Wednesday, December 1, 2010

மட்டக்களப்பிலும் மாவீரர் திருநாள்..

 திகைத்துப் போன சிங்கள அரசு.....


''நிறைவாகும் வரை மறைவாக இருப்பதைப் போல தற்போது மறைவாக இருக்கும் மேதகு பிரபாகரன் சீக்கிரமே வெளியே வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும்!'' - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.

''ஐந்தாம் கட்டப் போரை முன்னெடுக்கத் தலைவர் பிரபாகரன் நிச்சயம் வருவார்!'' - நெடுமாறன்.
''தமிழ் ஈழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழ் ஈழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலைகொள்ளும்!'' - கவிஞர் காசி ஆனந்தன்.
மாவீரர் நாளில் மறுபடியும் தலைவர் பிரபாகரன் வருவார்... வீர வணக்க உரை ஆற்றுவார்! எனக் காத்திருந்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அடைகாக்கும் விதமாக வார்க்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் இவை.
ஆனாலும், இந்த வருட மாவீரர் நாளில், ''தலைவர் உயிரோடு இருந்தாலும் உலகச் சூழல் அவர் உதயமாவதற்கு ஏற்ற நிலையில் இல்லை!'' என தமிழ் ஈழ ஆர்வலர்கள் தங்களைத் தாங்களே தெளிவுபடுத்திக்கொண்டார்கள். அதே வேளை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மாவீரர் தின நிகழ்வுகள் உலகம் முழுக்க அனுசரிக்கப்பட்டு இருக்கின்றன. ''ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல்... அனைத்துலகத் தமிழ் மக்களும், தமிழ் ஈழ தேசம் என்கிற தேரை இழுப்போமேயானால், உலகின் எந்த சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது!'' என நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் மாவீரர் நாளில் அறிவித்தார். அதையடுத்து, இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் ராணுவக் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் மீறி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மாவீரர் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வுகள் தைரியமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது சம்பந்தமான புகைப்படங்களைப் பார்த்து சிங்கள அரசு திகைத்துப்போய் இருக்கிறது.
''மீண்டும் சுதந்திரப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண மக்கள் தயாராக இருக்கிறார்கள். புலித் தலைமையின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை மாவீரர் நாள் நிகழ்வுகள் அப்பட்டமாக்கி இருக்கின்றன!'' என்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள்.
புலித் தலைவர் பிரபாகரனோ, இல்லை அவர் தரப்பிலோ இருந்து மாவீரர் தின உரை நிகழ்த்தப்படாவிட்டாலும், புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து மாவீரர் அறிக்கை வெளியிடப்பட்டது. மாவீரர்களின் தியாகங்களை சிலிர்ப்போடு நினைவுகூர்ந்த அந்த அறிக்கையில், ''பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது போர் மீதுகொண்ட பற்றுதலுக்காகவோ எம் மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவே எம் வீரர்கள் போராடினார்கள்!'' என்பதை ஆரம்பத்திலேயே உரத்துச் சொல்லி இருக்கிறார்கள். போருக்கு முன்னும் பின்னுமான விளைவுகளைச் சொல்லி நீளும் அந்த அறிக்கையில், ''உலக வரலாறு கண்டிராத, மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும், அதன் பின்னரும் உலகம் தீர்க்கமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்களை வேதனையின் விளிம்பில் தள்ளி இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற மமதையோடு சிங்களப் பேரினவாத அரசு நடந்துகொள்ளும் முறை மனித விழுமியங்களுக்கு அப்பாற் பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது!'' என்பதைத் துயரத்தோடு உலகின் பார்வைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.  பிரபாகரன் குறித்தோ, அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்தோ மாவீரர் அறிக்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ''எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், காலத்துக்கு ஏற்ப, உலக ஒழுங்குகளுக்கு அமைய, மாற்றங்களைச் செய்து, அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்!'' என்கிற அறைகூவல் அனைத்துலகத் தமிழர்களையும் நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக் கிறது.
இதற்கிடையில் ஒருசில இணையதளங்களில், ''இலங்கையின் காடுகளில் பதுங்கி வாழும் புலிகள் ஈழ மக்களைச் சந்தித்தபோது பிரபாகரன் குறித்துப் பேசி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாகவும், உலகச் சூழலுக்குத் தக்கபடி தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்றும் ஈழ மக்களிடம் சொல்லி இருக்கிறார்கள். நம்பகமான தகவல்கள் வந்திருப்பதால்தான் அவர்கள் காட்டுக்குள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரமே ஈழ மக்களுக்கு அடுத்தகட்ட அறிவிப்புகளைச் சொல்வதாகவும் தகவல் பகர்ந்து இருக்கிறார்கள்!'' எனச் செய்தி வெளியிட்டுப் பரபரக்கவைத்தன.
இது குறித்துப் பேசும் தமிழ் ஈழ ஆர்வலர்கள் சிலர், ''தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா... இல்லையா... என்பது குறித்து இப்போதைக்கு பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சர்வதேச நாடுகள் புலிகளைப் பார்த்த பார்வை இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. புலிகள் மீதான தடையைத் தளர்த்த பன்னாட்டுத் தமிழர்களும் தீவிரமாக மெனக்கெட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை உடைக்க சட்டரீதியான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சட்டதிட்டங்கள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் ஈழ அரசின் சார்பில் ஸ்டாம்ப் வெளியிடும் முயற்சிகள் முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பெருகி வரும் சீன ஆதிக்கத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வரும் நேரம் இது. இந்த நேரத்தில் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிகளும் நம்பிக்கையூட்டி வருகின்றன. மாவீரர் நாளில் உலகளாவிய அளவில் உருவாகி இருக்கும் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி, இலங்கையில் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் தமிழர்களைக் காப்பாற்றவும், நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அங்கீகாரம் பெறவும் தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன. அதனால், ஈழ விடிவுக்கு நம்மால் ஆன அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்வதுதான் இப்போதைய அவசியம்! நம் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்படும் நாளில் தலைவர் குறித்த புதிருக்கும் விடை கிடைக்கப்போவது நிச்சயம்!'' என்கிறார்கள் தீர்க்கமாக!

No comments:

Post a Comment