Monday, November 28, 2011

எங்கே பிரகீத்?


னவரி 24, 2010... மனைவியும் இரண்டு குழந்தைகளும் வழியனுப்பிவைக்க, வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்றார் அவர். இந்தக் கட்டுரை அச்சேறும் 2011-ன் இந்த நவம்பர் தினம் வரை அவர் வீடு திரும்பவில்லை!  
 காணாமல் போனவர் இலங்கையின் பிரபல பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலி கொட. அவரது கேலிச் சித்திரங்கள் இலங்கையில் மிகப் பிரபலம். இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது ரசாயனக் குண்டுகளை வீசிக் கொன்றதை ஆதாரங்களுடன் எழுதியதோடு, வெளிநாடுகளுக்கும் இந்தத் தகவல்களைப் பரப்பினார் பிரகீத். அதோடு, ஜனாதிபதி தேர்தலில் சரத் ஃபொன்சேகாவுக்காக ஒரு ஆவணப்படமும் தயாரித்துக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் போனார்.
பிரகீத் காணாமல்போவது புதிதல்ல. 'வெள்ளை வேன்’ கடத்தல்கள் இலங்கைக் கும் புதிது அல்ல. முன்பொரு முறை 2009 ஆகஸ்ட் மாதத்தில் பிரகீத் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு 'தவறுதலாகக் கடத்தப்பட்டுவிட்டார்’ என்று கூறி விடுவிக் கப்பட்டார். ஆளும் ராஜபக்ஷே அரசின் ஊழல்களையும், போர்க் குற்றங்களையும் தொடர்ந்து எழுதிவந்தார்.  
பிரான்ஸைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஜர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Journalists without borders) என்கிற பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு,    பிரகீத் தின் நிலைமை குறித்து கவலைகொண்டு, தொடர்ந்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து வந்தது. அவரைக் கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் போராட்டங்கள் நடந்தன.
பிரகீத்தின் மனைவி சந்தியா தனது கணவரைத் தேடும் பணியில் சளைக்கவில்லை. ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவதில் தொடங்கி, பல்வேறு அமைப்புகளைத் தொடர்புகொண்டார். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அளித் தார். இலங்கையில் நடந்த ஒரு சர்வதேச இலக்கிய விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் களிடம் தனக்கு உதவுமாறு கோரிய அவரு டைய கடிதம் இப்படித் தொடங்கியது...
'கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்,  நாட்டைவிட்டு வெளியேறத் தூண்டப்பட்ட ஊடகவியலாளர்களின் மனைவி, பிள்ளை கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். தமது இன அடையாளத்தின் பேரால், கொல்லப்பட்டவர்களின் அல்லது காணா மல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் மௌனமான அழு குரல்கள்கொண்ட தேசத்துக்கு உங்களை வரவேற்கிறேன்!’
சந்தியாவின் மௌனமான அழுகுரல் வெளிநாடுகளையும்கூட எட்டியது. ஆனாலும், பிரகீத் குறித்த மர்மம் நீடித்து வந்தது. இந்த நிலையில்தான் அந்த அதிரவைக்கும் செய்தி வந்துசேர்ந்திருக்கிறது.  கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையின் நிழல் உலக தாதா தெமட்டகொட சமிந்த, தானே பிரகீத்தைக் கொன்று, உடலை ஒரு சாக்குப் பையில் வைத்து, கிரானைட் கற்களைக் கட்டி கடலில் வீசியதாகத் தெரிவித்திருக்கிறான்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நெருங்கிய நண்பன் இந்த தெமட்டகொட சமிந்த. கோத்தபய ராஜபக்ஷேவின் உத்தரவின் பேரிலேயே அந்தக் கொலை நடந்தது என்றிருக்கிறான் சமிந்த!
ஆனால், ஜெனிவாவில் நடந்த ஐ.நா -வின் சித்ரவதைகளுக்கு எதிரான மனித உரிமை மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதி மொகான் பிரீஸ், வெளிநாட்டில் பிரகீத்  தஞ்சமடைந்து உள்ளதாகக் கூறியுள் ளார். ''பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுவதும், அவரது விடுதலைக்காக நடைபெற்றுவரும்போராட் டங்களும் பிரசாரங்களும் மோசடியா னவை!'' என்றார் மொகான் பிரீஸ்.
இதனால் பிரகீத் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. சந்தியா இலங்கை அரசுக்கு இப்போது புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்.
''ஒருவேளை பிரகீத் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்து இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளாமல் இருக்க மாட்டார். ஆனால், மொகான் பிரீஸ், என் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். அப்படியெனில், வரும் 2012 ஜனவரி 24-ம் தேதிக்கு முன்னதாக அவரைக் கொண்டுவந்து என் முன் காட்ட வேண்டும். இல்லையேல், அவர் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துப் போக வேண்டும். ஒருவேளை அப்படி சொன்ன தேதிக்குள் அவரைக் கொண்டுவரவில்லை எனில், மொகான் பிரீஸ்,  ஐ.நா. கூட்டத்தில் பொய் சொல்லி இருக்கிறார் என்றே அர்த்தம். இதன் மூலம் பிரகீத்துக்கும், அவர் குடும்பத்துக்கும், ஊடகத் துறையினருக்கும், அவர் மீது அக்கறைகொண்டு அவரைத் தேடி வரும் இலங்கையைச் சேர்ந்த அமைப்புகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சேர்த்து அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்றே அர்த்தம். அவர் இலங்கை அரசின் பிரதிநிதியாகத்தான் ஐ.நா-வின் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆகவே, அவருடைய துரோகம் இலங்கை அரசின் துரோகம்தான். நான் ஜனவரி 24 வரை காத்திருக்கிறேன்!'' என்கிறார் சந்தியா.
'சந்தியாவின் இந்தக் கிடுக்கிப்பிடியில் சிக்கியிருக்கும் இலங்கை அரசு என்ன செய்யப்போகிறது?’ என்று காத்துக்கொண்டு இருக்கிறது உலகம்.
அந்தக் குட்டித் தீவின் நாற்புறமும் நாட்டின் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறது கடல்!

No comments:

Post a Comment