Monday, November 28, 2011

கூகுளின் எந்திரன் - டிரைவர் இல்லாத கார்!


டிரைவர் இல்லாத கார்!
விபத்தே இல்லாமல், விடுப்பு எடுக்காமல், ஏன்... சம்பளமே இல்லாமல் உங்கள் காரை ஓட்ட டிரைவர் கிடைத்தால்...? 
இதோ, கூகுள் இணைய தேடுபொறி நிறுவனம், உங்கள் உதவிக்கு வந்துவிட்டது. இது, டொயோட்டா நிறுவனத்தின் ப்ரையஸ் காரில், பல மாற்றங்கள் செய்து இந்த தானியங்கி காரை உருவாக்கியுள்ளது.
இந்த காரின் நாற்புறமும் கேமராக்களும், ரேடார்களும், சென்ஸார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சாலையின் போக்குவரத்தை இந்த காரால் கவனிக்க முடியும். காரில் உள்ள அதி நவீன கம்ப்யூட்டர், சாலையில் உள்ள வாகனங்களின் திசை, வேகம் போன்றவற்றைக் கணித்து கூகுள் மேப், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போன்றவற்றின் உதவியால் கவனமாக காரை ஓட்டிச் செல்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மழை, வெயில் என எல்லா கால நிலைகளிலும் தெளிவான படங்களை எடுத்து கம்ப்யூட்டருக்கு அனுப்பும். 'லேசர் ரேஞ்ச் ஃபைன்டர்’ எனும் சாதனம் சாலையில் முன்னும் பின்னும் வரும் வாகனங்களின் தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு, கம்ப்யூட்டருக்குக் கட்டளைகள் தர... அது தேவையான இடங்களில் பிரேக்கை உபயோகித்து காரை நிறுத்தச் செய்கிறது. இதை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல் என்று சிலாகிக்கின்றன ஊடகங்கள்.
டிரைவரே இல்லாத இந்த கார், இப்போது அமெரிக்கச் சாலைகளில் சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இதுவரை 1,60,000 கி.மீ தூரம் வரை எந்தவிதச் சிக்கலோ, விபத்தோ இன்றி பயணித்திருக்கும் இந்த கார் பாதுகாப்பானதே என்று சான்றளிக்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுனர்கள். முழுமையடையாத தொழில்நுட்பம், தானியங்கி ஓட்டுனரால் விளையும் சட்டச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் போன்ற சில பிரச்னைகள் இருந்த போதும், இந்தத் தொழில்நுட்பம் சாலைப் போக்குவரத்தில் ஒரு புரட்சியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவின் பளிங்குச் சாலைகளை விபத்தில்லாமல் தாண்டிய கூகுளின் எந்திரனுக்கு, சிங்காரச் சென்னையின் மழைக் காலச் சாலைகளில்தான் காத்திருக்கிறது நிஜமான சவால்!

No comments:

Post a Comment