எதிர்காலத்தில் அவுட்சோர்சிங் பணிகள் இந்தியா,  சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அமெரிக்க அதிபர்  பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். 
காலியாக  உள்ள அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற  உள்ளது. இந்நிலையில், நிதிநெருக்கடியிலிருந்து மீள அவுட்சோர்சிங் பணிகளை  குறைத்து உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பது உட்பட தனது இரண்டு  ஆண்டுகால சாதனைகள் பற்றி அதிபர் ஒபாமா பொதுக்கூட்டங்களில் அடிக்கடி பேசி  வருகிறார். டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற ஒரு  பொதுக்கூட்டத்தில் ஒபாமா பேசியதாவது: 
சர்வதேச  நிதி நெருக்கடி ஏற்பட்ட கடும் சோதனையான நேரத்தில் நான் அதிபராக  பொறுப்பேற்றேன். அப்போது லட்சக் கணக்கானோர் வேலை இழந்து தவித்தனர். இதற்கு  தீர்வு காணும் வகையில், புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டது. இது,  பேராசை படாமல் கடுமையாக உழைப்ப வர்களுக்கும், பொறுப்புடன்  செயல்படுபவர்களுக்கும் சலுகைகள் வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. 
அதாவது,  உள்நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு சில  சலுகைகள் வழங்கப்பட்டன. மாறாக வெளிநாடுகளில் அவுட்சோர்சிங் செய்யும்  நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் வேலை இழந்த லட்சக்  கணக்கான நடுத்தர மக்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 
இனி  வரும் காலங்களில் இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து  அவுட்சோர்சிங் செய்வதை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
நிறுவனங்களுக்கு  குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் வழங்குவதால் வேலைவாய்ப்பு  அதிகரிக்காது. எனவே, கல்வி, தொழில்நுட்ப துறைகளில் அதிக முதலீடு  செய்யப்படும். இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் பழைய நிலையை  அடையும் என்றார் ஒபாமா.  


No comments:
Post a Comment