கிட்டத்தட்ட இரண்டு முழு வருடங்கள் 'எந்திரன்' பணியில் முழுக்க டெடிகேட்  செய்த பிறகு, தனக்கான மன திருப்தி சுற்றுப் பயணங்களைத் துவங்கிவிட்டார்  ரஜினி. 'எந்திரன்' படப்பிடிப்பு சமயம், ரஜினி வெளியில் எங்குமே  செல்லவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மாதம் ஒரு தடவை பெங்களூரு நண்பர்களைச்  சந்தித்துவிடும் ரஜினி, அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கவில்லை.  படப்பிடிப்பு சமயம் முழுக்க, அவர் தங்கியிருந்தது அவருடைய கேளம்பாக் கம்  பண்ணை வீட்டில்தான். அப்போது 10 வருடங் களுக்கும் மேலாக அங்கே பணிபுரிந்து  வந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பண்ணைக்குள்ளேயே ஒரு ஏக்கரில்  வீட்டு மனைகள் அமைத்தார். 
செப்டம்பர்-3 ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமணம்!
செப்டம்பர்-10 'எந்திரன்' ரிலீஸ்! இரண்டையும்  முடித்துவிட்டு, செப்டம்பர் 23-ம் தேதி ரஜினி செல்ல இருப்பது இமய  மலைக்குத்தான். ஆனால், பாபாஜியின் குகைக்கு அல்ல! மாறாக, மானசரோவர்  கைலாஷுக்கு. இதற்கான பயண ஏற்பாடுகளைக் கடந்த சில நாட்களில்  முடித்துவிட்டார். பாபாஜியின் குகைக்குப் போக தனி நண்பர்கள் வட்டத்தை  வைத்திருக்கும் ரஜினி, கைலாஷுக்குப் போக, புது நண்பர்களைத் தயார்  செய்துவிட்டார். இவர்களில், பிரபல தொழில் அதிபர்களும் அடக்கம். இவர்களும்  ரஜினியைப் போலவே அமைதி விரும்பிகள், எளிமை விரும்பிகள்! 

வழக்கமாக  ஒவ்வொரு புதுப் பட வேலை துவங்கும் முன்னர் மந்திராலயத்துக்குச் சென்று  ராகவேந்திரரை நினைத்து மூன்று நாட்கள் தியானம் செய்வார் ரஜினி. ஆனால், ஏனோ  'எந்திரன்' பட வேலைகள் துவங்கியபோது, மந்திராலயம் செல்லவில்லை. ஆனால்,  'எந்திரன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது!' என்று அதிகாரபூர்வமாக ஷங்கர்  அறிவித்த அன்று மாலையே மந்திராலயம் கிளம்பிவிட்டார் ரஜினி. வழக்கம்போல  மூன்று நாட்கள் அங்கே தியானம். பிறகு, ஒரு டாக்ஸி பிடித்து பெங்களூரு  சென்றவர், அங்குள்ள தனது ரேஸ்கோர்ஸ் சாலை ஃப்ளாட்டில் தங்கவில்லை.  பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ள மிகச் சாதாரண லாட்ஜில் இரவு 11 மணிக்கு  அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் பெங்களூரு வந்திருக்கும் தகவலை  கலாசிபாளையம் பஸ் டெப்போவில் இருந்த மெக்கானிக் ஒருவரிடம் மட்டும்  தெரிவித்து, வரச் சொல்லி இருக்கிறார். ரஜினி கண்டக்டராக இருந்த சமயம்  பழக்கமாகி, நெருக்கமான நண்பரானவர் இவர். 
இரவு முழுக்க அவருடன் பால்ய கால நினைவுகளைப் பேசி  மகிழ்ந்தவர், கொஞ்சமே கொஞ்சம் கண் அசந்துவிட்டு, அதிகாலையில் விறுவிறு  சுறுசுறுவெனப் புறப்பட்டார். கலாசிபாளையத்தில் இருக்கும் ஓர் உணவகத்தின்  பின்புறம் காரை நிறுத்தச் சொன்ன ரஜினி, பின் வாசல் வழியே முதலாளி  கோபிநாத்தின் அறைக்குச் சென்றிருக்கிறார். ரஜினியைக் கொஞ்சமும்  எதிர்பார்த்திராத கோபிநாத்துக்கு ஆச்சர்யம்! கலாசிபாளையம் பஸ் டெப்போவில்  ரஜினி பணிபுரிந்த சமயத்தில், அவர் டாப் அடிப்பது பெரும்பாலும் அந்த  உணவகத்தில் தான். ரஜினியை சென்னைக்குச் செல்லத் தூண்டியவர் களுள்  கோபிநாத்தும் ஒருவர். சூடான மசால் தோசை பரிமாறினார்கள் ரஜினிக்கு. தோசையை  ருசித்தவாறே கோபிநாத்திடம் மனம் திறந்து பல விஷயங்கள் பேசி இருக்கிறார்  ரஜினி. எப்படியோ ரஜினியின் வருகை வெளியில் கசிந்துவிட, திமுதிமுவெனக்  குழுமிவிட்டார்கள் ஊழியர்கள். வழக்கமாகக் கூட்டம் கண்டால் பதற்றப் படும்  ரஜினி, அன்று இயல்பாக அவர்களை எதிர் கொண்டார். அப்போது ஓர் ஊழியர், ஆர்வ  மிகுதியில் கோபிநாத் - ரஜினி உரையாடலை வீடியோ பதிவாக் கினார். உடனே  ரஜினியிடம் தயக்கம் எட்டிப்பார்த்தது. 'அட! நீங்களே எப்பவோ  வர்றீங்க. மத்த நாள்லாம் நாங்க இதைப் போட்டுப் பார்த்துக்கிறோம். இது  'எந்திரன்' எங்களுக்காக நடிக்கிற எக்ஸ்க்ளூசிவ் படமா இருக்கட்டும்' என்று  சுற்றி இருப்பவர்கள் சமாதானப் படுத்தவும், சிரித்துக்கொண்டே  சம்மதித்திருக்கிறார். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு அந்த உரையாடலை  வீடியோவாக்கினார்கள். 
'எந்திரன்' படம் வெளியானவுடன் கோபிநாத் அதை  எடிட்டிங், மிக்ஸிங் செய்து வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம். சினிமா  மற்றும் அரசியல் பிரபலங்களுடனான அனுபவங்கள் சிலவற்றையும் அந்தச்  சந்திப்பின்போது ரஜினி பகிர்ந்துகொண்டாராம். அதுவும் பதிவு செய்யப்பட்டு  இருந்தால், அந்த ரகசிய வீடியோவும் பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள்  ரஜினியின் பெங்களூரு நண்பர்கள்!
 
No comments:
Post a Comment