Saturday, November 26, 2011

சில்க்... சில்க்... சில்க்!


சில்க் ஸ்மிதா... இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
 எந்தத் தலைமுறை தமிழ் இளைஞனின் கனவிலும் இடம் பிடிக்கும் கனவுக் கன்னி. சொல்லப்போனால், 'கனவுக் கன்னி’ என்ற வார்த்தையை முழுமையாக்கிய தமிழகத்தின் மர்லின் மன்றோ. சில்கின் வாழ்க்கையை மையமாகவைத்து உருவாகிறது 'தி டர்ட்டி பிக்சர்’ இந்திப் படம். இதில் சில்க்காக நடிக்கிறார் வித்யா பாலன். படத்தின் பப்ளிசிட்டிக்காக சில்க் யார்... என்ன செய்தார்... ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்றெல்லாம் 'கவர்ச்சி நடிகை சில்க்’ என்றரீதியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றன இந்தி மீடியாக்கள்.
நடிப்புலக ஜாம்பவான் அவர். ஷூட்டிங்குக்கு வந்த அவர் முன் சில்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். 'இது நியாயமா?’ என ஷூட்டிங் ஸ்பாட்டில் கேள்வி எழ, ''நான் அவரை மனதால் மதிக்கிறேன்; காலால் அல்ல!'' என்றார் சில்க். இந்தக் கம்பீரம் ஒரு பக்கம் என்றால், லிபர்ட்டி மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு, சாதாரண பெண்மணியாகக் காய்கறி வாங்கும் எளிமைக்கும் அவரிடத்தில் குறைவு இல்லை!
இப்படி சில்க்கின் சினிமா முகம் தாண்டியும் அவரை அறிந்தவர்கள் சில்க்கின் இன்னொரு முகம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...
''கவர்ச்சி என்கிற ஒற்றை அடையாளமே சில்க் ஸ்மிதாவை முழுமைப்படுத்திவிடாது!'' என்று ஒரு வரி பஞ்ச்சோடு ஆரம்பித்துத் தொடர்ந்தார் வேலு பிரபாகரன்.  
''உடையைத் தேர்வுசெய்வதில் தொடங்கி, அதனை உடுத்தும் விதம், நடக்கும் விதம், உடைக்கும் உடலுக்கும் ஏற்ற நகைகளைத் தேர்ந்தெடுக்கும் கலைத்தன்மை எனக் கைதேர்ந்த ரசனைக்காரர் சில்க். உதவி என யார் போய் நின்றாலும் கையில் இருப்பதை அப்படியே கொடுத்துவிட்டு நன்றி என்ற வார்த்தையைக்கூட எதிர்பார்க்காமல் கடந்துபோய்விடுவார். தான் சினிமாவுக்கு முயற்சி செய்த காலத்தில் தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்திய ஒரு தாடிக்காரருக்குத் தன் வாழ்க்கையையே கொடுத்து நன்றிக் கடனை நிவர்த்தி செய்தவர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு அலாதி ஆசை. அதற்காகவே ஒரு ஆங்கிலோ இந்தியனை ஏற்பாடு செய்திருந்தார். ஸ்டைலாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு நன்றாகக் கற்றுக்கொண்டார். எதன் மேல் ஆசைப்பட்டாலும் அதை அடைய உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்படு வது சில்க்கின் வழக்கம்.
ஒரு தடவை என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு கடைக்கு அருகில் நான்கு மணிக்கு நிற்கும்படி சொன்னேன். மிகச் சரியாக நான்கு மணிக்கு அங்கு வந்துவிட்டார் சில்க். ஆனால், நான் ஒரு வேலையில் மாட்டிக்கொண்டேன். அந்தக் கடைக்கு அருகே உள்ள எனது நண்பருக்கு போன் செய்து, 'நான் வரத் தாமதம் ஆகும். அதுவரை சில்க்கை உங்கள் வீட்டில் தங்க வையுங்கள். இல்லையேல் கூட்டம் மிகுதியாகிவிடும்!’ என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், அவர் போய் அழைத்தபோது, சில்க் வர மறுத்துவிட்டார். நான் ஐந்தரை மணிக்கு அந்த இடத்துக்குச் சென்றபோது, அங்கே மக்கள் வெள்ளம். கூட்டத்தைக் கண்டுகொள்ளா மல் காரை நிறுத்திவிட்டு, அதில் சாய்ந்தபடி சில்க் நின்று கொண்டு இருந்தார். 'நண்பரின் வீட்டில் தங்கி இருக்கலாமே’ என்று குற்றவுணர்வுடன் நான் கேட்டேன். 'நான் இங்கே நிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு நீங்க தெரிஞ்சுக் கணும். நான் அனுபவிக்கிற கஷ்டம்தான் உங்க தாமதத்துக்கான தண்டனை. நான் உங்க நண்பர் வீட்டுக்குப் போய் ஹாயா தங்கி இருந்தா, தாமதமா வந்துட்டோமே என்கிற எண்ணம்கூட உங்களுக்கு வந்திருக்காதே’னு சிரிச்சுட்டே சொன்னார் சில்க். இந்த அளவுக்குப் பக்குவமா தன்னோட பிரியத்தையும் கோபத்தையும் அவர் பதிவு பண்ணிய விதம் ராதாகிருஷ்ணன் சாலையை கிராஸ் செய்யும்போதெல்லாம் எனக்குள் நிழலாடும்!'' - சிலிர்ப்பு அடங் காமல் சொல்கிற இயக்குநர் வேலு பிரபாகரன் மேலும் தொடர்கிறார்...
''பாண்டிச்சேரியில் 'பிக்பாக்கெட்’ பட ஷூட்டிங்... ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க நிற்கிறாங்க. காரைவிட்டு இறங்கினால், சில்க்கைக் காப்பாத்துறது கஷ்டம். நிலைமையை அவரிடம் சொன்னேன். அதைக் கண்டுக்கவே கண்டுக்காம சட்டுனு காரைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டார். இன்றைய நடிகைகள் யாருக்குமே அப்படி ஒரு தைரியம் வராது. பிரசித்தியைப் பணம் ஆக்கத் தெரியாதவர் அவர்.
நாய்களோடு விளையாடும்போதுதான் அவருடைய நிஜமான மகிழ்ச்சி தெரியும். அந்த அளவுக்கு மனமொன்றி விளையாடு வார். இப்பவும் அவர் இறந்துட்டார்னு என்னால நம்பவே முடியலை!'' - தொடர்ந்து பேச முடியாமல் தொண்டை அடைக்கிறது வேலு பிரபாகரனுக்கு.
''அவங்களை இந்த சினிமா உலகம் வெறும் கவர்ச்சி நடிகையா மட்டுமே பார்த்திடுச்சு. அவங்களோட ரசனையைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நான் அவரைப் படம் எடுக்கிறப்பலாம் ரொம்ப ஆர்வமா ஒவ்வொரு ஆங்கிளின் ப்ளஸ் மைனஸ் கேட்டுத் தெரிஞ்சுப்பார். தன் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் தெரிஞ்சுக் கணும்னு ஆர்வமா இருப்பார். புதுசா டிரெஸ் எடுத்தார்னா, உடனே எனக்கு போன் பண்ணிக் கூப்பிடுவார். 'எனக்கு இந்த டிரெஸ் மேட்ச்சா இருக்கும்ல’னு குழந்தை மாதிரி கேட்பார். அதை அணிந்து படம் எடுக்கச் சொல்வார். 'எத்தனையோ பேர் எனக்கு ரசிகர்களா இருக்கலாம். ஆனா, நான் உங்க ரசிகை’னு சொல்லி, என்னைக் கௌரவிச்சவர் அவர். போலித்தனமா அவருக்குப் பேசத் தெரியாது. அதனாலேயே திமிர் பிடிச்சவரா அவரை சினிமா உலகம் பார்த்துச்சு. அதைப் பத்தி அவர் கவலைப்படவும் இல்லை. 'இயல்பு மாறாம வாழ்றதுதான் வாழ்க்கை’னு தத்துவமாப் பேசுவார். அப்படியேதான் வாழவும் செஞ்சார். தற்கொலைனு அவர் எடுத்த முடிவு வேணும்னா கோழைத்தனமா இருக்கலாம். ஆனா, ரொம்பக் கம்பீரமா எதை நினைச்சும் கவலைப்படாத மனுஷியாத்தான் அவர் வாழ்ந்தார்!'' - இறுக்கத்தோடு சொல்கிறார் 'ஸ்டில்ஸ்’ ரவி.
''கடைசிக் காலத்துல சில்க் சம்பாதிச்சதெல்லாம் குடும்பத்துக்காக விரயமாகிக்கொண்டு இருந்தது. அதைப் பத்தி சிலர் அக்கறையோடு சொன்னபோது, 'சம்பாதிக்கிறது எதுக்கு? செலவு பண்ணத் தானே!’னு அசால்ட்டா கேட்டாங்க. இள வயதில் அவங்க எதை இழந்தாங்களோ, அதை நோக்கி அவங்க கவனம் திரும்பியதுதான் மரணம் வரை அவங் களைக் கொண்டுவந்து நிறுத்திடுச்சு. ஆனால், ஒரு கவர்ச்சி நடிகையா இருந் தாலும், மனசுல நினைச்ச அன்புக்கு அவங்க எந்த அளவுக்கு நேர்மையா இருந்தாங்க என்பதற்கு பேரு, புகழ் எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க தேடிக்கிட்ட அந்த மரணமே சாட்சி!'' என்கிறார் கடைசிக் காலத்தில் சில்க்கின் நண்பராக இருந்த சினிமாக்காரர் ஒருவர்.
அவரே ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'ராஜாளி’ படத்தில் சில்க் பணியாற்றியபோது நடந்த சம்பவமாகச் சொன்னது இது. சில்க்கின் இரக்க குணத்தைப் பளிச்செனச் சொல்ல இந்த ஒரு சம்பவம் போதும்...  
'' 'ராஜாளி’ ஷூட்டிங் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த நேரம். அப்போ, நண்டு மாதிரியான வித்தியாச உருவம்கொண்ட ஒரு மீனைப் பிடிச்சுக் கயிறு கட்டி இழுத்து சில பசங்க விளையாடி இருக்காங்க. அப்போ, கடற்கரையோரம் நடந்து போயிட்டு இருந்த சில்க் திடீர்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. யூனிட்ல உள்ளவங்களுக்கு ஒண்ணும் புரியலை. என்னவோ... ஏதோனு நினைச்சு எல்லாரும் பதறி ஓட, 'அந்த மீனைக் காப்பாத்துங்க... கயிறு கட்டி இழுக்கிறதால, அதோட உடம்பு முழுக்கக் காயமாகிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போற அந்த மீனை எப்படியாச்சும் காப்பாத்துங்க’னு கதறிட்டு இருந்தார் சில்க். 'இது ஒரு விஷயமா மேடம்?’னு யூனிட்ல இருந்தவங்க சாதாரணமா சொல்ல, சில்க்குக்கு அழுகையோட ஆத்திரமும் வந்திடுச்சு. 'அதுவும் ஒரு உயிர்தானே சார்... உங்க கழுத்துல கயித்தைப் போட்டு இறுக்கினா உங்களால தாங்க முடியுமா? அப்படித்தானே அந்த மீனுக்கும் வலிக்கும்... ப்ளீஸ் சார்... எப்படியாச்சும் அந்த மீனைக் காப்பாத்துங்க’னு மறுபடியும் அழுதாங்க. யூனிட் ஆட்கள் அந்த மீனைக் கடலுக்குள்ள விட்டதுக்கு அப்புறம்தான் அவங்க ரிலாக்ஸ் ஆனாங்க. அப்படி ஒரு மீனுக்காகத் துடிச்சவங்க தன் கழுத்துலயே கயித்தை மாட்டிக்கிட்டதுதான் பெரிய துயரம்!'' என்கிறார் வேதனையோடு.
தனது தற்கொலைக்கு முந்தைய சில மாதங்களில் சில்க்கின் கண் பேசிய வார்த்தைகள் யாருக்கும் புரியாமல் போனதுதான் சோகம்!

No comments:

Post a Comment