Monday, November 28, 2011

சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குமா ?

வேர் பறிக்கப்பட்ட செடி போல வாடியிருக்கிறார், 'சின்னக்குயில்' சித்ரா. மகள் நந்தனாவின் இழப்பில் இருந்து, இன்னும் அவர் மீளவில்லை. கடந்த ஏப்ரல் 14 அன்று, துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நந்தனா
மரணமடைந்த நிமிடத்திலிருந்து... இன்று வரை பொது நிகழ்ச்சிகள், பாட்டு என்று சித்ரா வெளிக்கிளம்பி வரவே இல்லை. ஸ்ருதியாகும் காற்று, இப்போது சுவாசமாக மட்டுமே அவரிடம் சென்று திரும்புகிறது. இசை உலகம், அவர் குரல் கேட்கக் காத்திருக்கிறது. 'அவள் விகடன்’ வழியாக சித்ராவுக்கு ஆறுதலும், அவர் குரலுக்கு அழைப்பும் வைக்கிறார்கள் இந்த இசை அன்பர்கள்.
வைரமுத்து
''பி.சுசீலாவுக்குப் பிறகு நான் பெரிதும் நேசிக்கும் பாடகி சித்ரா. நான் தேசிய விருது பெற்ற பாடலை பாடியவர் சித்ரா. அவர் தேசிய விருது பெற்ற பாடலை எழுதியவன் நான். சித்ரா பாடிய முதல் பாடல், 'பூஜைக்கேத்த பூவிது...' அதை எழுதியதும் நான்தான்.
ஏதும் அறியாத ஒரு குழந்தையாக சித்ராவை பார்த்த என்னால், தன் குழந்தையைப் பறி கொடுத்த சித்ராவை பார்க்க முடியவில்லை. எல்லா சோகங்களுக்கும் 'காலத்தை’ போன்ற சிறந்த மருந்து வேறில்லை. 'மறதி’ என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால்... மனித குலமே மரித்துப் போயிருக்கும். மறதி என்ற மருந்தை சித்ராவுக்காக நான் யாசிக்கிறேன்.
சோகத்தைப் போக்குகிற மிகப்பெரிய சாதனமே கலைதான், இசைதான்... அந்த இசையென்னும் மகா சமுத்திரத்தில் மீண்டும் கலந்துவிட்டால்... சித்ராவின் கண்ணீர் துளி காணாமல் போகும். மீண்டும் பாட வா சின்னக் குயிலே... உனக்காக எங்கள் 'தமிழ்’ காத்திருக்கிறது!'’
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
''அன்று சித்ராவையோ, அவருடைய கண வரையோ... நேரில் சந்திக்க அல்லது போனில் பேசக்கூட திராணியற்றவனாக இருந்தேன். அதேபோல, இப்போதும் சித்ராவின் மௌனம் கலைக்கும்படி அவரை அழைக்க, எனக்குத் தைரியம் இல்லை. அவர் மீண்டு வரும்வரை, நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்றாலும், ரணப்பட்ட மனதுக்கு... நல்ல மருந்து இசை என்று நம்புகிறேன். இசை மட்டுமல்ல... அவர் வாழ்வில் சந்தோஷமும் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.''
'லஷ்மன் ஸ்ருதி’ லஷ்மன்

''ஈடு செய்ய முடியாத இழப்பில் இருக்கும் தோழியை, என்ன சொல்லி ஆற்ற..? இருந்தாலும், வீட்டுக்குள் பூட்டிக் கிடக்கும் உங்களிடம், உங்கள் குரலைக் கேட்பதற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் குரல் எங்களுக்குத் தரப்போவது இசை மட்டுமில்லை... 'சித்ரா திரும்பிவிட்டார்!’ என்கிற ஆறுதலையும்தான். ஆம்... உங்கள் துயரை தங்களது துயரமாக எண்ணி வருந்திய எங்களை எல்லாம் ஆறுதல்படுத்த வாருங்கள் தோழியே!''
மாணிக்க விநாயகம்
''துன்பங்களும், மீளலுமாகத்தான் இங்கு நகர்ந்துகொண்டு இருக்கிறது வாழ்க்கை பலருக்கு. நீயும் வா மீண்டு. என் பேரப் பிள்ளைகளில் உன் மகளை நான் பார்க்கிறேன். நீயும் வெளியே வந்து பார்... பார்க்கும் குழந்தைகளின் சிரிப்பில் எல்லாம் நந்தனா இருப்பாள். சுசீலா, ஜானகிக்கு அடுத்து... என்றில்லாமல் அதே வரிசையில்தான் இருக்கிறாய் நீயும். உன் குரல் எனும் வரத்தை, வளத்தை மீண்டும் இசைக்கு அர்ப்பணி. உன்னையே நீ புதுப்பித்துக் கொள்ள, இசை வழி இறங்கு. வாம்மா.''
தேவா
''இதுவும் கடந்து போகும் என்பதைத் தவிர, என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த அண்ணனுக்கு. உன்னை இந்தத் துயரில் இருந்து மீட்க, நான் வழிபடும் அன்னை ஆதிபராசக்தியிடம் வேண்டுகிறேன் உயிர் கரைத்து. 'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’. உனக்கு அமைதி வேண்டும். அம்மாவின் முகம் பார்த்துக் கேட்கும் குழந்தையெனக் கேட்கிறோம்... இசைக் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் சித்ராவின் தேன்குரல் தாலாட்டு வேண்டும்.''
எம்.எஸ்.விஸ்வநாதன்
''எனக்கு அப்பா ஸ்தானத்தைக் கொடுக்க நீ என்றும் தவறியதில்லை. என் வயிற்றில் நீ பிறக்கவில்லை என்றாலும், நீயும் என் மகளே. உன் நலனுக்காகப் பிரார்த்திக்கும் அப்பனாக மட்டுமில்லை, உன் குரல் கேட்கக் காத்திருக்கும் ரசிகர்களுள் ஒருவனாகவும் இருக்கிறேன் நான். எங்கள் சித்ரா மீண்டும் எங்களுக்கு வேண்டுமம்மா!'

No comments:

Post a Comment