Friday, December 3, 2010

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ

டிச.2.. தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாள்:வைகோ


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.



"நேற்றைய தினமான டிசம்பர் 2 -ஆம் தேதி தமிழர்களைத் தலைநிமிர வைத்த நாளாகும். ஈழத் தமிழ் இனத்தை கருவறுக்கத் திட்டமிட்டு தன் முப்படைகளையும் ஏவி கோரமான படுகொலை செய்த கொடியவன் மகிந்த ராஜபக்ஷே இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் நட்சத்திர ஓட்டலுக்குள்ளும் தங்கிப் பதுங்க முடியாமல், வீதிக்கு வரமுடியாமல், தூதரகத்திலும் ஒளிந்து கொள்ள முடியாமல் இங்கிலாந்து அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் ஓடித் தப்பித்து இருக்கிறார்.
லண்டனில் உறைபனி கொட்டிக் கொண்டிருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தையும், அவன் முதலில் தங்கியிருந்த ஓட்டலையும் முற்றுகை போட்டிருக்கிறார்கள். கைகளில் புலிக் கொடிகளையும் பிரபாகரன் படத்தையும் ஏந்தியவாறு, "பிரித்தானிய அரசே! ராஜபக்ஷேவைக் கைது செய்!" என்றும், "பயங்கொள்ளி கோழை ராஜபக்ஷே வெளியே வா!" என்றும் வீர முழக்கத்தை விண்ணதிர எழுப்பியுள்ளனர்.
இதற்கு முதல்நாள் டிசம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமை அன்று பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரவையில் ராஜபக்ஷே உரையாற்றுவதாக செய்யப்பட்ட ஏற்பாட்டினைப் பல்கலைக் கழகப் பேரவை நிர்வாகம் இரத்து செய்தது. ‘இனப் படுகொலை செய்த ஒருவனை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேச அனுமதிப்பது நியாயம்தானா’ என்று பல்வேறு மனிதஉரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை இரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
"இங்கிலாந்தில் பேச்சுரிமை கிடையாதா?" என்று பின்னர் கேட்டுள்ளார். இலங்கைத் தீவில் பத்திரிகையாளர்களைக் கொன்று பேச்சுரிமையைப் பறித்து சர்வாதிகார வெறியாட்டம் போட்ட ராஜபக்ஷேயின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. லண்டனிலே ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டமும் கிடைத்த வெற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நெஞ்சுரத்தையும், போராடும் திறத்தையும் தமிæழ விடுதலைக்கான நம்பிக்கையையும் வழங்கி விட்டது.
தமிழர் நெஞ்சைப் பிளக்கின்ற கொடுந்துயரமான செய்தி நவம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில் வீடியோ காட்சியாகக் காட்டப்பட்டது. சிங்கள இராணுவக் கயவர்களால் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் நம் இரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது.
இலங்கையில் நடைபெற்ற நீதிக்குப் புறம்பான விசாரணையின்றி இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. மன்றத்தின் விசாரணை அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்ட் ஆஃப் ஹேல்ஸ் தாங்க முடியாத அதிர்ச்சியுற்றதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு முழு உண்மையும் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்துலகப் பொது மன்னிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சாம் ஜாலிப் இதுபற்றி தெரிவிக்கையில் தங்கள் நிறுவனம் இங்கிலாந்து அரசின் காவல் துறையையும் நீதித் துறையையும் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து சாட்சியங்கள் சேகரிக்குமாறும், இது மனித இனத்துக்கே எதிரான குற்றங்கள் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட சிங்கள அரசாங்கத்தினர் சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இக்கொடுமைகளைச் செய்தார்களா என்பதையும் அறியவும் அனைத்துலக நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படவும் உரிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியதோடு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைவிட அதிக அளவில் மிக மோசமான படுகொலைகள் நடந்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்றும், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் மிக மோசமாகக் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுமைக்கு உள்ளான தமிழ்ப் பெண்களில் 27 வயதான இசைப்பிரியா என்று அழைக்கப்படும் ஷோபா எனும் தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒளிவீச்சு செய்தியாளராகவும் இருந்த இந்தப் பெண் சிங்கள இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு பின்னர் நிர்வாணமான நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இளம்பெண்கள் பலரையும் வாய்களைக் கட்டி, கைகளைக் கட்டி, கற்பழித்து பின்னர் துப்பாக்கித் தோட்டாக்களால் குதறியுள்ளனர். சிங்கள இராணுவம் தமிழ் ஈழப் பெண்களை கற்பழித்துச் சுட்டுத் தள்ளும் இன்னும் பல காட்சிகள் ஒளிபரப்ப முடியாத அளவுக்குக் கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சியில் நிர்வாணமாக ஏழு தமிழ்ப்பெண்கள் இறந்து கிடக்கிறார்கள். பிணங்களுக்குப் பக்கத்தில் இருந்து சிங்களவர்கள் கூச்சலிடும் இழிவான பேச்சுக்களால் அவர்கள் மோசமான கற்பழிக்கப்பட்ட உண்மை தெரிகிறது.
இதற்கு மத்தியில் உலகத்தையே பரபரப்பாக்கி வருகிற விக்கிலீக்ஸ் வெளியாக்கிய செய்திகளில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரீஷியா புட்னிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பிய செய்தியில் இலங்கை இராணுவமும், அதிகாரிகளும் போர்க்காலத்தில் நடத்தினார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. தன்னுடைய அரசாங்கமும் இராணுவமும் செய்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்கள் குறித்து அந்த அரசாங்கமே விசாரணை நடத்துவதற்கு முன்னுதாரணமே கிடையாது. இதனை மேலும் சிக்கலாக்கும் உண்மை என்னவென்றால் இந்தப் போர்க் குற்றங்களை நடத்தியதற்கான குற்றச்சாட்டுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயும், அவரது சகோதரர்களும், தளபதி பொன் சேகாவும் பொறுப்பாவார்கள் என்பதுதான்.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் விசாரிக்க அமைத்துள்ள மூவர் குழுவுக்கும் சேனல் 4 நிறுவனம் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்ஷேவின் கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தக் கொடியப் போர்க் குற்றத்துக்கு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தி வழிகாட்டும் மத்திய அரசு பெரிதும் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் பின்னால் இன்னும் மறைந்து இருக்கும் மர்மங்களும் செய்யப்பட்ட துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
லண்டனிலே ராஜபக்ஷே பேசக் கூடாது என்று பல்கலைக் கழகம் விரட்டுகிறது; இலங்கைத் தூதரகத்தை ஈழத் தமிழர்கள் முற்றுகை போட இங்கிலாந்து அரசு அனுமதிக்கிறது. ஆனால், கொலைபாதகன் ராஜபக்ஷேவை டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கருணாநிதியின் கட்சியும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு பாராட்டி விருந்து வைக்கிறது. அதனை எதிர்த்து சென்னையிலே அறப்போர் நடத்திய பழ.நெடுமாறனையும் என்னையும் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களையும் கருணாநிதி அரசு கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தது. தமிழகத்திலே உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

1 comment: