Tuesday, August 24, 2010

'போதைப் பொருள் பயன்படுத்தினார்களா தமிழ் நடிகைகள்?

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் இருவர், போதைப் பொருள் வாங்கும்போது போலீஸாரிடம் சிக்கிய விவகாரம், ஆந்திராவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, போதைக் கும்பலுடன் சில தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கசிய... கோலிவுட்டும் ஆடிப்போய் இருக்கிறது!
ஆகஸ்ட் 19, இரவு ஏழு மணி... ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் ஆந்திர போலீஸார். சந்தேகப்படும் வகையில் டூ-வீலரில் வந்த நைஜீரிய ஆசாமி சீமா கிளமென்ட் என்ற விக்டரை போலீஸ் மடக்கினர். 'கொகெய்ன்' என்னும் காஸ்ட்லி போதை மருந்து அவனிடம் இருந்ததைப் பார்த்து, அதிர்ந்தனர். 'எங்கே கொண்டு போற?' எனக் கேட்க, 'ஒரு கஸ்டமருக்குக்குதான்' எனச் சொல்லி இருக்கிறான். அப்போது அவன் செல்போனில் இடைவிடாத அழைப்புகள் வர, அதில் வந்த பெயரைப் பார்த்த போலீஸாருக்கு பலத்த ஷாக். காரணம், டோலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் கதாநாயகன் ரவி தேஜாவின் தம்பி ரகு பாபுதான் லைனில் வந்தது!
போலீஸார் இதை, தங்கள் அதிகாரி டி.சி-யான ஸ்டீஃபன் ரவீந்திராவின் காதில் போட.... அவர் போட்டுக்கொடுத்த பிளான்படி செயல்பட்டனர். நைஜீரிய ஆசாமியிடம் செல்போனைக் கொடுத்து, 'எங்கே வரணும்?' எனக் கேட்கச் சொன்னார்கள். ரகுபாபு, பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் கிரீன் மாஸ்க் பள்ளிவாசல் பகுதிக்கு அழைத்தார். விக்டரை அந்த இடத்துக்கு அனுப்பிய போலீஸார், மறைந்தவாறு நடப்பதைக் கூர்ந்து கவனித்தனர். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புத்தம்புது கறுப்பு ஃபோர்டு கார் வந்து நின்றது. அதில் இருந்து ரவி தேஜாவின் தம்பிகள் ரகு பாபுவும் பரத் ராஜும் இறங்கினர். அவர்கள் விக்டரிடம் போதை மருந்து வாங்கும்போது, பாய்ந்து சென்று பிடித்தனர் போலீஸார்.
பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் எம்.எல்.ஏ. காலனியில்தான் இருவருக்கும் வீடு. தங்களுக்கு உள்ள சினிமா தொடர்புகளைவைத்து, கொகெய்ன் வியாபாரத்தில் கோடிகளில் புரண்டார்கள் இந்த தம்பிகள் என்று சொல்கிறது போலீஸ். இவர்கள் இப்போது கம்பிகளுக்குள்!
இதனிடையே, விக்டர் தங்கிய அறையை சோதனை யிட்டதில், லேப்-டாப்பில் முக்கிய வாடிக்கையாளர்கள் குறித்த ஆதாரங்கள் பிடிபட்டதாம். தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மற்றும் பெரிய இடத்து இளம்பெண்கள் ஆகியோர் விக்டருடன் நெருங்கிய தொடர் பில் இருந்துள்ளனர். அதோடு, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்குப் போய் பட்டையைக் கிளப்பிய இரண்டு தமிழ் நடிகைகளின் பெயர்களும் அதில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில், தங்கள் பெயர் வெளிவர ஆரம்பித்தால் எப்படி சமாளிப்பது என அந்தத் தமிழ்நடிகைகள் இருவரும் டிஸ்கஷனில் இறங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது!
என்ன சொல்கிறார் த்ரிஷா?
நடிகை த்ரிஷாவின் செல்போன் நம்பரும் நைஜீரிய வாலிபரிடம் இருந்ததாக ஆந்திர சேனல்கள் புயலை கிளப்ப, ''அந்த நைஜீரிய வாலிபருக்கு என் நம்பர் எப்படி கிடைத்தது என்றே தெரியாது. போதைப் பொருள் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதே போல எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கமும் கிடையாது. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள்தான் இந்த புரளியை வேண்டுமென்றே கிளப்பிவிட்டுள்ளனர். ''என்று பொங்கியுள்ளார் த்ரிஷா.
கொகெய்ன் வியாபாரி விக்டரும், ரவி தேஜாவின் சகோதரர்களும் போதைப் புழக்க ரீதியில் யார் யாருடன் தொடர்பில் இருந்தனர் என மொத்த ஆதாரங்களையும் கையில் வைத்துள்ள ஹைதராபாத் போலீஸார், ''இதில் தொடர்புடைய அனைவரையும் கண்காணிக்க முடிவு செய்துவிட்டோம். பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தாலும், இப்போது 65 பேர் பட்டியல் கிடைத்துள்ளது. எல்லோரையும் மடக்குவோம். உகாண்டா, தான்சானியா நாட்டில் இருந்து வந்துள்ள நபர்கள்தான் அதை சப்ளை செய்கின்றனர். விரைவில், மொத்த நெட்வொர்க்கும் மாட்டும்!'' என்றனர்.
இந்த விவகாரத்தின் பின்னணி அறிந்த சிலரிடம் மேலும் விசாரித்தோம். ''பஞ்சரா ஹில்ஸ் பகுதி... ஆந்திராவின் சொர்க்கம். அந்த அளவு ரம்மியமான, பணக்காரப் பகுதி. பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட வி.வி.ஐ.பி. ஏரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதைப் பொருட்களின் புழக்கம் தெரிந்தது. ஸ்டார் ஹோட்டல்களிலும், பப்புகளிலும் இளசுகளைக் குறிவைத்து போதை மாஃபியாக்கள் குவியத் தொடங்க... பெரும்பாலான வி.ஐ.பி-க்களின் வாரிசுகள் தன்னிலை மறந்து, தடம் மாறத் தொடங்கினர். இந்த விவகாரம் போலீஸுக்குத் தெரிந்தும், 'பெரிய இடத்து சமாசாரம்... நமக்கு ஏன் வம்பு?' என வெறுமனே வேடிக்கை பார்த்தனர்.
இந்தச் சூழலில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஒருவர், ஒரு சி.டி-யுடன் போலீஸ் உயர் அதிகாரியைச் சந்தித்துக் கதறினார். அந்த எம்.பி-யின் வாரிசு, ஒரு மாதமாக வீட்டுக்கே போகாமல் ஹோட்டலே கதி என்று இருந்தார். அவரது கை முழுவதும் ஊசிகள் குத்தப்பட்ட தழும்புகள்... கீறல்கள். பெரும் போராட்டத்துக்குப் பின், கெஞ்சிக் கூத்தாடி வாரிசை வீட்டுக்கு மீட்டு வந்த அந்த எம்.பி., பல கட்ட சிகிச்சை அளித்து தனது மகனை போதையில் இருந்து மீட்டு இருக்கிறார். தன் வாரிசுக்கு ஏற்பட்ட நிலையை வீடியோ எடுத்தவர், அதைத்தான் அப்படியே காவல் உயர் அதிகாரிகளிடம் காண்பித்துக் கதறி இருக்கிறார். அதன் பிறகு, எங்கே இருந்து என்ன உத்தரவு வந்ததோ, தெரியவில்லை... இரண்டு மாதங்களாகக் காவல் துறையின் செயல்பாட்டில் செம சுறுசுறுப்பு. அதைத் தொடர்ந்துதான் இந்தத் தம்பிகளின் கைது!'' என்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தெலுங்கு ஹீரோ ரவி தேஜாதான் ரொம்பவே நொந்துகிடக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்து, பல கஷ்டங்களைக் கடந்து, படிப்படியாக தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபல நடிகராகத் தனி இடம் பிடித்தவர் இவர். சில மாதங்களுக்கு முன்புகூட, தம்பி பரத் ராஜ் போதையில் கார் ஓட்டிப்போய் ஒரு விபத்தை ஏற்படுத்த... பெரும் பாடுபட்டு அந்த விவகாரத்தைச் சமாளித்தாரம் ரவி தேஜா. இப்போது தன் தம்பிகள் போதை விவகாரத்தில் சிக்கியதும், ''சட்டப்படி எல்லாம் நடக்கட்டும்!'' என்று விரக்தியாக சொல்கிறாராம்.
இந்த கைது சம்பவத்தின் கதாநாயகன்... தற்போது ஹைதராபாத் மேற்கு மண்டல டி.சி-யாக இருக்கும் ஸ்டீஃபன் ரவீந்திரா. நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பிரபலமான அதிகாரி. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டும்கூட!
நாம் ஸ்டீஃபன் ரவீந்திராவிடம் பேசினோம். ''பொதுவாக பெரிய இடத்து ஆட்கள் மாட்டினால் போலீஸ் விட்டுவிடும் என்று மக்களிடம் ஓர் எண்ணம் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில், தப்பு செய் பவர்கள் யாராக இருந்தால் என்ன? தப்பு... தப்புதான்! அதற்கான தண்டனையை அவர்கள் யாராக இருந்தாலும் அனுபவிப்பதுதான் நியாயம். இந்த விஷயத்தில் சிலர் என்னைப் பாராட்டுகிறார்கள். அது தேவை இல்லை. என் கடமையைத்தான் செய்தேன். அதற்காகத்தான் அரசாங்கம் எனக்கு சம்பளம் கொடுக்கிறது!'' என்று சிம்பிளாகச் சொல்லிச் சிரித்தார்.

No comments:

Post a Comment