Monday, November 28, 2011

வருமான வரியைச் சேமிக்க வகை வகையான வழிகள்!



ஒரு நாடு இயங்குவது தமது மக்களிடமிருந்து பெறும் வரி மூலம் என்றால், அது மிகை இல்லை. அதே நேரத்தில், மக்களிடம் முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தவும், சில அத்தியாவசிய செலவுகளை செய்யவும் வருமான வரிச் சலுகையை அரசு அளித்து வருகிறது. 

இவ்வாறு வரிச் சலுகை அளிப்பது மூலம், அரசு தாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை மக்களையே செய்ய வைக்கிறது.

வருமான வரியைச் சேமிக்க அரசு அளித்துள்ள முதலீடு திட்டங்களில் முக்கியமானவைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

எவ்வாறு எல்லாம் வருமான வரியைச் சேமிக்கலாம்?

வரிச் சலுகைக்கான முதலீட்டில் முக்கிய இடத்தில் 80 சி பிரிவு இருக்கிறது. இதன் ஓராண்டில் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். 

இ.பி.எஃப் - எம்ப்ளாயீ பிராவிடன்ட் ஃபண்ட்

தனியார் நிறுவனங்களில் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் இ.பி.எஃப். ஆக பிடிக்கிறார்கள். சிலர் இதை பிடிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி செய்ய வேண்டாம். நீண்ட காலத்தில் கூட்டு வட்டியுடன் (தற்போது ஆண்டுக்கு 9.5%) வருமானம் கிடைப்பதால் இது மிகச் சிறந்த முதலீடு என்று சொல்லமாம். மேலும், முதலீடு, வட்டி வருமானம், முதிர்வு தொகைக்கு வரி இல்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பி.பி.எஃப் - பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் 

* இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். 

* ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். ஓராண்டில் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 

* 15 ஆண்டு திட்டமான இதற்கு ஆண்டுக்கு 8.6% வட்டி கிடைக்கும். இதிலும் முதலீடு, வட்டி, முதிர்வுக்கு வரிச் சலுகை இருக்கிறது.   

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

* அனைவரும் முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும். 

* ஐந்தாண்டு திட்டமான இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 

* ஆண்டுக்கு  9 முதல் 9.25% வட்டி கிடைக்கும். 

* மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி அளிக்கப்படுகிறது. 

* இதில் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். 

இன்ஷூரன்ஸ் பாலிசிகள்


டேர்ம் பிளான் (காப்பீடு மட்டும் அளிக்கும் திட்டம்), எண்டோவ்மென்ட் (காப்பீடு மற்றும் முதலீடு), யூலிப் (காப்பீடு மற்றும் முதலீடு) பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. 

இழப்பீடு மற்றும் முதிர்வு தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. 

என்.எஸ்.சி - தேசிய சேமிப்பு பத்திரங்கள்

* தபால் அலுவலக முதலீடான இதற்கு வரிச் சலுகை இருக்கிறது. 

* வட்டி ஆண்டுக்கு 8.4% கிடைக்கும். 

* இதன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். 

பென்சன் திட்டங்கள்

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பென்சன் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு சலுகை  உண்டு. மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும் இந்த வரி விலக்கு இருக்கிறது. 

இ.பி.எஃப். திட்டத்தில் சேர முடியாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வு காலத்தில் செலவுக்கு அதிக தொகை தேவை என்று நினைப்பவர்கள் இதனை நாடலாம். 

வரி சேமிப்பு ஃபன்ட் -  இ.எல்.எஸ்.எஸ்

* பங்குச் சந்தை பற்றி பரிச்சயம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம். 

* குறைந்தபட்ச முதலீடு மாதம் 500 ரூபாயாக இருக்கிறது.  

* மூன்றாண்டு திட்டமான இதில் வருமானம் என்பது பங்குச் சந்தை செயல்பாட்டை சார்ந்ததாக இருக்கிறது. 

* டிவிடெண்டு மற்றும் வருமானத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது என்பது இதன் சிறப்பு...!

வீட்டுக் கடன் அசல் 

நாட்டு மக்களுக்கு சொந்த வீடு ஒரு கௌரவம் என்பதால், வீடு கட்ட, வீடு வாங்க பெறப்படும் வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை அளிக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரி விலைக்கு உண்டு.

கல்விக் கட்டணம்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கு (இரு பிள்ளைகளுக்கு மட்டும்) கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது

No comments:

Post a Comment