Monday, November 28, 2011

சூர்யாவின் மனதை திருடிய மான்ஸ்டர்!


மிழ் சினிமாவின் மிஸ்டர் பர்ஃபெக்ட், சூர்யா. 'நேருக்கு நேர்’ படத்தில் அப்பாவி இளைஞனாக அறிமுகமான சூர்யா, இன்று உலக நாயகனின் வாரிசாக உயர்ந்து நிற்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக சூர்யா நடித்து வெளிவந்த அத்தனை படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!
 'ஏழாம் அறிவு’ மட்டும் அல்ல... ஆட்டோமொபைல் அறிவும் சூர்யாவுக்கு அதிகம். கார், பைக் வெறியன். மார்க்கெட்டுக்கு எந்த கார், பைக் புதிதாக வந்தாலும், அதனைப் பற்றிய 'அப்-டு-டேட்’ விவரங்கள் அத்தனையும் சூர்யாவின் மெமரிக்குள் ஸ்டோர் ஆகிவிடும். இப்போது லேட்டஸ்ட்டாக டுகாட்டி மான்ஸ்டர் பைக்கை வாங்கியிருக்கிறார் சூர்யா. 'ஏழாம் அறிவு’ ரிலீஸ் பரபரப்புக்கு இடையிலும், தனது புதிய டுகாட்டி பைக் பற்றிக் கேட்ட உடனே பைக் காதலனாக மாறிவிட்டார் சூர்யா.
''நீங்கள் ஓட்டக் கற்றுக் கொண்ட பைக் எது?''
''எனக்கு பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்தவர் என்னுடைய மாமா. எங்களுடைய கோயம்புத்தூர் கிராமத்தில், அவரது யெஸ்டி பைக்கில்தான் பைக் ஓட்டப் பழகினேன். எனக்கு மிகவும் பிடித்த பைக் அது. அந்த பைக்கின் சத்தத்துக்கு நான் ரசிகன்!''
''உங்களுடைய முதல் பைக்?''
''கல்லூரி நாட்களில் யமஹா ஆர்.எக்ஸ்-100 பைக்கில் சென்னையைச் சுற்றி வந்தேன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மார்க் எடுத்ததற்காக, என்னுடைய தம்பி கார்த்திக்குக் கிடைத்த கிஃப்ட் அது. நான் சம்பாதித்து வாங்கிய முதல் பைக் டிவிஎஸ் ஸ்டார். அடுத்து, டிவிஎஸ் அப்பாச்சி பைக் வாங்கினேன். இந்த இரண்டையும் என்னிடம் பணிபுரியும் நண்பர்களுக்கு அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்காகக் கொடுத்திருக்கிறேன்.''
''டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கை வாங்கியதும் முதல் ரவுண்டு எங்கே போனீர்கள்?''
''நான், ஜோ, தியா, தேவ் ஆகிய நாலு பேரும், இப்போது பெசன்ட் நகரில் எங்களுடைய புதிய வீட்டில் இருக்கிறோம். பீச் ரொம்ப பக்கம் என்பதால், வீட்டுக்கு பைக் வந்தவுடன் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில்தான் முதல் ரவுண்ட்!''
''எதற்காக டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கைத் தேர்ந்தெடுத்தீர்கள்?''
''எனக்கு எப்போதுமே ரேஸ் டிராக்கில் ஓட்டுவதுபோல ரொம்பவும் குனிந்துகொண்டு பைக் ஓட்டுவது பிடிக்காது. மகள் மற்றும் மனைவியோடு அடிக்கடி பைக்கில் ஒரு ரவுண்டு அடிக்கணும். அதேசமயம், பைக் ரொம்பவும் வெயிட்டாகவும் இருக்கக் கூடாது; என் உயரத்துக்கு ஏற்ற சரியான பைக்காகவும் இருக்கணும். டீலரும் இந்தியாவில் இருக்கணும்னு என்னுடைய தேவைகள் அனைத்துக்கும் டுகாட்டி மான்ஸ்ட்டர்தான் சரியான சாய்ஸாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.''
''இந்த பைக்கில் உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களும் இருக்கும்தானே?''
''ஜோ கிட்ட கேட்டீங்கன்னா... அவங்க ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுப்பாங்க! முதல் விஷயம், பில்லியனில் உட்கார்ந்து பயணிப்பது வசதியாக இல்லை. இதில் ஏர் கூலன்ட் மட்டுமே இருப்பதால், இன்ஜின் சூடு சீட்டுக்கு சீக்கிரத்தில் வந்து விடுகிறது. அதனால், நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியவில்லை. அதோடு நம்மூரின் குண்டும், குழியுமான சாலைகளைத் தாங்கும் அளவுக்கு சஸ்பென்ஷன் சிறப்பாக இல்லை!''
''உங்களோட டாப் ஸ்பீடு எவ்வளவு? உங்களுக்கு பைக் ஓட்டப் பிடித்த சாலை எது?''
''கிழக்குக் கடற்கரைச் சாலைதான் என்னுடைய ஃபேவரிட். பைக் ரைடை என்ஜாய் பண்ணுவேனே தவிர, ஸ்பீடாக ஓட்ட மாட்டேன்!''
''உண்மையைச் சொல்லுங்க. பைக்கோடு போகும்போது பெண்கள் உங்களைப் பார்க்கிறார்களா... அல்லது பைக்கையா?''
''ஹா... ஹா... மான்ஸ்ட்டர்னு பெயருக்கு ஏற்ற மாதிரி பைக் மிரட்டலா இருக்கும்போது, பைக்கைத்தானே எல்லோரும் பார்ப்பாங்க. முதல் பார்வையிலேயே மயக்கிவிடும் முரடன் இந்த பைக். நம்ம பாஷையில் சொல்லப் போனா... செம்ம கட்ட! ஆனா, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் எப்போதும் என் தலையில் இருக்கும். அதனால, பைக்கை யார் ஓட்டுறாங்கன்னு வெளியே தெரியாது. ஸோ.. இந்தக் கேள்விக்கு பதில் தெரியாது!''
''உலகின் கடைசி லிட்டர் பெட்ரோல் உங்களிடம் இருக்கிறது. என்ன செய்வீர்கள்?''
''என் மகன் பெரியவனாக வளர்ந்து, பைக் ஓட்டும் வரை, அந்த கடைசி லிட்டர் பெட்ரோலை அப்படியே சேமித்து வைத்திருப்பேன்!''
''உங்களுடைய அடுத்த பைக்?''
''தேடல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதைவிட இன்னும் வசதியான, சொகுசான, ஸ்டைலான நிச்சயம் லிக்விட் கூலன்ட் இன்ஜின் கொண்ட பைக்கைத்தான் வாங்குவேன்'' என்று சொல்லிவிட்டு மான்ஸ்ட்டரை ஸ்டார்ட் செய்தார் சூர்யா.
பெசன்ட் நகரில் இப்போது இரண்டு அழகன்கள்!

No comments:

Post a Comment