராளிகள் செத்து விழ... நம் ஈரக்குலையே இற்றுப்போகிறது.

காட்சி:2 சுட்டுக் கொல்லப்பட்ட பல போராளிகளின் உடல்கள் அலங்கோலமாகக்கிடக்கின்றன. விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியாவின் உடலும் அங்கே கிடக்கிறது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கும் இசைப்பிரியாவின் உடலைக் கைகாட்டும் சிங்கள அதிகாரிகள் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களின் வக்கிர உரையாடலைக் கேட்டால்... கொல்வதற்கு முன் அந்தப் பெண் போராளிகளை சிங்கள வெறி எப்படி எல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது அப்பட்டமாக நம் நெஞ்சை அறுக்கிறது.
காட்சி:3 இரு போராளிகளைக் கொன்று அவர்களின் உடல்களைத் தலை மட்டுமே வெளியே தெரியும்படி மண்ணுக்குள் நட்டுவைத்து இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் யார் எனத் தெரியக் கூடாது என்பதற் காக அவர்களின் முகம் தீயால் கருக்கப்பட்டு இருக் கிறது. நாடு கேட்டுப் போராடியவர்கள் பிணமாக நட்டுவைக்கப்பட்டு இருக்கும் காட்சி, இனவெறிக் கொடூரத்தின் உச்சபட்ச சாட்சியாய் உலுக்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே லண்டனுக்கு வர ஆயத்த மான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4’ தொலைக்காட்சி, ''ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாண மாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!'' என்று அறிவித்தது. அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4’.




ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவு களையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ''அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!'' என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.
போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதறவைக்கிறது. இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ''இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!'' என வலியுறுத்தி இருக்கிறார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.
இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜ பக்ஷே தங்கி இருந்த 'டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபக்ஷேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயார் ஆனார்கள்.
இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ''பிரிட்டனிலேயே ராஜபக்ஷே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!'' என அறிவிக்க... பதறிப்போனார் ராஜபக்ஷே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க... உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்ஷே. லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்ஷேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.
ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபக்ஷே, அனைத்து மீடியாக் களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்ஷே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க... ராஜபக்ஷே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.
எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.



"நேற்றைய தினமான டிசம்பர் 2 -ஆம் தேதி தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாளாகும். ஈழத் தமிழ் இனத்தை கருவறுக்கத் திட்டமிட்டு தன் முப்படைகளையும் ஏவி கோரமான படுகொலை செய்த கொடியவன் மகிந்த ராஜபக்ஷே இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் நட்சத்திர ஓட்டலுக்குள்ளும் தங்கிப் பதுங்க முடியாமல், வீதிக்கு வரமுடியாமல், தூதரகத்திலும் ஒளிந்து கொள்ள முடியாமல் இங்கிலாந்து அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் ஓடித் தப்பித்து இருக்கிறார்.
லண்டனில் உறைபனி கொட்டிக் கொண்டிருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தையும், அவன் முதலில் தங்கியிருந்த ஓட்டலையும் முற்றுகை போட்டிருக்கிறார்கள். கைகளில் புலிக் கொடிகளையும் பிரபாகரன் படத்தையும் ஏந்தியவாறு, "பிரித்தானிய அரசே! ராஜபக்ஷேவைக் கைது செய்!" என்றும், "பயங்கொள்ளி கோழை ராஜபக்ஷே வெளியே வா!" என்றும் வீர முழக்கத்தை விண்ணதிர எழுப்பியுள்ளனர்.
இதற்கு முதல்நாள் டிசம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமை அன்று பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரவையில் ராஜபக்ஷே உரையாற்றுவதாக செய்யப்பட்ட ஏற்பாட்டினைப் பல்கலைக் கழகப் பேரவை நிர்வாகம் இரத்து செய்தது. ‘இனப் படுகொலை செய்த ஒருவனை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேச அனுமதிப்பது நியாயம்தானா’ என்று பல்வேறு மனிதஉரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை இரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
"இங்கிலாந்தில் பேச்சுரிமை கிடையாதா?" என்று பின்னர் கேட்டுள்ளார். இலங்கைத் தீவில் பத்திரிகையாளர்களைக் கொன்று பேச்சுரிமையைப் பறித்து சர்வாதிகார வெறியாட்டம் போட்ட ராஜபக்ஷேயின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. லண்டனிலே ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டமும் கிடைத்த வெற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நெஞ்சுரத்தையும், போராடும் திறத்தையும் தமிæழ விடுதலைக்கான நம்பிக்கையையும் வழங்கி விட்டது.
தமிழர் நெஞ்சைப் பிளக்கின்ற கொடுந்துயரமான செய்தி நவம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில் வீடியோ காட்சியாகக் காட்டப்பட்டது. சிங்கள இராணுவக் கயவர்களால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் நம் இரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது.
இலங்கையில் நடைபெற்ற நீதிக்குப் புறம்பான விசாரணையின்றி இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. மன்றத்தின் விசாரணை அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்ட் ஆஃப் ஹேல்ஸ் தாங்க முடியாத அதிர்ச்சியுற்றதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு முழு உண்மையும் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்துலகப் பொது மன்னிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சாம் ஜாலிப் இதுபற்றி தெரிவிக்கையில் தங்கள் நிறுவனம் இங்கிலாந்து அரசின் காவல் துறையையும் நீதித் துறையையும் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து சாட்சியங்கள் சேகரிக்குமாறும், இது மனித இனத்துக்கே எதிரான குற்றங்கள் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட சிங்கள அரசாங்கத்தினர் சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இக்கொடுமைகளைச் செய்தார்களா என்பதையும் அறியவும் அனைத்துலக நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படவும் உரிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியதோடு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைவிட அதிக அளவில் மிக மோசமான படுகொலைகள் நடந்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்றும், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் மிக மோசமாகக் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுமைக்கு உள்ளான தமிழ்ப் பெண்களில் 27 வயதான இசைப்பிரியா என்று அழைக்கப்படும் ஷோபா எனும் தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒளிவீச்சு செய்தியாளராகவும் இருந்த இந்தப் பெண் சிங்கள இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு பின்னர் நிர்வாணமான நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இளம்பெண்கள் பலரையும் வாய்களைக் கட்டி, கைகளைக் கட்டி, கற்பழித்து பின்னர் துப்பாக்கித் தோட்டாக்களால் குதறியுள்ளனர். சிங்கள இராணுவம் தமிழ் ஈழப் பெண்களை கற்பழித்துச் சுட்டுத் தள்ளும் இன்னும் பல காட்சிகள் ஒளிபரப்ப முடியாத அளவுக்குக் கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சியில் நிர்வாணமாக ஏழு தமிழ்ப்பெண்கள் இறந்து கிடக்கிறார்கள். பிணங்களுக்குப் பக்கத்தில் இருந்து சிங்களவர்கள் கூச்சலிடும் இழிவான பேச்சுக்களால் அவர்கள் மோசமான கற்பழிக்கப்பட்ட உண்மை தெரிகிறது.
இதற்கு மத்தியில் உலகத்தையே பரபரப்பாக்கி வருகிற விக்கிலீக்ஸ் வெளியாக்கிய செய்திகளில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரீஷியா புட்னிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பிய செய்தியில் இலங்கை இராணுவமும், அதிகாரிகளும் போர்க்காலத்தில் நடத்தினார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. தன்னுடைய அரசாங்கமும் இராணுவமும் செய்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்கள் குறித்து அந்த அரசாங்கமே விசாரணை நடத்துவதற்கு முன்னுதாரணமே கிடையாது. இதனை மேலும் சிக்கலாக்கும் உண்மை என்னவென்றால் இந்தப் போர்க் குற்றங்களை நடத்தியதற்கான குற்றச்சாட்டுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயும், அவரது சகோதரர்களும், தளபதி பொன் சேகாவும் பொறுப்பாவார்கள் என்பதுதான்.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் விசாரிக்க அமைத்துள்ள மூவர் குழுவுக்கும் சேனல் 4 நிறுவனம் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தக் கொடியப் போர்க் குற்றத்துக்கு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தி வழிகாட்டும் மத்திய அரசு பெரிதும் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் பின்னால் இன்னும் மறைந்து இருக்கும் மர்மங்களும் செய்யப்பட்ட துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
லண்டனிலே ராஜபக்ஷே பேசக் கூடாது என்று பல்கலைக் கழகம் விரட்டுகிறது; இலங்கைத் தூதரகத்தை ஈழத் தமிழர்கள் முற்றுகை போட இங்கிலாந்து அரசு அனுமதிக்கிறது. ஆனால், கொலைபாதகன் ராஜபக்ஷேவை டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கருணாநிதியின் கட்சியும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு பாராட்டி விருந்து வைக்கிறது. அதனை எதிர்த்து சென்னையிலே அறப்போர் நடத்திய பழ.நெடுமாறனையும் என்னையும் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களையும் கருணாநிதி அரசு கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தது. தமிழகத்திலே உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

Thursday, December 2, 2010

அமிதாப் தந்த அட்வைஸ்!

மிழில் 'வ’ வாரிவிட்டாலும், கன்னட 'ஹுடூகா ஹுடுகி’ பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் மலர்ந்து சிவந்திருக்கிறது லேகா வாஷிங்டன் முகம்! ஒரு மழைச் சந்திப்பில், ''எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?'' என்று பேட்டி ஆரம்பித்தால், ''ஐ... ஐஸ் ஐஸ்!'' என்று கைதட்டிச் சிரிக்கிறார் டியூட்டி ஃப்ரூட்டி பியூட்டி!

''இந்தி, கன்னடத்துல எல்லாம் ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஆனா, சென்னைப் பொண்ணு இன்னும் தமிழில் தடுமாறிட்டே இருக்கீங்களே?''
''நான் என்ன பண்ணட்டும்? 'ஜெயம் கொண்டான்’ படத்துக்குப் பிறகு 'தங்கை’ கேரக்டர்களா தொடர்ந்து வந்தது. 'ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்’னு முடிவெடுத்துட்டதால், எந்தப் படமும் கமிட் ஆகலை. என் அம்மா, அப்பா யாரும் சினிமா இண்டஸ்ட்ரியில் இல்லை. அப்புறமா எனக்குன்னு மேனேஜர் யாரும் இல்லை. இது எல்லாம்கூட எனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததற்குக் காரணமா இருக்கலாம். ஆனா, இந்த ஜனவரியில் இருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன்!''
''இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறீங்களாமே?''
''ரொம்ப சந்தோஷமான 'யெஸ்’! என்னோட முதல் இந்திப் படம், 'பீட்டர் கயா கம்ஸே’ படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் 'பவர்’ படத்தில் அமிதாப்பின் மகளாகவும், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும் நடிக்கிறேன். படத்தில் எனக்கு ரெண்டு டூயட். சஞ்சய் தத், அனில் கபூர் வில்லனாக நடிக்கிறாங்க. ரொம்ப கிராண்ட் டீம், பெரிய படம் தலைவரே!''
''அமிதாப் கூட நடிச்ச அனுபவம்...''
''முதல் நாள் ஷூட்டிங்கே அமிதாப் சாரும், நானும் பேசிக்கிற மாதிரியான ஷாட். நெர்வஸா நின்னுட்டு இருந்தேன். ரொம்ப நீளமான டயலாக் வேற. என் பதற்றத்தைப் பார்த்துட்டு, அமிதாப்ஜியே தோள்ல தட்டிக் கொடுத்து ரிலாக்ஸ் பண்ணாரு. ஒவ்வொரு வார்த்தையும் எப்படிப் பேசணும்னு சொல்லிக் கொடுத்தாரு. 'ரொம்ப சீனியர்கூட நடிக்கிறோம்னு எப்பவும் பதற்றமாகாதே. எப்பவும்போல் உன் ஸ்டைலில் பண்ணு’ன்னு உற்சாகப்படுத்தினார்!''
''நீங்க ரொம்ப தைரியமான பொண்ணுன்னு சிம்பு ஒரு தடவை சொன்னாரே... அப்படியா?''
''ஓ... அப்படியா சொன்னார். தேங்க்ஸ் சிம்பு! தைரியமான பொண்ணுங்கவும், ஏதோ காளையை அடக்குவேன்னுலாம் நினைச்சுக்காதீங்க. என் வேலையை நானே செஞ்சுக்குவேன். தனியாவே வெளியே போவேன், இயக்குநர்களைச் சந்திப்பேன், அறிமுகம் இல்லாதவங்ககிட்டகூட சகஜமா பேசுவேன். ஆனா, ஒரு வேளை பேயை நேரில் பார்த்தா பயப்படுவேனோ!''
''அந்த தைரியம்தான் 'வ குவாட்டர் கட்டிங்’ படத்தை 'மோசமான படம்’னு ட்விட்டர்ல கமென்ட் பண்ண வெச்சதா?''
''ஐயோ! நான் அப்படிலாம் எதுவுமே பண்ணலை. நம்புங்கப்பா. யாரோ என் பேர்ல பொய்யான ஐ.டி-யில் இருந்து அந்த கமென்ட் பண்ணி இருக்காங்க. 'வ குவாட்டர் கட்டிங்’ படம் நான் ரொம்ப என்ஜாய் பண்ண படம். புஷ்கர், காயத்ரி, சிவான்னு அந்த டீமே செம கலகல கூட்டணி. அவங்களோட வேலை பார்த்ததே சுவாரஸ்யமான அனுபவம்தான். ஆனா, அது ஆடியன்ஸுக்குப் போய்ச் சேரலை!''

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

லிங்குசாமியின் அலுவலகம் பக்கம் எட்டிப் பார்த்தால், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன் என்று நட்சத்திர இயக்குநர்களின் கூட்டம்.
''என்ன சார், நீங்க 'வேட்டை’ ஆடப்போறீங்கன்னு தெரியும். இது என்ன புது வேட்டை?'' என்றால் சிரிக்கிறார் லிங்கு.
''என் 'வேட்டை’ வேற. அது நான் 'கிளவுட் நைன்’க்குப் பண்றேன். இவங்க மூணு பேரும் நம்ம 'திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துக்குப் படம் பண்றாங்க. இந்த நிமிஷம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களாக இருக்கும் மூணு நண்பர்களுடன் ஒரே நேரத்தில் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கே புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கு!'' - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் லிங்குசாமி.
சணல் மெத்தைக்குள் புதைந்து அமர்ந்திருக்கும் பாலாஜி சக்திவேல் ஜன்னல் அதிரச் சிரிக்கிறார். ''திருப்பதி பிரதர்ஸுக்காக இப்போ 'வழக்கு எண் 18/09’ பண்ணிட்டு இருக்கேன். ஜனவரியில் ரிலீஸ். நண்பர்களுக்குப் படம் பண்றதுதான் வசதி. இல்லேன்னா... சிலர், 'எனக்குக் காதல் மாதிரியே ஒரு படம்வேணும்’னு தான் ஆரம்பிப்பாங்க. ஒண்ணுபோலவே இன்னொண்ணையும் செய்ய... சினிமா ஒண்ணும் புரோட்டாக் கடை இல்லையே.
இங்கே படைப்பாளிகளுக்கு முதல் தேவை, சுதந்திரம். ஒரு கிரியேட்டரே தயாரிப்பாளரா இருக்கும்போது, இந்த சுதந்திரம் ரொம்ப இயல்பாக் கிடைக்குது. உண்மையைச் சொல்லணும்னா, 'வழக்கு எண் 18/09’ படத்துக்கு லிங்குசாமிகிட்ட பணம் வாங்கி, என் சொந்தப் படம் மாதிரியே எடுத்துட்டு இருக்கேன். ஒரு சின்ன கரெக்ஷன்கூட லிங்கு சொல்றது இல்லை. 100 சதவிகித சுதந்திரம். இதுதான் ஓர் இயக்குநருக்கு முதல் தேவை.
நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க... ஒரு கேனான்-5 ஸ்டில் கேமராவை வெச்சு நான் படம் எடுத்துட்டு இருக்கேன். மற்ற தயாரிப்பாளரா இருந்தா, 'இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?’ன்னு சொல்லிடுவாங்க. ஆனால் லிங்குசாமி, 'நீங்க பண்ணுங்க’ன்னார்!'' என்ற பாலாஜி சக்திவேலின் பேச்சுக்குப் புன்னகைக்கிறார் லிங்குசாமி.
''நான் 'ரன்’ முடிச்ச நேரத்தில், என்கிட்ட பாலாஜி சக்திவேல் சார் 'காதல்’ கதையைச் சொன்னார். 'எனக்கு ஒரு கேமரா இருந்தாப் போதும் லிங்கு. எங்கேயாவது கும்பகோணம் பக்கம் போயி, கிடைக்கிற முகங்களை வெச்சுப் படத்தை எடுத்துட்டு வந்துடுவேன்’னு சொன்னார். 'நானே புரொடியூஸ் பண்றேன்’னு சொன்னேன். ஆனால், பிறகு 'ஜி’ படத்தில் நான் சிக்கிக்கிட்டேன். இப்பவும் 'காதலை’ மிஸ் பண்ண வருத்தம் எனக்கு இருக்கு. அவர் 'திருப்பதி பிரதர்ஸ்’க்குப் படம் பண்றதில் நிஜமாவே எனக்குப் பெருமை. அவர் சொன்னதுபோல ஒரு கிரியேட்டருக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாத் தெரியும்.
நான் 'ஆனந்தம்’ பண்ணும்போது, என் காதுபடவே 'வானத்தைப்போல’ ரீ-மேக்னு பேசிக்குவாங்க. நான் எதையும் கண்டுக்கலை. படைப்பு மீது நாம் வெச்சிருக்கும் நம்பிக்கைதான் முக்கியம். அதனால்தான் 'மைனா’ பார்க்காமலேயே, அதைப்பற்றிக் கேள்விப்பட்டு, பிரபு சாலமனை அடுத்த படத்துக்கு புக் பண்ணினேன். வரிசையான தோல்விகளைத் தாங்கிக்கிட்டு, மறக்க முடியாத ஒரு வெற்றிப் படம் கொடுத் திருக்கிறார் பிரபு. எல்லாக் கேள்விகளுக்கும் அதான் ஒரு கிரியேட்டரின்  பதில். இன்னிக்கு அவர் தமிழ் சினிமாவின் புது ஹீரோவா இருக் கார்!'' என்றதும், பிரபு சாலமன் நிமிர்ந்து, அமர்ந்து பேசுகிறார்.
''நான் 'மைனா’ போஸ்ட் புரொடக்ஷன் முடிச்சு, வியாபாரத்துக்காகப் போராடிட்டு இருந்த சமயத்தில்தான் லிங்குசாமி சார் கூப்பிட்டு, அடுத்த படம் பண்ணச் சொன்னார். இப்போ வரை என்ன கதைன்னு எனக்கும் தெரியாது. அவரும் கேட்கலை. 'மைனா’ கதையை எந்தத் தயாரிப்பாளரிடமும் சொல்லி ஓ.கே. வாங்கி இருக்க முடியாது. ஏன்னா, அது முழுக்க முழுக்க சவுண்ட், மியூஸிக், காட்சி, மௌனம், உணர்வு என்று நகர்கிற கதை. அதை விஷுவலா எடுத்துத்தான் காட்ட முடியும். அதனால்தான் நான் 'ஷாலோம் ஸ்டுடியோ’ன்னு சொந்த கம்பெனியில் மைனாவை எடுத்தேன். இப்போ அடுத்த படத்தின் கதைக்காக வட இந்தியாவின் அறியப்படாத
பிரதேசங்கள் அத்தனைக்கும் ஒரு பயணம் போறேன். நம்ம காலடியில் தேனிக்குப் பக்கத்தில் இருந்த குரங்கணியே நமக்குப் புதுசா இருக் கிறப்போ... இவ்வளவு பெரிய இந்தியா வில் இன்னும் எவ்வளவு இடங்கள் இருக்கும்? அதைப் பின்னணியா வெச்சு அழுத்தமா ஒரு கதை சொல்லப் போறேன்!'' என்கிறார் பிரபு சாலமன்.
''இதோ மிஷ்கின்... இந்த வருடத்தின் பெஸ்ட் ஆக்டர் அவார்டு வாங்கிடுவார்போல!'' என லிங்குசாமி சொல்ல, தலை சாய்த்துச் சிரிக்கிறார் மிஷ்கின்.
''உண்மையைச் சொல்லணும் என்றால், ஓர் இயக்குநர் எல்லா நேரமும் கதையைப்பற்றியே யோசிக் கிறான். ஒரு நடிகனாக இருப்பதால், வாழ்நாள் அஞ்சு வருஷம் அதிகரிக்கும். ஆனா, ஓர் இயக்குநராக இருப்பதால் அவனது வாழ்நாள் அஞ்சு வருஷம் குறையும்.
முன்னாடி எல்லாம் ஒரு சினிமா பழசாக கொஞ்ச நாள் பிடிக்கும். இப்போ உடனுக்குடனே பழசாகிடுது. பிடிச்சு இருந்தா... மக்கள் கொண்டாடுறாங்க. பிடிக்கலைன்னா... தயவுதாட்சண்யம் இல்லாமத் தூக்கி வீசிடுறாங்க.
கதை சொல்ற பாட்டிகள் யாரும் இப்போ இல்லை. நானெல்லாம் ஒரு பாட்டிகிட்ட கதை கேட்டு 20 வருஷம் ஆச்சு. இன்னிக்கு சினிமா மட்டும்தான் கதை சொல்லிட்டு இருக்கு. ஒரு தியேட்டருக்குள் என்னை மதிச்சு ரெண்டரை மணி நேரம் உட்காரும் ரசிகனுக்கு முதலில் நான் மரியாதை பண்ணணும். தன் நேரத்தை, பணத்தைச் செலவு பண்ணி, தியேட்டருக்கு வர்ற ரசிகனால்தான் சினிமா உயிர் வாழுது. அந்த பொறுப்பு உணர்வு இயக்குநருக்கு இருக்கு. அதனால்தான் எங்களுக்கு பிரஷரும் அதிகமா இருக்கு. லிங்குசாமி மாதிரி கிரியேட்டருக்குப் படம் பண்ணும்போது, அந்த பிரஷர் சந்தோஷமா உருமாறிடும். ஆர்யாவை வெச்சு ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். இன்னும் பேர் வைக்கலை. ஆனால், கதை முழுமையா தயாரா இருக்கு. ஒரு புது சினிமா லாங்வேஜ் டிரை பண்ணிப் பார்க்கப் போறேன். நான் எழுதிய திரைக் கதை யிலேயே இதுதான் சிறந்ததுன்னு நினைக்கிறேன்!'' என்கிறார் மிஷ்கின், தன் கறுப்புக் கண்ணாடியைச் சரிசெய்தபடி.
மறுபடியும் பேசத் தொடங்கும் லிங்குசாமி, ''இதை எல்லாம் தாண்டி நாங்க எல்லோருமே நண்பர்கள். அதிலும் பாலாஜி சார், தயவு தாட்சண்யமே இல்லாமல் முகத்துக்கு நேராக குறைகளைச் சுட்டிக்காட்டுவார். 'காதல்’ படத்தில் அந்த சித்தப்பா கேரக்டருக்கு 'உண்மையான ஊனமுற்றவர் ஒருவரைப் பயன்படுத்துங்க’ன்னு நான்தான் சொன்னேன். அதுவே என் 'சண்டைக் கோழி’யில் தலைவாசல் விஜய்யை ஊனமுற்றவரா நடிக்கவெச்சிருப்பேன். 'எனக்கு மட்டும் சொன்ன? நீயும் பண்ணியிருக்கணும்ல?’ன்னு முகத்துக்கு நேராக் கேட்டார். அதான் நட்பு!  
இவங்க எல்லோரிடமும் கதைக்காக நான் பேசுவதால் நான்தான் தயாரிப்பாளராத் தெரியுறேன். உண்மையில், 'திருப்பதி பிரதர்ஸ்’ மூலமா இந்தப் படங்களைத் தயாரிக்கிறது என் தம்பி சுபாஸ் சந்திரபோஸ். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன்... மூன்று பேரும் இப்போ 'திருப்பதி பிரதர்ஸில்’ இணைஞ்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் எல்லா இயக்குநர்களையும் இதில் சேர்க்கணும் என்பதுதான் என் ஆசை!'' - லிங்குசாமியின் கண்களில் மின்னுகிறது கனவு!

திருமா மேடையில் திரும்பவும் 'திடுக்'

''காங்கிரஸைத் தோற்கடித்த பீகார் மக்களுக்கு நன்றி!''

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, 'கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற... ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை!

ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்...’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க-வின் நிலைப்பாடே இந்த அளவுக்கு மாறிய பிறகு, திருமாவளவனுக்கு காங்கிரஸை சீண்ட சொல்லவும் வேண்டுமா என்ன?!
கடந்த 26-ம் தேதி விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், 'ஈழ விடுதலைக் களம்’ என்ற தலைப்பில் திருமாவளவனின் உரைத் தொகுப்பும், தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல்களும் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டன.
பாடல்கள் அடங்கிய சி.டி-யை கவிஞர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். 'வருவார்’ என்கிற ஒற்றை வார்த்தையையே உக்கிரக் கவிதையாக்கி முழங்கிவிட்டு அறிவுமதி அமர... அடுத்தபடியாய் மைக் பிடித்தார் அமீர்.
திருமாவின் சமீப கால அரசியல் வளர்ச்சியைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசிய அமீர், ''ஈழ விவகாரத்தில் திருமாவளவனின் நிலைப்பாட்டையும் முழக்கத்தையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஒருசில நேரங்களில்... ஈழ ஆதரவுப் பாதையைவிட்டு அவர் விலகிச் செல்கிறாரோ என்கிற சந்தேகம்கூட எனக்கு ஏற்பட்டது உண்டு! ஒருவேளை அரசியல் நெளிவுசுளிவுகளுக்காக அவர் அப்படிப் போகிறாரோ என்றுகூட நினைப்பேன். ஆனால், எப்படிப் போனாலும் ஒரு கட்டத்தில் அவர் நேர்க்கோட்டில் வந்து நின்று விடுவார்!'' எனச் சொன்னபோது சிறுத்தைகளே கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள்.
அடுத்துப் பேசிய கவிஞர் இன்குலாப், காங்கிரஸையும் தி.மு.க-வையும் ஒருசேரப் போட்டுத் தாக்கினார். ''2002-ம் வருடம் நாங்கள் ஈழத்துக்குப் போய் இருந்தபோது, 'தமிழீழம் அமைந்த பிறகும் சாதியச் சர்ச்சைகள் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என புலிகளின் மூத்த நிர்வாகி களிடமே தைரியமாகக் கேள்வி கேட்டவர் திருமாவளவன். ஆனால், இன்றைக்கு ராஜ பக்ஷேவை சந்தித்தபோது ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என சிலர் திருமாவைப் பார்த்துக் கேட்கிறார்கள். எம்.பி-க்கள் குழுவின் தலைவராக ஒருவர் இருக்கும்போது, அவரை மீறி நிதானம் இழந்து பேசுவது முறையாகாது என்பதற்காகத்தான் திருமா அமைதியாக இருந்தார். ராஜபக்ஷே எகத்தாளமாகக் கேள்வி கேட்டுச் சிரித்தபோது, உடன் போனவர்களுக்கு அல்லவா அது உறைத்திருக்க வேண்டும்? திருமாவின் கௌரவத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் வராமல் அவர்கள்தானே பார்த்திருக்க வேண்டும்? கூட்டணிக்காகவோ, கூடுதல் ஸீட்டுக்காகவோ கொண்ட கொள்கையை திருமாவளவன் கைவிடுவார் என யாரும் நினைத்தீர் களேயானால்... நீங்கள் ஏமாந்து போய் விடு வீர்கள்!'' என இன்குலாப் பேசி முடிக்க, கூட்டத்தை உஷ்ணம் மேலும் பற்றிக் கொண்டது.
இந்தத் தகிப்பை முழுக்க உணர்ந்தவராக மேடை ஏறிய விடுதலைச் சிறுத்தைகள் வெளியீட்டு மையத்தின் மாநிலச் செயலாளரான ஆதிரை, ''இந்த நேரத்தில் பீகார் மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். சிங்கள அரசுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்கி ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு பீகார் மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். அதற்குத்தான் எங்களின் நன்றி!'' எனச் சொல்ல... கூட்டமே ஆரவாரித்தது.
இறுதியில் மைக் பிடித்த திருமா, ''கவிஞர் இன்குலாப், காங்கிரஸ் அரசு தமிழ் சமூகத்துக்குச் செய்த துரோ கத்தை, தீங்கை, கேட்டை, மனவலியோடு பதிவு செய்தார். அத்தகைய கேடுகளைக் கண்டிக்க நான் எப்போதும் தயங்கியது இல்லை. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய கன்னி உரையிலேயே ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்கும் காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தைப் பதிவு செய்தேன். அது இன்றைக்கும் அவைக் குறிப்பில் இருக்கிறது.
இங்கே பேசிய அமீர், நான் தி.மு.க. கூட்டணிக்குப் போனதால் நெளிவுசுளிவோடு நடப்பதாகச் சொன் னார். நாங்களாக எடுக்கும் முடிவு வேறு... எங்கள் மீது திணிக்கப்படும் முடிவுகள் வேறு என்பதை அறிவார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால், எங்களைத் 'துரோகி’ என்றவர்கள், இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணிக்கு வலியப்போய் வாய்ப்பு தேடும் அம்மையாரை நோக்கி ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? என்னை துரோகி எனச் சொன்னால், அம்மையார் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழ்த் தேசியவாதிகளை என்னவென்று சொல்வது? அம்மையார் அணியில் உடன் நின்றாலும், வைகோ எப்படி ஈழ விவகாரத்தில் நேர்மையாக இருப்பார் என்று நம்புகிறீர்களோ... அதைப்போல் எந்த அணியில் இருந்தாலும் இந்தத் திருமாவும் ஈழக் கொள்கையை விட்டுக்கொடுக்காத வேங்கையாகத்தான் இருப்பான் என்பதை மட்டும் ஏன் உங்கள் உள்ளம் ஏற்க மறுக்கிறது?'' எனச் சீறி முடித்தார்.
திருமாவின் ஒவ்வொரு வார்த்தையையும் உற்றுக் கவனிக்கும் காங்கிரஸ் தரப்பு, இதை வைத்து எப்படி யான கபடி ஆட்டம் நடத்தக் காத்திருக்கிறதோ?!

Wednesday, December 1, 2010

மட்டக்களப்பிலும் மாவீரர் திருநாள்..

 திகைத்துப் போன சிங்கள அரசு.....


''நிறைவாகும் வரை மறைவாக இருப்பதைப் போல தற்போது மறைவாக இருக்கும் மேதகு பிரபாகரன் சீக்கிரமே வெளியே வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும்!'' - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.

''ஐந்தாம் கட்டப் போரை முன்னெடுக்கத் தலைவர் பிரபாகரன் நிச்சயம் வருவார்!'' - நெடுமாறன்.
''தமிழ் ஈழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழ் ஈழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலைகொள்ளும்!'' - கவிஞர் காசி ஆனந்தன்.
மாவீரர் நாளில் மறுபடியும் தலைவர் பிரபாகரன் வருவார்... வீர வணக்க உரை ஆற்றுவார்! எனக் காத்திருந்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அடைகாக்கும் விதமாக வார்க்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் இவை.
ஆனாலும், இந்த வருட மாவீரர் நாளில், ''தலைவர் உயிரோடு இருந்தாலும் உலகச் சூழல் அவர் உதயமாவதற்கு ஏற்ற நிலையில் இல்லை!'' என தமிழ் ஈழ ஆர்வலர்கள் தங்களைத் தாங்களே தெளிவுபடுத்திக்கொண்டார்கள். அதே வேளை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மாவீரர் தின நிகழ்வுகள் உலகம் முழுக்க அனுசரிக்கப்பட்டு இருக்கின்றன. ''ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல்... அனைத்துலகத் தமிழ் மக்களும், தமிழ் ஈழ தேசம் என்கிற தேரை இழுப்போமேயானால், உலகின் எந்த சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது!'' என நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் மாவீரர் நாளில் அறிவித்தார். அதையடுத்து, இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் ராணுவக் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் மீறி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மாவீரர் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வுகள் தைரியமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது சம்பந்தமான புகைப்படங்களைப் பார்த்து சிங்கள அரசு திகைத்துப்போய் இருக்கிறது.
''மீண்டும் சுதந்திரப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண மக்கள் தயாராக இருக்கிறார்கள். புலித் தலைமையின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை மாவீரர் நாள் நிகழ்வுகள் அப்பட்டமாக்கி இருக்கின்றன!'' என்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள்.
புலித் தலைவர் பிரபாகரனோ, இல்லை அவர் தரப்பிலோ இருந்து மாவீரர் தின உரை நிகழ்த்தப்படாவிட்டாலும், புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து மாவீரர் அறிக்கை வெளியிடப்பட்டது. மாவீரர்களின் தியாகங்களை சிலிர்ப்போடு நினைவுகூர்ந்த அந்த அறிக்கையில், ''பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது போர் மீதுகொண்ட பற்றுதலுக்காகவோ எம் மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவே எம் வீரர்கள் போராடினார்கள்!'' என்பதை ஆரம்பத்திலேயே உரத்துச் சொல்லி இருக்கிறார்கள். போருக்கு முன்னும் பின்னுமான விளைவுகளைச் சொல்லி நீளும் அந்த அறிக்கையில், ''உலக வரலாறு கண்டிராத, மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும், அதன் பின்னரும் உலகம் தீர்க்கமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்களை வேதனையின் விளிம்பில் தள்ளி இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற மமதையோடு சிங்களப் பேரினவாத அரசு நடந்துகொள்ளும் முறை மனித விழுமியங்களுக்கு அப்பாற் பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது!'' என்பதைத் துயரத்தோடு உலகின் பார்வைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.  பிரபாகரன் குறித்தோ, அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்தோ மாவீரர் அறிக்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ''எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், காலத்துக்கு ஏற்ப, உலக ஒழுங்குகளுக்கு அமைய, மாற்றங்களைச் செய்து, அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்!'' என்கிற அறைகூவல் அனைத்துலகத் தமிழர்களையும் நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக் கிறது.
இதற்கிடையில் ஒருசில இணையதளங்களில், ''இலங்கையின் காடுகளில் பதுங்கி வாழும் புலிகள் ஈழ மக்களைச் சந்தித்தபோது பிரபாகரன் குறித்துப் பேசி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாகவும், உலகச் சூழலுக்குத் தக்கபடி தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்றும் ஈழ மக்களிடம் சொல்லி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதால்தான் அவர்கள் காட்டுக்குள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரமே ஈழ மக்களுக்கு அடுத்தகட்ட அறிவிப்புகளைச் சொல்வதாகவும் தகவல் பகர்ந்து இருக்கிறார்கள்!'' எனச் செய்தி வெளியிட்டுப் பரபரக்கவைத்தன.
இது குறித்துப் பேசும் தமிழ் ஈழ ஆர்வலர்கள் சிலர், ''தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா... இல்லையா... என்பது குறித்து இப்போதைக்கு பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சர்வதேச நாடுகள் புலிகளைப் பார்த்த பார்வை இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. புலிகள் மீதான தடையைத் தளர்த்த பன்னாட்டுத் தமிழர்களும் தீவிரமாக மெனக்கெட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை உடைக்க சட்டரீதியான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சட்டதிட்டங்கள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் ஈழ அரசின் சார்பில் ஸ்டாம்ப் வெளியிடும் முயற்சிகள் முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பெருகி வரும் சீன ஆதிக்கத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வரும் நேரம் இது. இந்த நேரத்தில் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிகளும் நம்பிக்கையூட்டி வருகின்றன. மாவீரர் நாளில் உலகளாவிய அளவில் உருவாகி இருக்கும் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி, இலங்கையில் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் தமிழர்களைக் காப்பாற்றவும், நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அங்கீகாரம் பெறவும் தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன. அதனால், ஈழ விடிவுக்கு நம்மால் ஆன அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்வதுதான் இப்போதைய அவசியம்! நம் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்படும் நாளில் தலைவர் குறித்த புதிருக்கும் விடை கிடைக்கப்போவது நிச்சயம்!'' என்கிறார்கள் தீர்க்கமாக!