Thursday, December 2, 2010

திருமா மேடையில் திரும்பவும் 'திடுக்'

''காங்கிரஸைத் தோற்கடித்த பீகார் மக்களுக்கு நன்றி!''

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, 'கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற... ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை!

ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்...’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க-வின் நிலைப்பாடே இந்த அளவுக்கு மாறிய பிறகு, திருமாவளவனுக்கு காங்கிரஸை சீண்ட சொல்லவும் வேண்டுமா என்ன?!
கடந்த 26-ம் தேதி விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், 'ஈழ விடுதலைக் களம்’ என்ற தலைப்பில் திருமாவளவனின் உரைத் தொகுப்பும், தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல்களும் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டன.
பாடல்கள் அடங்கிய சி.டி-யை கவிஞர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். 'வருவார்’ என்கிற ஒற்றை வார்த்தையையே உக்கிரக் கவிதையாக்கி முழங்கிவிட்டு அறிவுமதி அமர... அடுத்தபடியாய் மைக் பிடித்தார் அமீர்.
திருமாவின் சமீப கால அரசியல் வளர்ச்சியைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசிய அமீர், ''ஈழ விவகாரத்தில் திருமாவளவனின் நிலைப்பாட்டையும் முழக்கத்தையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஒருசில நேரங்களில்... ஈழ ஆதரவுப் பாதையைவிட்டு அவர் விலகிச் செல்கிறாரோ என்கிற சந்தேகம்கூட எனக்கு ஏற்பட்டது உண்டு! ஒருவேளை அரசியல் நெளிவுசுளிவுகளுக்காக அவர் அப்படிப் போகிறாரோ என்றுகூட நினைப்பேன். ஆனால், எப்படிப் போனாலும் ஒரு கட்டத்தில் அவர் நேர்க்கோட்டில் வந்து நின்று விடுவார்!'' எனச் சொன்னபோது சிறுத்தைகளே கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள்.
அடுத்துப் பேசிய கவிஞர் இன்குலாப், காங்கிரஸையும் தி.மு.க-வையும் ஒருசேரப் போட்டுத் தாக்கினார். ''2002-ம் வருடம் நாங்கள் ஈழத்துக்குப் போய் இருந்தபோது, 'தமிழீழம் அமைந்த பிறகும் சாதியச் சர்ச்சைகள் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என புலிகளின் மூத்த நிர்வாகி களிடமே தைரியமாகக் கேள்வி கேட்டவர் திருமாவளவன். ஆனால், இன்றைக்கு ராஜ பக்ஷேவை சந்தித்தபோது ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என சிலர் திருமாவைப் பார்த்துக் கேட்கிறார்கள். எம்.பி-க்கள் குழுவின் தலைவராக ஒருவர் இருக்கும்போது, அவரை மீறி நிதானம் இழந்து பேசுவது முறையாகாது என்பதற்காகத்தான் திருமா அமைதியாக இருந்தார். ராஜபக்ஷே எகத்தாளமாகக் கேள்வி கேட்டுச் சிரித்தபோது, உடன் போனவர்களுக்கு அல்லவா அது உறைத்திருக்க வேண்டும்? திருமாவின் கௌரவத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் வராமல் அவர்கள்தானே பார்த்திருக்க வேண்டும்? கூட்டணிக்காகவோ, கூடுதல் ஸீட்டுக்காகவோ கொண்ட கொள்கையை திருமாவளவன் கைவிடுவார் என யாரும் நினைத்தீர் களேயானால்... நீங்கள் ஏமாந்து போய் விடு வீர்கள்!'' என இன்குலாப் பேசி முடிக்க, கூட்டத்தை உஷ்ணம் மேலும் பற்றிக் கொண்டது.
இந்தத் தகிப்பை முழுக்க உணர்ந்தவராக மேடை ஏறிய விடுதலைச் சிறுத்தைகள் வெளியீட்டு மையத்தின் மாநிலச் செயலாளரான ஆதிரை, ''இந்த நேரத்தில் பீகார் மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். சிங்கள அரசுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்கி ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு பீகார் மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். அதற்குத்தான் எங்களின் நன்றி!'' எனச் சொல்ல... கூட்டமே ஆரவாரித்தது.
இறுதியில் மைக் பிடித்த திருமா, ''கவிஞர் இன்குலாப், காங்கிரஸ் அரசு தமிழ் சமூகத்துக்குச் செய்த துரோ கத்தை, தீங்கை, கேட்டை, மனவலியோடு பதிவு செய்தார். அத்தகைய கேடுகளைக் கண்டிக்க நான் எப்போதும் தயங்கியது இல்லை. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய கன்னி உரையிலேயே ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்கும் காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தைப் பதிவு செய்தேன். அது இன்றைக்கும் அவைக் குறிப்பில் இருக்கிறது.
இங்கே பேசிய அமீர், நான் தி.மு.க. கூட்டணிக்குப் போனதால் நெளிவுசுளிவோடு நடப்பதாகச் சொன் னார். நாங்களாக எடுக்கும் முடிவு வேறு... எங்கள் மீது திணிக்கப்படும் முடிவுகள் வேறு என்பதை அறிவார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால், எங்களைத் 'துரோகி’ என்றவர்கள், இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணிக்கு வலியப்போய் வாய்ப்பு தேடும் அம்மையாரை நோக்கி ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? என்னை துரோகி எனச் சொன்னால், அம்மையார் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழ்த் தேசியவாதிகளை என்னவென்று சொல்வது? அம்மையார் அணியில் உடன் நின்றாலும், வைகோ எப்படி ஈழ விவகாரத்தில் நேர்மையாக இருப்பார் என்று நம்புகிறீர்களோ... அதைப்போல் எந்த அணியில் இருந்தாலும் இந்தத் திருமாவும் ஈழக் கொள்கையை விட்டுக்கொடுக்காத வேங்கையாகத்தான் இருப்பான் என்பதை மட்டும் ஏன் உங்கள் உள்ளம் ஏற்க மறுக்கிறது?'' எனச் சீறி முடித்தார்.
திருமாவின் ஒவ்வொரு வார்த்தையையும் உற்றுக் கவனிக்கும் காங்கிரஸ் தரப்பு, இதை வைத்து எப்படி யான கபடி ஆட்டம் நடத்தக் காத்திருக்கிறதோ?!

No comments:

Post a Comment