Saturday, November 26, 2011

11 நிமிடங்களில் 7 கிலோ மீட்டர்!


மிரட்டும் மெட்ரோ

ஃபே
ஷன் டவுன், கார்டன் சிட்டி, சிலிக்கன் வேலி எனப் பல முகங்கள்கொண்ட பெங்களூரின் புது முகம்... மெட்ரோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் பெங்களூரில் அது பயன்பாட்டுக்கே வந்துவிட்டது. எப்படி இருக்கிறது மெட்ரோ ரயில்... ஒரு ரவுண்ட் போலாமா?  
 ஓடத் தொடங்கிய முதல் வாரத்திலேயே 'மிடில் கிளாஸ் மக்களின் ஃப்ளைட்’ என்று பெயர் பெற்றுவிட்டது மெட்ரோ!
பெங்களூரு எம்.ஜி. ரோடு மெட்ரோ ரயில் நிலையம் பளிங்குகளாலும் கண்ணாடிக் கூரைகளாலும் ஜொலிஜொலிக்கிறது. மொத்தம் ஆறு நிறுத்தங்கள்கொண்ட எம்.ஜி. ரோடு - பையப்பனஹள்ளி வழித்தடம் 6.7 கி.மீ. நீளம்கொண்டது. போக்குவரத்து நெரிசல் நிறைந்திருக்கும் பீக் ஹவர்ஸில் இந்தத் தூரத்தைப் பேருந்தில் கடக்கக் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். மெட்ரோ ரயில் 11 நிமிடங்களில் ஒரு ட்ரிப்பை முடித்துவிடுகிறது.
இதற்கு மட்டுமே  5,000 கோடி செலவு பிடித்திருக்கிறதாம். இவ்வழித் தடம் இருக்கும் இடம் முழுக்கத் தமிழர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இது தமிழர்களுக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில், அதையே காரணம் காட்டி வீட்டு வாடகையில் தொடங்கி தண்ணீர் பாட்டில் வரை ரேட் எகிறிவிட்டது.
மெட்ரோ ரயில் கட்டணம் குறைந்த பட்சம்  10. அதிகபட்சம்  15. குறைந்த பட்சக் கட்டணமாக 5 கொடுத்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகமான பி.எம்.டி.சி. பேருந்தின் வெக்கையிலும் டிராஃபிக் நெரிசலிலும் பயணிக்கச் சங்கடப்பட்டுக்கொண்டு மெட்ரோவுக்கு மாறிவிட்டனர் பெரும்பாலான பயணிகள்.
மெட்ரோ ரயிலில் ஏறுமுன் ஒவ்வொரு வரும் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பிளாஸ்டிக் வில்லைதான் டிக்கெட். பயணம் முடிந்து வெளியேறும் இடத்தில் அந்த டோக்கனைச் செலுத்தினால்தான் கதவு திறக்கிறது. நடைமேடையில் காத்திருந்தால் வருவதே தெரியாமல் சல்லென்று வந்து நிற்கிறது மெட்ரோ ரயில். ஒரே கணத்தில் அத்தனை கதவுகளும் திறக்கின்றன. ஒரு சில நொடிகள்தான்... மீண்டும் கதவுகள் பூட்டிக்கொள்கின்றன. கொஞ்சம் அசமந்தமாக இருந்தால், என் கண் முன் காதலனை நடைமேடையில் பிரிந்து தவித்த காதலியின் வேதனைதான்!
மொத்தம் உள்ள மூன்று பெட்டிகளில் ஆயிரம் பேர் தாராளமாக உட்காரலாம்.  முழுக்கவே ஏ.சி. வசதி. ரயிலுக்குள் செல்போன் கேமராவையோ, டிஜிட்டல் கேமராவையோ எடுத்து க்ளிக் செய்தால் உடனே ஸ்பீக்கரில் ஒலிக்கிறது டிரைவரின் குரல்...  'இரண்டாது பெட்டியில் பச்சை சட்டை சார், கேமராவை உள்ளே வையுங்கள்!’
இரண்டு நிறுத்தங்களுக்கு இடையேயான பயணம் இரண்டு நிமிடங்கள்தான். ஒரு நிறுத்தத்தில் சரியாக 90 விநாடிகள் நிற்கிறது. '12.02 மணிக்கு பையப்பனஹள்ளி’ என்றால், துல்லியமாக அந்த நேரத்தில் அங்கு சென்று நிற்கிறது.
''மெட்ரோ ரயிலுக்குப் பயணிகளிடம் அபார வரவேற்பு. மொத்தமுள்ள 73 கி.மீ-க்கான வேலைகள் 2014 வாக்கில் முடிவ டையும். ரயிலைத் தாங்கும் தூண்கள் தென் கொரியாவின் கட்டட வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டன. இது நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களைக் கடந்தும் 100 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.
நியூயார்க்கின் சப்-வே, துபாயின் மெட்ரோ, லண்டனின் டியூப் ஆகிய ரயில்களின் நிறை குறைகளை ஆராய்ந்து, அதன் பலவீனங்களைக் களைந்து இதை வடிவமைத்து இருக்கிறோம்!'' எனப் பூரிக்கிறார் மெட்ரோவின் தலைவர் சிவசைலம். இவர் ஒரு தமிழர்!
மெட்ரோவை பெங்களூர்வாசிகள் போக்குவரத்து நெரிசல் தொல்லையில் இருந்து மீட்க வந்த மீட்பராகவே பார்க்கிறார்கள்.
அதற்கு ஆதாரமாக, மெட்ரோ ரயில் தடதடக்கத் தொடங்கி 10-வது நாளிலேயே 'ஒரே வாரத்தில் பி.எம்.டி.சி-க்கு  15 லட்சம் நஷ்டம்’ என வெளிவந்திருக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அறிக்கை.
மெட்ரோ பெங்களூரில் ஹிட்! சென்னையில் எப்போது தடதடக்கத் தொடங்கும்?

No comments:

Post a Comment